இந்தியாவில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் – இந்தியா ஹேட் லேப் ஆய்வறிக்கை !

பொதுவாக ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு தனிப்பட்ட குழுவையோ மதம், சாதி, மொழி, இனம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளப்படுத்தி, வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக, வேண்டுமென்றே அவர்களை மற்றவர்களிடமிருந்து வேற்றுமைப்படுத்துவதன் காரணமாகவே வெறுப்புணர்வுகள் உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நிலவும் வெறுப்புணர்வுகள் குறித்து India Hate Lab எனும் ஆய்வு நிறுவனம் “அறிக்கை 2023: இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்” என்ற தலைப்பில் பிப்ரவரி 26 அன்று தனது இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘India Hate Lab’ என்பது பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பைக் கொண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் செயல்படும் ஒரு ஆய்வு நிறுவனமாகும். இது இந்தியாவின் மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு பரப்பப்படும் வெறுப்பு பேச்சுகள், தவறான தகவல்கள் மற்றும் சதிக்கோட்பாடுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா ஹேட் லேப் (India Hate Lab) 2023 அறிக்கை என்ன கூறுகிறது ?

2023ல், இந்தியா ஹேட் லேப் (IHL) முஸ்லீம்களை குறிவைத்து பரப்பப்பட்ட 668 வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளது. இதில், 2023ன் முதல் பாதியில் மட்டும் 255 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த வெறுப்பு நிகழ்வுகள் 62% அதிகரித்து, 413 நிகழ்வுகளாக உயர்ந்ததுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

இதில், 498 (75%) நிகழ்வுகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், நாட்டின் தலைநகரான (NCT) டெல்லியிலும் நடைபெற்றுள்ளன. அதிக வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளைக் கொண்ட முதல் எட்டு மாநிலங்களில், 6 மாநிலங்கள் பாஜகவால் ஆட்சி செய்யப்படும் மாநிலங்களாகும். மற்ற இரண்டு மாநிலங்களும் 2023ல் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தி, பாஜக ஆட்சியையே பிடித்தன. இந்த எட்டு மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகமாக பரப்பப்பட்டுள்ளன.

வெறுப்பு பேச்சுகளில் 420 நிகழ்வுகள் முஸ்லீம்களுக்கு எதிரான சதி கோட்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், 239 நிகழ்வுகள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு, நேரடி அழைப்பை விடுப்பதாகவும் உள்ளன. குறிப்பாக 216 (32%) நிகழ்வுகளுக்கு காரணமாக, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் (RSS) கூட்டணியில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்பினரே இருந்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று பசு பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பான கௌ ​​ரக்ஷா தளமும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதில் முன்னணியில் உள்ளன.

மேலும் ஹமாஸ் இஸ்ரேல் போரின் போது மட்டும் இந்தியாவில், 41 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நடந்ததாக இந்த அறிக்கை கூறிகிறது. இது 2023ன் கடைசி மூன்று மாதங்களில் சுமார் 20% வெறுப்புப் பேச்சுக்கு காரணமாக இருந்துள்ளது. இதே போன்று முஸ்லீம் பெண்களுக்கு எதிராக மட்டும், கடந்த 2023ல் 28 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

இந்த தரவுகளின் படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும், சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு முஸ்லீம் விரோத வெறுப்புப்பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன மற்றும் ஒவ்வொரு நான்கு நிகழ்வுகளிலும், மூன்று நிகழ்வுகள் (அதாவது 75 சதவிகித நிகழ்வுகள்), பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக “லவ் ஜிஹாத்”, “நில ஜிஹாத்”, “ஹலால் ஜிஹாத்”, “மக்கள்தொகை ஜிஹாத்”, “UPSC ஜிஹாத்”, “மஸார் ஜிகாத்”, “பொருளாதார ஜிஹாத்”, “எச்சித்துப்பும் ஜிஹாத் (Spit Jihad), “உர ஜிகாத் (Fertilizer Jihad)” போன்ற சதிக் கோட்பாடுகளின் மூலம் இவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டுவதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

மாநிலங்கள் வாரியாக முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் :

புவியியல் ரீதியாக வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் இந்தியா முழுவதும் 18 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லி (NCT) என, மொத்தமாக 668 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பெரும்பான்மையான வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவிலேயே குவிந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களும், வட கிழக்கு மாநிலங்களும் பூஜ்ஜிய எண்ணிக்கையிலேயே வெறுப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தும் மாநிலங்களாக உள்ளதை பார்க்க முடிகிறது.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, சுமார் 118 நிகழ்வுகள் (18%) மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே நடந்துள்ளன, இது இந்தியாவின் மக்கள்தொகையில் 9.3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக 104 வெறுப்புப்பிரச்சார நிகழ்வுகளுடன் உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆபத்தான பேச்சுகளை வெளிப்படுத்தியவர்கள் :

முக்கியமாக 146 வெறுப்பூட்டும் பேச்சு நிகழ்வுகளுக்கு (22%) இந்தியாவின் ஐந்து பேச்சாளர்களே முக்கிய காரணம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி ராஜா சிங், அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் (ஏஎச்பி) தலைவர் பிரவின் தொகாடியா, தீவிர வலதுசாரி காஜல் ஷிங்காலா, சுதர்சன் நியூஸ் உரிமையாளர் சுரேஷ் செளஹான், இந்து மத தலைவர்கள் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, காளிசரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே ஆகியோரே முதல் எட்டு இடங்களை பிடித்துள்ளனர்.

ஆதாரங்கள்:

Hate Speech Events in India – India Hate Lab Report 2023

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader