அங்கப்பா வாக்குச்சாவடியில் 830 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை சொன்ன பொய்!

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அங்கப்பா வாக்குச்சாவடியில் மட்டும் 830 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறிய தகவல் தவறானது என்பதைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ததில் கண்டறிய முடிந்தது.  

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் நடைபெற்றது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற 102 தொகுதிகளில் தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளும் அடங்கும். 

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். வாக்குப்பதிவின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அங்கப்பா வாக்குச்சாவடியில் மட்டும் 830 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெப்பக்குளம் வாக்குச்சாவடியில் 200 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். 

அங்கப்பா வாக்குச்சாவடி: 

அண்ணாமலை குறிப்பிட்ட ‘அங்கப்பா அகாடமி (சிபிஎஸ்இ)’ என்ற வாக்குப்பதிவு மையம் கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது. அதில் மொத்தம் 8 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடி தொடர்பான வாக்காளர் பெயர் பட்டியல் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 8 வாக்குச்சாவடிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒட்டு மொத்தமாக 141 (77+ 64) வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 8 வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என 293 (146+145+2) புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அங்கப்பா அகாடமி (சிபிஎஸ்இ) வாக்குச்சாவடி மையம் குறித்து  அண்ணாமலை சொன்னது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது. 

அடுத்ததாகத் ’சாரதா இந்து ஆரம்பப்பள்ளி – தெப்பக்குளம்’ வாக்குச்சாவடி, கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது. இந்த வாக்குப் பதிவு மையத்தில் நான்கு வாக்குச்சாவடிகள் உள்ளன. 

அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்த்து மொத்தமாக 62 (40+22) பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 123 (60+63) புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தெப்பக்குளம் வாக்குச்சாவடியில் நீக்கப்பட்டவர் எண்ணிக்கை குறித்தும் அண்ணாமலை சொன்ன தகவல் தவறு என்பதைத் தேர்தல் ஆணையத்தின் தகவலிலிருந்து உறுதி செய்ய முடிகிறது. 

இதேபோல் மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வமும் அவரது தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்களை திமுக திட்டமிட்டு நீக்கியுள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகவே உள்ளது. 

வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான எண்ணிக்கை எப்போதும் போல் சாதாரண அளவிலேயே கூடவோ குறையவோ செய்துள்ளது. அண்ணாமலையோ வினோஜ் பி செல்வமோ கூறுவது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாகும். 

Source: 

Kavundampalayam 210Kavundampalayam 211 | Kavundampalayam 212 | Kavundampalayam 213Kavundampalayam 214 | Kavundampalayam 215 | Kavundampalayam 216 | Kavundampalayam 217 | kovai south 156 | kovai south 153 | kovai south 152 | kovai south 151

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader