வதந்தியால் ஒதுக்கப்பட்ட கிராமம் | பள்ளியில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சிண்டகொல்லு என்ற கிராமத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியதாக அக்கிராம மக்களை பிற கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளை பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை, பால் விநியோகம் செய்வதில்லை, தண்ணீர் வசதி இன்றியும் தவித்து வந்துள்ளனர் மக்கள். இவையனைத்திற்கும் காரணம் ஓர் வதந்தி.

ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சில வாரங்களுக்கு முன்பு 45 வயதான நமசார்யா  என்பவரும், அதற்கு முன்பாக 32 வயதான மாரியம்மா என்பவரும் இறந்து உள்ளனர். இவ்விருவரின் மரணங்களால் சிண்டகொல்லு கிராமமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ சோதனையில் இரு மரணமும் பன்றிக் காய்ச்சலால் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

பரவிய வதந்தியால் அக்கிராமத்தில் இருந்து பன்றிக் காய்ச்சல் எங்கே நமக்கும் பரவி விடும் என அஞ்சி சிண்டகொல்லு கிராமத்துடன் இருந்த தொடர்பினைப் பிற கிராம மக்கள் துண்டித்தனர். சிண்டகொல்லு கிராமத்திற்கு யாரும் செல்வதில்லை, அங்கிருந்து வருபவர்களையும் அனுமதிக்காமல் இருந்து உள்ளனர்.

இதன் விளைவால் சிண்டகொல்லு கிராம மக்கள் பால், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் தவித்து உள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளை பேருந்தில் ஏற்றுவதில்லை. தொழில் முறையாகவும் ஒதுக்கி வைத்துள்ளனர். பள்ளியின் தலைமையாசிரியர் அக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு விடுப்பு வழங்கி உள்ளார்.

டிசம்பர் 5-ம் தேதி நமசார்யா இறந்த பிறகு வதந்தி வேகமாக பரவி சமூக ஒடுக்கு முறை தலைத் தூக்கியது. அவரின் இறப்பிற்கு முன்பு குண்டூர் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று பின் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது இறந்துள்ளார். அவரின் இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஒரு கிராமமே வதந்தியால் தவிப்பது பற்றி அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் லட்சமிகாந்தம் உடனடியாக கிராமத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி, முதற்கட்டமாக மருத்துவ முகாம்களை அமைத்து அங்குள்ள மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்துள்ளனர். அதில், புதிதாக யாருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இல்லை என அறிவிக்கப்பட்டது.

சிண்டகொல்லு கிராமத்தைச் சுற்றி உள்ள கிராமங்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

வதந்திகள் கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அதன் விளைவானது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிய மறுகின்றனர். குழந்தைக் கடத்தல் கும்பல் என பரவிய வதந்தியால் அப்பாவி மக்களின் உயிர் பலியாகியது போன்று பன்றிக் காய்ச்சல் வதந்தியால் ஒரு கிராமத்தையே ஒதுக்கி வைத்துள்ளனர்.

“ படிப்பவர்கள் ஏன் என கேள்வி எழுப்பி இருந்தாலே வதந்தி எனும் ஆபத்து தடமின்றி மறைந்திருக்கும் “

 

No School For Kids, No Milk In Village Over Rumours Of 2 Swine Flu Deaths

Andhra Pradesh village ostracised after news spreads of two  swine flu deaths

Please complete the required fields.
Back to top button