NRC & CAB ஆதரவாளர்களுக்கு ஆதாரத்துடன் பதில் !

என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் கண்டன போராட்டங்கள் நிகழும் போது பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அவற்றை ஆதாரத்துடன் யூடர்ன் வெளியிட்டு இருந்தது.
அதேபோல், NRC மற்றும் CAB-க்கு ஆதரவாக திரு.மாரிதாஸ் மற்றும் ரங்கராஜ் பாண்டே சில தரவுகளுடன் வீடியோ வெளியிட்டு இருந்தனர். மாரிதாஸ் தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டு இருந்த தவறான தகவல்களை ஆதாரத்துடன் யூடர்ன் ஆசிரியர் விரிவாக பேசி இருந்தார். அதனை கட்டுரையாக கொடுக்கிறோம்.
பாகிஸ்தான் இந்து எண்ணிக்கை :
1951-ல் பாகிஸ்தான் நாட்டில் 3.4சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்பொழுது 1.6 சதவீதமாக குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார். இதேபோல், 23% ஆக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 3% ஆக குறைந்துள்ளது என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட சமயத்தில் மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் என இரு பகுதிகளாக இருந்தது. அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன்பிறகு ,1961-ம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , 1961-ல் 2.8 சதவீதமாக இருந்த முஸ்லீம் அல்லாதோர் மக்களின் எண்ணிக்கை 1998-ல் 3.7 சதவீதமாக உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஒருங்கிணைந்து இருந்த பொழுது எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 14.20% ஆக இருந்துள்ளது. ஆக, பாஜக கூறியது போல் 23% இருந்தது இல்லை. பங்களாதேஷ் நாட்டின் மக்கள் தொகையை மட்டும் வைத்து பார்த்தால், 23% சதவீதம் பேர் இருந்துள்ளனர். அந்த நாட்டில் முஸ்லீம் அல்லாதோர் எண்ணிக்கை 9.6 சதவீதமாக குறைந்து உள்ளது என்பது உண்மை.
இந்துக்களுக்கு எதிரான வன்முறை :
1971-ல் கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஸ்) ராணுவத்தால் நடத்தப்பட்ட இன அழிப்பு படுகொலை சம்பவத்தில் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அதில், பெரும்பாலும் இந்துக்களே. இந்த படுகொலை காரணமாக 9.5 மில்லியன் மக்கள் அகதியாக மாறின. இந்த படுகொலையால் இந்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மையே. அப்படி அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கூறுவதில் ஒருபோதும் தவறில்லை. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
இலங்கை தமிழர்கள் :
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஈழத் தமிழர்கள் இடம்பெறவில்லை. அவர்களும் இன அழிப்பு படுகொலையில் இருந்து தப்பித்து வந்தவர்கள். அதைக் குறித்து கேட்டால், அவர்கள் இலங்கைக்கு சென்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார் மரித்தாஸ். ஆனால், இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற தகவலை அளிக்கிறார்.
சவூதியில் சிரியா அகதிகள் :
சிரியாவில் நிகழும் போரினால் அகதியாக வரும் மக்களை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். ஆனால், அது தவறான தகவல். 2015 தகவலின் படி, 5 லட்சம் சிரிய அகதிகள் இருப்பதாக UNHCR தெரிவித்து உள்ளது.
2.3 பில்லியன் டாலர்கள் அளவிலான தொகையை குவைத், சவூதி, கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் அகதிகளுக்காக வழங்கியுள்ளன. இந்த தரவுகள் அனைத்தும் UNHCR தளத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ரோஹாங்கியா முஸ்லீம்கள் :
பல நாடுகளில் ரோஹாங்கியா முஸ்லீம் அகதிகளை வெளியேற்றுவதற்காக கூறப்பட்ட காரணங்கள் தவறு. அவர்களை முஸ்லீம் பிரிவாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள 40,000 பேர்களில் முகமது என்கிற ஒருவரை மட்டுமே பயங்கரவாத செயலில் தொடர்பு இருப்பதாக என்ஐஏ கைது செய்து இருந்தது. ஆனால், அனைத்து ரோஹாங்கியா முஸ்லீம்களும் ஆபத்தானவர்கள் என என்ஐஏ எச்சரித்து அறிக்கை விடவில்லை.
மேலும் படிக்க : இந்தியாவில் சொகுசாக வாழும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதியா ?| உண்மை என்ன?
டெல்லியில் ரோஹாங்கியா முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தில் உடமைகளை இழந்தவர்களின் புகைப்படத்தை வைத்து ரோஹாங்கியா முஸ்லீம் அகதிகள் 3 மனைவி , 8 குழந்தைகள் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதாக முன்பு வெறுப்புணர்வு வதந்திகளை இந்திய அளவில் பரப்பி இருந்தனர்.
UNHCR மறுப்பு :
ஐரோப்பாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் அகதிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என UNHCR மறுத்து இருந்தது. அகதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாக பரவிய வதந்திகளை மறுத்து தவறு எனக் கூறுகின்றனர்.
அகதிகளுக்கான செலவு :
இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு ஆண்டிற்கு 650 கோடி செலவு செய்து வருவதாக கூறுகின்றார் மாரிதாஸ். ஆனால், அந்த தரவும் தவறானது. UNHCR தரவுகளின்படி, 2018-ம் ஆண்டில் இந்தியா செலவிட்ட தொகை 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்தியா மதிப்பில் 42 கோடியாகும்.
இந்திய குடிமக்களின் பதிவு (NRC) :
இந்திய குடியுரிமைபடி, ” 1950 ஜனவரி 26-ம் தேதி முதல் 1987 ஜூலை 01-ம் தேதி வரை இங்கு பிறந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் குடிமக்கள். அதற்கு பிறகு பிறந்தவர்கள் என்றால் அனைவரும் தங்கள் பெற்றோர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் “.
இந்திய குடிமக்களின் பதிவு கொண்டு வருவதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்துக்கள் மற்றும் பிற மத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமை வழங்குவதில் பிரச்சனை இல்லை, ஆனால் முஸ்லீமாக இருந்து ஆவணங்கள் இல்லையென்றால் இந்தியர் இல்லை எனச் சொல்வதற்கான அபாயம் உள்ளது.
திரு.மாரிதாஸ் தன்னுடைய வீடியோவில் கூறி இருந்த தவறான தகவல்களை விரிவாக ஆதாரத்துடன் விவரித்து இருக்கிறோம். நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை ஆதாரத்துடன் தொடர்ந்து வெளியிடுவோம்.
Proof links :
No, Pakistan’s non-Muslim population didn’t decline from 23% to 3.7% as BJP claims
Saudi Arabia says criticism of Syria refugee response ‘false and misleading’
http://reporting.unhcr.org/node/10314
rohingya-terror-suspect-reveals-al-qaeda-s-india-plan