காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்த பசு பாதுகாவலர்கள்.. ஆதாரம் இதோ !

படிக்காத மேதை, கல்விக் கண் திறந்தவர், கர்ம வீரர் என்றெல்லாம் தமிழ்நாடு மக்களால் அழைக்கப்படும் காமராஜரை பசு பாதுகாவலர்கள் டெல்லியில் கொலை செய்ய முயன்றனர். நல்வாய்ப்பாக அப்பெரும் கொலை முயற்சியிலிருந்து காமராஜர் தப்பித்தார். ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என பாஜக மற்றும் வலதுசாரிகள் வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எனவே அக்கலவர சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் யூடர்ன் கட்டுரையினை வெளியிடுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளை  இளைஞர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு, கட்சி பணியாற்ற வேண்டுமென, ‘கே பிளான்’ என்ற திட்டத்தினை காமராஜர் அறிமுகப்படுத்தினார். அதன்படி காமராஜரும் தான் வகித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி, இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராகக் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவ்வாறு அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போது 1966, நவம்பர் 2ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பசுவதைத் தடுப்பு எனக் கிளர்ச்சி செய்பவர்களை வன்மையாகக் கண்டித்துப் பேசியுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக நவம்பர் 7ம் தேதி இந்து மத நிர்வாண சாமியார்களுடன் இணைந்து பசு பாதுகாவலர்கள் பலர் பாராளுமன்ற சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் சாலையில் உள்ள பட்டேல் சிலைக்கு அருகில் பிரிந்து சென்று ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள காமராஜர் வீட்டினை சுற்றி வளைத்து, தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கலவரம் நடந்த தினத்தன்று மதியம் 2 மணி முதல் 3 குழுக்களாகப் பசுவதைக்கு எதிரானவர்கள் சுமார் 100 பேர் காங்கிரஸ் கட்சித் தலைவரின் (காமராஜர்) வீட்டினை நாலா பக்கமும் சூழ்ந்தனர். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 1966, நவம்பர் 8ம் தேதி. (பக் 1)

காமராஜர் உறங்கிக்கொண்டிருந்த அந்நேரத்தில் அவரது உதவியாளர் (சமையலர்) அம்பி மற்றும் பாதுகாவலர் நிரஞ்சன் என்பவர்கள் உடன் இருந்துள்ளனர். அந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு வீட்டிற்கு தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்’ என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி இன்றைய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 1967ம் ஆண்டு காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’ என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அக்கலவரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் டெல்லி நிருபர்கள் பலரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இந்த சம்பவத்தின் போது காமராஜருடன் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ரங்கராஜன் என்பவர் குமுதம் இதழில் (1-12-1966) எழுதிய கட்டுரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கட்டுரையின் சுருக்கம் : “காமராஜ் அவர்களுடன் பகலுணவு உண்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓய்வெடுக்கச் சென்றதும், என் மனைவிக்குப் போன் செய்தேன். அவள்தான் எனக்கு முதலில் செய்தி தெரிவித்தாள். பார்லிமெண்ட் வீதியில் ஏக ரகளையாமே. பி..அய். ஆபிஸ், ஆகாஷ் வாணி பவன் எல்லாவற்றிலுமே நெருப்பு வைத்து விட்டார்களாம், என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. 

காமராசர் கொலை முயற்சி சரித்திரம். (பக்.71)

ஓவென்று இரைச்சல் உடன் கூட்டம் உள்ளேவர முயல, காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லாலும், சேவகர் பகதூர்சிங்கும் அவர்களை எதிர்த்தனர். வெறிகொண்ட கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. கூட்டம் உள்ளே புகுந்துவிட்டது. 

கூட்டத்தைத் தனியாளாக நிரஞ்சன் எதிர்க்க, பகதூர்சிங் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் கற்களை வீச, பதிலுக்கு நிரஞ்சனும் கற்களை வீசினார். துப்பாக்கியில் தோட்டா தீர்ந்துவிட்டது. நிரஞ்சனுக்கும் நல்ல அடிபட்டுவிட்டது. பார்லிமென்ட் வீதியிலிருந்து ஓடி வந்த கூட்டம் இங்கே சேர்ந்து கொண்டது.

பகதூர்சிங் வேறு வழியின்றி முன் அறையில் புகுந்து தாழிட்டுக் கொண்டார். காமராஜ் அவர்களுக்கு நான் விஷயத்தைச் சொல்லி நிரஞ்சனுடன் உள் அறை ஒன்றில் தாழிட்டுக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமையலர் அம்பி என்ற வரதராஜன் மீது தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர் தனது உடல்நிலையைக் கூறியும், தலைவர் வீட்டில் இல்லை என்று சொல்லிக் கதறியுள்ளார். வீட்டின் பொருட்கள் எரிக்கப்பட்டதால் வந்த புகையை வித்தல்பாய் ஹவுஸில் இருந்தவர்கள் கவனித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு வந்து கலவரக் காரர்களை விரட்டியதாகவும் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் இதில் ஜனசங்கத்தினருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் தொடர்புள்ளதாக டெல்லி நிருபர்கள் பலர் கூறியுள்ளனர்.

1966ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் 50வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் ‘தி இந்து’ இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் காமராஜர் வீடு தாக்கப்பட்டபோது, நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார் என்றும், சுதந்திர இந்தியாவில் பாராளுமன்றத்தின் மீதான முதல் தாக்குதல் இதுவே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அனைத்திலும் காமராஜர் வீட்டின் மீது பசுவதைக்கு எதிரானவர்கள் தாக்குதல் நடத்திய போது அவர் வீட்டில் இருந்ததையும், அவர் உயிர் தப்பித்ததையும் உறுதி செய்கின்றன. ஆனால், வழக்கம்போல் வலதுசாரிகள் வரலாற்றினை திரிக்க முயற்சி செய்கின்றனர். 

Link:

The Indian Express – Nov 8, 1966

The very first attack on Parliament

காமராசர்_கொலை_முயற்சி_சரித்திரம்_கி_வீரமணி

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader