This article is from Oct 17, 2020

சிறப்பு அந்தஸ்து பெற்றால் அண்ணா பல்கலைக்கழகம் என்ன ஆகும் ?

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழத்திற்கு ” Institutes of Eminence ” எனும் சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பான பிரச்சனை சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கடந்த ஜூன் 2-ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதத்தால், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக விவாதமாகியது. துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடு குறித்தும், அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்றால் என்னவாகும் என யூடர்ன் வெளியிட்ட வீடியோவின் ஆதாரத் தொகுப்பை இங்கு காணலாம்.

2018-ல் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அதன்பின்னர், சூரப்பாவிற்கும் தமிழக அரசிற்கும் உரசல்கள் இருந்து வந்தன. கோவிட்-19 பாதிப்பு காரணமாக கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபோது, அதற்கு எதிராக சூரப்பா ” இது சாத்தியமில்லை. இதை AICTE அனுமதிக்காது ” எனக் கூறி இருந்தார். உயர்மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் கூட AICTE ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது என கூறப்பட்டது.

1978-ம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புக்களையும், ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலைக்கழத்திற்கு ” Institutes of Eminence ” எனும் சிறப்பு அந்தஸ்து பெற்றால் 1000 கோடி நிதியுதவி கிடைக்கும். இதில், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதியை மாநில அரசும், மீதியை மத்திய அரசும் வழங்கும் என்கிற விதியுள்ளது. இந்த விதி தமிழக அரசிற்கு ஏற்புடையதாக இல்லை. அப்போது, துணைவேந்தர் சூரப்பா, ஆண்டிற்கு ரூ.314 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,570 கோடி நிதியை அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ஆதாரங்களால் திரட்ட முடியும் எனக் கூறி இருந்தார்.  இந்த நிதியை எப்படி திரட்டுவீர்கள் என தமிழக அரசு தரப்பில் இருந்து சூரப்பாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
ஒருவேளை ரூ.500 கோடியை மாநில அரசு அளித்தாலும் பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிறகு தன்னிச்சையான அமைப்பாக செயல்படும். முதலில் அண்ணா பல்கலைக்கழகதிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி விண்ணப்பித்து, இதற்கென ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்த தமிழக அரசு தற்போது பின்வாங்கி உள்ளது.
தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டை இங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை, அதைப்பற்றி விளக்கம் கேட்டால் விளக்கம் கொடுக்கவில்லை எனக் கூறுகிறார்.
ஆனால், சூரப்பா யூனியன் அரசிடம் இருந்து அதற்கான கடிதத்தைப் பெற்றதாகக் கூறுகிறார். பதில் அளிக்கும் வகையில் வரும் கடிதங்கள் யாவும் அரசு ஆணையாக எடுத்துக் கொள்ள முடியாது அல்லவா.
சிறப்பு அந்தஸ்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயங்களில் ஒன்று, இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக ரீதியாகவும், பாடத்திட்ட ரீதியாகவும் கூடுதலான தன்னாட்சி வழங்கப்படும்.
அடுத்து, 1000 கோடிக்கு பிறகு நிதி அளிக்கப்படாது. அவர்களுக்கான நிதியை அவர்களே திரட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்பதிலும் தெளிவு இல்லை. நிதிசார்ந்தும் தன்னிச்சையாகவே விடப்படுகிறார்கள்.
இந்த கல்வி நிலையங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட முடியும். 25% அயல்நாட்டில் இருந்து பேராசிரியர்களை நியமிக்கலாம், 30% அளவிற்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், நிதிசார்ந்தும் தன்னாட்சி உடன் செயல்படுவதால் நிதிகளை சமாளிக்க கல்வி நிறுவனத்தின் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 69% இடஒதுக்கீடு உண்டா எனப் பார்த்தால் ” நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு (50%) உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு முறை செயல்படுத்துவது குறித்து தெளிவான தகவல் அளிக்கப்படாத நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 9-வது அட்டவணைப்படி தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற பேச்சும் எழுகிறது. ஆகையால், அதுகுறித்த உண்மையான விளக்கத்தை பெற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நீ.இரா.ப.அய்யனார் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர் கூறுகையில், ” மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், கல்வி கட்டண வரையறை போன்ற கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் நிதி நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதால் மாநில அரசு பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற சட்டத்தின் படி தான் இடஒதுக்கீடு இருக்கும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு 9-வது அட்டவணையில் சேர்க்க பட்டிருந்தாலும், முழு தன்னாட்சி அதிகாரம் மாணவர் சேர்க்கையில் வழங்கப்படுவதால் நாளை 69% இடஒதுக்கீட்டை மீறும் நிலை ஏற்படலாம். மேலும், பிற மாநில மாணவர்கள் சேர்க்கைக்கு எந்த உச்ச வரம்பும் குறிப்பிடப்படாததால், தற்போதுள்ள இடங்களையே தமிழக மாணவர்கள் இழக்க நேரிடும். பின் எவ்வாறு 69% இடஒதுக்கீட்டை உறுதி படுத்தமுடியும்?

நீட் தேர்வில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர் (OBC) இடஒதுக்கீடு மத்திய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. மத்திய அரசு பொய்யான வாக்குறுதியை நமக்கு அளித்துவிட்டு நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வாதாடி இரட்டை வேடம் போட்டதை நாம் கண்டோம்.

இவ்வாறான மோசமான அனுபவங்களால் தான் மாநில அரசு எழுத்து வடிவில் தெளிவாக தமிழ் நாடு அரசின் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படாது என்ற உத்திரவாதத்தை அளிக்க சொல்லி கேட்டது. ஆனால் அவ்வாறான எந்தவொரு உத்திரவாதத்தையும் அளிக்காத மத்திய அரசை எவ்வாறு நம்ப முடியும்? ” என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களில் ” Shall ” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுவாக சட்டங்களில் பயன்படுத்தப்படும் “Shall” என்ற வார்த்தையை நீதிபதிகள் வழக்கின் தன்மையை கணக்கில் கொண்டு ஒன்றை செயல்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவிற்கு வரலாம். அதாவது ” Shall ” என்றால் கட்டாயம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது “shall implement the reservation policy” என்பது நீதிபதியின் புரிதலுக்கு உட்பட்டது. கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியை இந்த வார்த்தை அளிக்கவில்லை. உதாரணத்திற்கு- https://indiankanoon.org/doc/849736/

” Shall ” வார்த்தை அர்த்தம் குறித்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியை இந்த வார்த்தை அளிக்கவில்லை என்கிற மேற்கூறிய தகவலையே அவரும் தெரிவித்து இருந்தார்.
இதற்கு முன்பாக, ” Institutes of Eminence” எனும் சிறப்பு அந்தஸ்து பெறும் தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஆரம்பிக்கப்படாத ” ஜியோ யூனிவர்சிட்டி ” இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Links : 
Please complete the required fields.




Back to top button
loader