
சமீப காலத்தில் கௌரவ டாக்டர் பட்டங்கள் குறித்த செய்திகள் அதிகரித்துள்ளது. நடிகர் வடிவேலுவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம், யூடியூபர் கோபி மற்றும் சுதாகருக்கு வழங்கப்பட்ட விருது குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. அதற்கு முன்னதாக இசையமைப்பாளர் தேவா, டி.இமான், நடிகர் பார்த்திபன் போன்ற பல்வேறு பிரபலங்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தேடியதில், இவர்கள் அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது ஒரே நிறுவனம் எனத் தெரிந்தது. ‘சர்வதேச ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்’ (International Anti-Corruption and Human Rights Council) என்பது அந்நிறுவனத்தின் பெயராகும். இது ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் என்ற வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொண்டு நிறுவனம் எப்படி டாக்டர் பட்டம் அளிக்க முடியும்? என்ற கேள்வி முதலில் எழுந்தது.
இந்த அமைப்பு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் நிறுவன சட்டம் 2013ன் படி 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது பதிவு குறித்த விவரத்தில் தங்களது நிறுவனத்திற்கு நிதி எப்படித் திரட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ள முறைதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதின் மூலம் நிதி திரட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கௌரவ டாக்டர் பட்டம் என்பது ஒருவர் தனது துறையில் சிறந்து விளங்கினால் பல்கலைக் கழகத்தின் மூலம் அளிக்கப்படுவதாகும். அதே போல் தொண்டு நிறுவனம் என்பது பணப் பலன்களை எதிர் பார்க்காமல் உதவி செய்வது. ஆனால், இந்த இரண்டு விதிகளையும் இந்த தொண்டு நிறுவனம் பின்பற்றவில்லை.
மனித உரிமைகள் ஆணையம் பெயரை யார் பயன்படுத்தலாம் :
மனித உரிமைகள் என்ற வார்த்தையை அரசு சாரா தொண்டு நிறுவனம் தனது பெயரில் பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை 2011ம் ஆண்டு கூறியுள்ளது.
மேலும், மனித உரிமைகள் என்ற பெயரைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021ம் ஆண்டு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் படி பதிவு செய்யப்படும் தனியார் அமைப்புகள் தங்களின் பெயரில் “மனித உரிமைகள்” (Human Rights) என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்த அமைப்பு தனது பெயரில் ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த என்.ஜி.ஓ-வின் இயக்குநர் ஹரிஷை யூடர்னிலிருந்து தொடர்பு கொண்டு கடந்த பிப்ரவரி 28ம் தேதி பேசினோம். எதன் அடிப்படையில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறது? அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டம் வழங்கப்பட்டதா? மற்றும் அவரது நிறுவன பெயரில் உள்ள மனித உரிமைகள் என்ற வார்த்தை பயன்பாடு, அந்நிறுவன நிகழ்ச்சிகளில் நிதி ஆயோக் இலச்சினை பயன்படுத்தியது போன்ற கேள்விகளை எழுப்பினோம்.

அவை அனைத்திற்கும் தன்னிடம் தகுந்த அரசு உத்தரவுகள் இருப்பதாகத் தெரிவித்தார். டாக்டர் பட்டம் தங்களது நிறுவனத்தின் பெயரில் தான் கொடுக்கப்பட்டது. சான்றிதழில் எந்தவொரு இடத்திலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கைப் பயன்படுத்தினோம். இதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறினார்.
அது தொடர்பான ஆவணங்களைப் பகிரச் சொல்லிக் கேட்ட போது தான் வெளியில் இருப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டார்.
வழக்கறிஞர் விளக்கம் :
ஹரிஷ் கூறியது குறித்து வழக்கறிஞர் அருள்தாஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். பல்கலைக்கழகம் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முடியும். என்.ஜி.ஓ. அளிக்க அதிகாரம் கிடையாது. அதே போல் அரசு இலச்சினையைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக விளக்கம் :
இதற்கிடையில் இன்று (மார்ச் 1) அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “முன்னாள் நீதிபதி வள்ளிநாயகத்தின் கடிதத்தின் அடிப்படையிலேயே அண்ணா பல்கலைக் கழகத்தின் அரங்கு அளிக்கப்பட்டது. அவரது கடிதம் போலியாக இருக்கக் கூடும் என்று இப்போது சந்தேகம் எழுகிறது. பல்கலைக் கழகம் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முடியும். இது தொடர்பாகச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். நீதிபதி வள்ளிநாயகமும் இதில் ஏமாற்றப் பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தான் எந்த கடிதமும் அளிக்க வில்லை என ‘நியூஸ் 18’ தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதே செய்தியில் இவ்வமைப்பின் இயக்குநர் ஹரிஷ் “தங்களது நிறுவனம் பதிவு செய்த சட்ட திட்டத்தின் படியே கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். அந்த சட்ட திட்டம் என்பது பணத்தைப் பெற்றுக் கொண்டு டாக்டர் பட்டம் கொடுப்பதேயாகும்.
இவ்வமைப்பு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இது வரை பல முறை, திரைப் பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை பலருக்கு இவர்களது போலி டாக்டர் பட்டத்தை அளித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் அமைச்சகத்தில் பதிவு செய்து விட்டு, தான் அரசின் ஒரு அங்கம் என்பதுபோல் தவறான தோற்றத்தினை இவ்வமைப்பு உருவாக்கியுள்ளது. அதன் மூலம் பலரையும் இவ்வமைப்பு ஏமாற்றி வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
Link :
International Anti-Corruption and Human Rights Council
HC bans usage of word ‘human rights’ in name of organisations
மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் பயன்படுத்த கூடாது.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு
International Anti-Corruption and Human Rights Council
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.