ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை.. ஆன்டிபயாடிக்ஸ் பயனளிக்காமல் போவதேன் ?

பொதுவாக மனிதர்களுக்கு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகள் மூலமே பெரும்பாலான தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. எனவே உடலில் உள்ள இத்தகைய நுண்ணுயிரிகளை கொல்வதற்காகவும், நோய் தொற்றை குறைப்பதற்காகவும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எவ்வாறு சரியான மற்றும் தரமான அளவில் எடுத்துக்கொள்வது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பன பற்றிய புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே தவறாகப் பயன்படுத்தப்படும் இத்தைகைய ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், நுண்ணுயிர்களுக்கு எதிர்வினையாற்ற மறுத்து, Antimicrobial Resistance (AMR) என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மையை அடைந்து விடுகின்றன. இதன் மூலம் ஒருவர் ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எடுத்துக்கொண்டாலுமே, அந்த மருந்துகள் அவரது உடலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிப்பதில்லை.

எனவே உலக மக்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை (Antibiotics) எவ்வாறு முறையாக பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் (World Antimicrobial Awareness Week) நவம்பர் 18 முதல் நவம்பர் 24 வரை கொண்டாடப்படுகிறது.

ஆன்டிபயாடிக்ஸை பயன்படுத்துவதில் சீனா மற்றும் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா:

நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான தடுப்பு மீதான உலகளாவிய ஆராய்ச்சி (GRAM) திட்ட அமைப்பானது ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் தொடர்பான ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் உலகளவில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் பயன்பாட்டு விகிதமானது 46% வரை அதிகரித்துள்ளது.

அதிலும் தெற்காசியாவில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் நுகர்வு விகிதம் 116% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் கடந்த 1996-1997 -இல் 268 மில்லியன் டாலர்களாக இருந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளின் ஏற்றுமதி, கடந்த 2018-2019 -இல் 2.4 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிக்கும் அதே வேளையில், அதிகளவில் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்தும் நாடுகளில், சீனா மற்றும் அமெரிக்காவையே மிஞ்சி, இந்தியா முன்னிலையில் இருப்பதையும் அறிய முடிகிறது. மேலும் கடந்த 2000 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் ஆன்டிபயாடிக் பயன்பாடு இருமடங்கு அதிகரித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய தகவலாகும். இதன் மூலம் Antimicrobial Resistance (AMR) என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மை இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ளதையும் காண முடிகிறது.

இந்தியாவில் ஆன்டிபாயடிக்ஸுக்கு எதிராக உள்ள நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மையை (AMR) தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்:

இந்தியாவில், நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மையை (AMR) தடுக்க, முதன் முதலில் AMR கட்டுப்பாட்டுக்கான தேசிய பணிக்குழு கடந்த 2010-ல் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து AMR கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் கடந்த 2012-இல் தொடங்கப்பட்டு, மாநில மருத்துவக் கல்லூரியில் ஆய்வகங்களை நிறுவுவதன் மூலம் AMR கண்காணிப்பிற்கான வலையமைப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் கடந்த 2013-ல் AMR கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பு (AMRSN) தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மூலம் சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் AMR-இல் மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காக புதிய மருந்துகளை உருவாக்க பல முயற்சிகளை எடுக்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக கடந்த 2014-ல் நான்கு மருத்துவமனைகளில் மருந்து எதிர்ப்பைப் பதிவுசெய்து புகாரளிப்பது தொடர்பாக ஆறு மையங்கள் (nodal centres) அமைக்கப்பட்டன.

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மையை (AMR) தடுக்க இந்தியாவில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளில் முக்கியமானது ஆன்டிமைக்ரோபியல் ஸ்டீவர்ட்ஷிப் திட்டம் (Antimicrobial Stewardship Program). இந்தத் திட்டத்தின் முதல் பயிற்சி பட்டறை சென்னையில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் படி இந்தியாவில் உள்ள மருத்துவமனை வார்டுகள் மற்றும் ICU-களில் உள்ள நோயாளிகளில், ஆன்டிபயாடிக்ஸை தவறாக மற்றும் அதிகப்படியாக பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டனர். மேலும் பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்ட 40 வகையான டோஸ் கலவை மருந்துகள் (FDCs) DCGI  மூலம் தடை செய்யப்பட்டதோடு, 26 வகையான ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளின் (NLEM, 2022) தேசிய பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன.

மேலும் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மூன்றாம் தலைமுறை ஆன்டிபயாடிக்ஸ் மருந்து என்று சொல்லப்படுகின்ற கார்பபெனெம்கள் (carbapenems), கொடிய நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படவில்லை என்பதையும், இதன் விளைவாக நோயாளிகளிடையே இறப்பு அதிகரிப்பதோடு, பெரும்பாலானோருக்கு 50% வரை தான் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதையும் மதிப்பிடப்பட்டுள்ளனர். எனவே ICMR தற்போது Pharma Giant Pfizer Ltd நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. அதன்படி Centre to Combat Antimicrobial Resistance (CAMR) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் முறையான ஆண்டிபயாடிக் பயன்பாட்டை ஊக்குவிப்பதே ஆகும்.

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு தன்மையை (AMR) கட்டுப்படுத்த தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகள்:

  • ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
  • மருத்துவரின் முறையான பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை, மருந்து கடைகளில் வாங்கி தன்னிச்சையாக உட்கொள்வதை நிறுத்த வேண்டியது அவசியமானது.
  • மீதமுள்ள ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை மற்றவர்களுக்கு பகிரவோ அல்லது தானே முறையற்று பயன்படுத்தவோ கூடாது.
  • அதிகமான ஆன்டிபயாடிக்ஸ் பயன்பாட்டை கூடிய வரை தவிர்த்து, சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்வதும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவதும் முதன்மையானதாகும்.
  • சாதாரணக் காய்ச்சல் மற்றும் சளி (Common Flu) உள்ள நோயாளிகள் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தி வருகினறனர். சாதரான நோய்களுக்கு எப்போதும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் தேவையில்லாதது.
  • பரவக் கூடிய தொற்றுநோய்களை, உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும், சுகாதாரமான முறையில் உணவைத் (ஆன்டிபயாடிக்ஸ் சேர்க்காத உணவுகள்) தயாரிப்பதன் மூலமும், நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும், தடுப்பூசிகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலமும், சுத்தமான நீரை பருகுவதன் மூலமும் பெரும்பாலும் தடுத்துக்கொள்ள முடியும்.

ஆதாரங்கள்:

https://www.thelancet.com/journals/lanplh/article/PIIS2542-5196(21)00280-1/fulltext

https://www.who.int/campaigns/world-antimicrobial-awareness-week/2022

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6437806/#:~:text=In%20India%2C%20various%20actions%20have,%2C%20%E2%80%9CRedline%E2%80%9D%20campaign%20for%20educating

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1896031

https://iamrsn.icmr.org.in/index.php/news-event/news-iamrsn

https://www.yourgenome.org/facts/what-is-antibiotic-resistance/

https://www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader