This article is from Feb 25, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் 4% மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள்-ஆர்டிஐ தகவல் !

நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இது பெரும் விவாதமாகி எதிர்ப்பையும் சந்தித்தது. இதையடுத்து, தமிழக அரசு ஆனது மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழத்தில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் விவரங்கள் தொடர்பாக பெறப்பட்ட ஆர்.டி.ஐ தகவலின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 4% பேர் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் படிப்பது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள CEG, ACTECH, MIT, SAP உள்ளிட்ட கல்லூரிகளில் 2018-19ம் ஆண்டு நடைபெற்ற சேர்க்கையில் மொத்தம் உள்ள 3040 மாணவர்களில் 148 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள். அதேபோல், 2017-18ம் ஆண்டு சேர்க்கையில் மொத்தம் உள்ள 3004 மாணவர்களில் 144 மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் குறித்து 2020 நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுவிற்கு அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் உள்ள 4 கல்லூரிகளின் தரவுகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஆர்டிஐ தகவலை பெற்ற இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த திரு.சங்கர் கூறுகையில், RTI தகவலின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4% மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையை போக்க, மருத்துவம் படிக்க 7.5% உள்ஒதுக்கீடு அளித்தது போன்று, மற்ற படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அல்லது அரசு வேலைவாய்ப்பில் உள்ளது போல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை என்ற சட்டம் கொண்டு வந்தால் பல ஏழை மாணவர்கள் பயன்பெறுவர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமாரிடம் பேசியபோது, ” வெறும் 4% மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பது ஒரு பரிதாபமான நிலையை உணர்த்துகிறது. அரசு பள்ளிகளின் வளாகம், சுற்றுச்சூழலே படிப்பவர்களின் தன்னம்பிக்கையை குழைத்து விடுகிறது. மருத்துவ படிப்பு போன்று பிற படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தொடங்கி, படிக்கும் சுற்றுச்சூழல், ஆசிரியரின் திறன், பாடப் புத்தகத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடியும். ” என்று கூறினார்.

இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களிடம் பேசிய போது, ” தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் இங்கு ஒரே விதமான சூழலில் கல்வி பயிலவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், சவால்களையும் போக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு என இட ஒதுக்கீடு கொடுப்பது இதற்கு சரியான தீர்வாக அமையாது. இதற்கான ஒரே தீர்வு Common school system தான். ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்தும் என்னென்ன என்று ஒரு வரைமுறை செய்து அதை அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளிலேயே கற்றல் செயல்பாடு அதிகமாக உள்ளது. எனவே கோத்தாரிக் கல்விக் குழு பரிந்துரைபடி இந்த common school system-யை நடைமுறை படுத்தினாலே இதற்கு ஒரு தீர்வு கண்டுவிடலாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

Please complete the required fields.




Back to top button
loader