முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசிய உரைக்கு, முத்துராமலிங்கத் தேவர் மன்னிப்பு கேட்க வைத்ததாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவியில் இருந்து நீக்கக்கோரி செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் பாஜக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, ” 1956ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தமிழ் மாநாட்டில் மணிமேகலை என்ற சிறுமி மிக அருமையாக தமிழ் சங்க இலக்கிய பாடலை பாடினார். உடனே மைக்கை எடுத்த அண்ணாதுரை, இந்த பெண் அழகாக பாடினார். இதுவே கற்காலமாக இருந்து இருந்தால் என்ன சொல்லிருப்பார்கள் தெரியுமா, உமையவளின் பாலை குடித்துதான் இந்த மணிமேகலை பாட்டு பாடினார் எனக் கட்டுக்கதையை கட்டி விட்டு இருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்து விட்டது. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டார்கள் என அண்ணா பேசுகிறார்.
அக்கூட்டத்தில் 6ம் நாள் பேச வேண்டிய முத்துராமலிங்கத் தேவர், 5ம் நாளே மேடைக்கு வந்து பேசுகையில், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், யார் இங்கு வந்து உமையவள் பற்றி தவறாக பேசியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்து இருக்கிறது, இன்னொரு முறை கடவுள் இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகின்றவர்களை பற்றி தவறாக பேசினார்கள் என்றால், மீனாட்சி அம்மனுக்கு இரத்தத்தில் அபிஷேகம் நடத்தப்படும் என்று சொன்ன பிறகு, பி.டி.ராஜன், அண்ணாதுரை அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி வந்தார்கள் ” எனப் பேசி இருந்தார்.
அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன.
இதற்கிடையில், அதிமுகவினரின் கண்டனங்களுக்கு பதில் அளித்த அண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ல் ஜூன் 4ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசியதை கூறினேன். அண்ணாமலை பேசியது தவறு என்கிறார்கள். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் ஜூன் 2,3,4 ஆகிய தேதிகளில் வெளியான செய்திகளில் பி.டி.ராஜன், அண்ணாதுரை, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன” எனக் கூறி இருந்தார்.
அண்ணா மதுரையில் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக பாஜகவினர் பரப்புவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக, 2019ல் பாஜகவைச் சேர்ந்த எஸ்ஜி.சூர்யா இதேபோன்று, அண்ணா மன்னிப்புக் கேட்டு மதுரையில் இருந்து தப்பித்து வந்ததாக ஓர் தகவலைப் பதிவிட்டு இருக்கிறார்.
Lol. So Annadurai had to run away from Muthuramalinga Thevar to hide at some party man’s house & realising he can’t escape sought mercy & left Madurai apologetically? DMK & DMK Leaders’ history is so funny! DMK Twitter hacks are the same ones who take lessons on machoism! 😂😂😂 pic.twitter.com/O8ebLoHQw7
— Dr.SG Suryah (@SuryahSG) April 9, 2019
உண்மை என்ன ?
இது தொடர்பாக, பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்களிடம் யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், அண்ணாமலை பேசியதில், 1956ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அண்ணாதுரை பேசியது பற்றிய ஒரு பகுதி மட்டுமே உண்மை. மற்றவை தவறான தகவல். 10 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய ‘வீரத்திருமகன் : நேதாஜி- பசும்பொன் தேவர் ஒப்பீடு’ எனும் புத்தகத்தில் இதுகுறித்து விரிவாக எழுதி உள்ளேன்.
மதுரை தமிழ் சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பேச அண்ணாவும் அழைக்கப்பட்ட போது அவ்வாறு பேசினார். தேவர் பேசுகையில், தெய்வ நிந்தனை பேச்சு ஆலய வளாகத்திற்குள் வேண்டாம் என்றதற்கு, பேச்சு சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன் என பி.டி.ராஜன் கூறினார். அப்படியென்றால் உங்கள் கூட்டத்தை தமுக்கம் மைதானத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனத் தேவர் கூறினார். அதன் பிறகு 2ம் நாளில் இருந்து அனைத்து கூட்டமும் தமுக்கம் மைதானத்தில் தான் நடந்தது. அந்த கூட்டங்களிலும் அண்ணா பேசி உள்ளார். அவர் மன்னிப்பு கேட்கவில்லை ” எனக் கூறினார்.
இதேபோல், இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் வி.எஸ்.நவமணி அளித்த பேட்டியில், மதுரையில் அண்ணாவின் பேச்சை அறிந்து 5ம் நாள் நிகழ்ச்சிக்கு வந்து தேவர் பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்ணாவின் கருத்தில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது. இனிமேல் இந்த விழா கோவிலுக்குள் நடக்கக்கூடாது எனப் பேசிவிட்டுச் சென்றார். அதன்பின்னர் நடக்கவிருந்த நிகழ்சிகள் அங்கு நடைபெறவில்லை. ஆனால், அண்ணாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேவர் சொல்லவில்லை எனக் கூறி இருக்கிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒர் ஆய்வுக் கண்ணோட்டம்’ எனும் புத்தகத்தில், ” கூட்டத்தில் முதல்நாள் நடந்த சம்பவங்களால் தேவர் மனம் வேதனையுற்று வாடிய முகத்துடன் வந்தார். பொன்விழா ஏற்பாட்டுத் தலைவர் பி.டி. இராசன் அவர்களிடம் சென்று, ‘ஆலயத்தில் முதல் நாள் திரு. அண்ணாதுரை பேசிய தெய்வ நிந்தனைப் பேச்சு நல்லதல்ல. அம்மாதிரி நடந்தமைக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் இனிமேல் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இல்லையானால் விழாவை கோயிலில் நடத்த வேண்டாம் ” எனக் கூறியதாகவே இடம்பெற்று இருக்கிறது.
அண்ணா-தேவர் இடையேயான சம்பவத்திற்கு அண்ணாமலை மேற்கோள்காட்டிய தி ஹிந்து நாளிதழ், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாக் கூட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்றும், 1956 மே 31 முதல் ஜூன் 4 வரை ‘தி ஹிந்து’ வெளியிட்டது பற்றியும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அண்ணாமலை கூறியது போல் முத்துராமலிங்கத் தேவர் மேடைக்கு வந்து பேசியதாக உள்ளது. ஆனால் திமுக நிறுவனர் அண்ணாதுரை வருத்தம் அல்லது மன்னிப்பு தெரிவித்ததாக ஜூன் 4, 1956 அன்று வெளியிடப்பட்ட செய்தியிலும், அதன் பின்பு வெளியான செய்திகளிலும் எந்தக் குறிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் படிக்க : கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பதிவு.
பாஜகவினர் முத்துராமலிங்கத் தேவரை கையில் எடுப்பது இது முதல்முறை அல்ல. மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வால்கரை முத்துராமலிங்கத் தேவர் வணங்குவதாக பொய்யானப் படத்தை பாஜகவினர் பரப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு
முடிவு :
1956ல் மதுரை நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை வைத்து பேரறிஞர் அண்ணா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என முத்துராமலிங்கத் தேவர் கூறியதாகவும், அதையடுத்து அண்ணா மன்னிப்பு கேட்டு மதுரையில் இருந்து சென்றதாக அண்ணாமலை கூறியது பொய் என்றும், இந்த பொய்யை பாஜகவினர் பல ஆண்டுகளாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
Links :
What really happened in the 1956 Madurai event, involving C.N. Annadurai and Muthuramalinga Thevar
thevar-not-asked-anna-to-apologize-in-madurai-ex-forward-bloc-vs-navamani