69% இடஒதுக்கீடு வழங்க மறுப்பு, அண்ணா பல்கலை. 2 எம்டெக் சேர்க்கையே நிறுத்தம்!

எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயோலஜி என்ற 2 முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்தாண்டு மாணவர் சோ்க்கை இல்லை என ஜனவரி 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் (DBT) நடத்தப்பட்டு வரும் இந்த இரண்டு முதுநிலை படிப்புகளுக்கு 49.5 சதவீதம் மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிர்பந்தித்துள்ளது. தமிழக அரசோ 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கும் இந்தாண்டு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் முடிவுக்கு வந்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோ டெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயோலஜி படிப்புக்கு 2020-2021 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 2020 அக்-ல் வெளியிடப்பட்டது. டான்செட் மற்றும் மத்திய அரசின் கேட் மற்றும் கேட்- பி நுழைவு தேர்வுகளில் அகில இந்திய ரேங்க் பெற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். ரேங்க் பட்டியலில் முதல் 30 இடங்களுக்கும் மேல் மதுரை, சென்னை, சேலத்தை சேர்ந்த மாணவர் உள்ளனர். இதுவரை இவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட அகில இந்திய அளவிலான தோ்வில் (GAT-B) கலந்துக் கொண்டு 240 மதிப்பெண்ணுக்கு 182.5 மதிப்பெண் எடுத்துள்ளேன். 2 முதுகலை பட்டப்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயோலஜி ஆகிய முதுநிலை படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 45 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்களுக்கு மத்திய அரசு தரப்பில் 12,000 முதல் 12,500 ரூபாய் வீதம் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. ஆசிரியருக்கான ஊதியமும் தமிழக அரசு வழங்குகிறது. இவ்விரு படிப்புகளின் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்து செய்யுமாறும், மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடுமாறும் கோரி உள்ளார். இவ்வழக்கு பிப்.2 விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் 69% இடஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியுமா என்று TOI தரப்பில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்கப்பட்டபோது, ” அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பல்கலைக்கழகம் ஒரு கல்வியாண்டின் பாதியில் இதை அதிகரிக்க அனுமதி வழங்காது என்றும், போதுமான ஆசிரிய உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என்றும் ” கூறியதாக வெளியாகி இருக்கிறது.
எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பிப்.2 உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதை தொடர்ந்து மனுதாரருக்காக ஆஜரான வக்கீல் சரவணன் அண்ணாதுரை, பிப்ரவரி 1 தேதியிட்ட சுற்றறிக்கையில் யுஜிசி இரண்டு மேல் படிப்புகளை இந்த ஆண்டு நிறுத்துவதாக தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும், பாடத்திட்டத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கும் பதிலாக, பல்கலைக்கழகம் ஒரு நியாயமற்ற நடவடிக்கையை மேற்கொண்டது என்று கூறினார்.
இது தொடர்பான மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பி.புகழேந்தி, இரண்டு மேல் படிப்புகளைத் தொடர உள்ள மாணவர்களுக்கான வாய்ப்பை இழக்க முடியாது, ஆனால் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் நிறைவேற்றுவதற்கு முன்னர் சேர்க்கை கைவிடுவதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சரியான காரணங்கள் உள்ளதா என்பதை அறிய விரும்புவதாக நீதிமன்றம் கூறியது, நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு எழுத்து விளக்கமளிக்க உத்தரவிட்டது.
69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்கலாமா என்ற சர்ச்சையைத் தொடர்ந்து 2020-21 ஆம் ஆண்டுக்கான எம் டெக் (பயோடெக்) மற்றும் எம் டெக் (கம்ப்யூட்டேஷனல் பயாலஜி) படிப்புகளை அகற்றுவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து மனு மீது புதன்கிழமைக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அறிவித்தபோது தமிழகத்தின் 69% இட இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்று பலர் கூறி இருந்தனர். யூடர்ன் வாசகர்கள் பலரும் கூட இது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் இப்பொழுது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போதே அதை நிறைவேற்ற முடியவில்லை. 69% இடஒதுக்கீட்டின் நிலை என்ன என்ற கேள்வியை மக்களிடமே விட்டு விடுகிறோம்.
Links :
Anna University loses 2 M Tech courses in Tamil Nadu’s quota war with centre
Anna varsity suspends two PG programmes
Anna varsity student moves plea over scrapping of 2 courses
http://www.biotechannauniv.com/AnnouncePGJan2021.pdf