ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்’ திட்டம் – பயன்களும், பிரச்சனைகளும் !

ன்றிய கல்வி அமைச்சகம் புதியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 29 அன்று நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்” என்று சொல்லப்படும் அபார் (APAAR) அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த ‘தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு‘ (Automated Permanent Academic Account Registry) திட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்பக்கல்வி (Pre-Primary) முதல் உயர்கல்வி (Higher Education) வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 12 இலக்கம் கொண்ட இந்த அடையாள எண் (APAAR) வழக்கப்படவுள்ளது.

பயன்கள்:

  • இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள், கல்வி சாதனைகள், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் உள்ளிட்ட மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களுடன், மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்விக் கடன்கள், உதவித்தொகை மற்றும் பிற கடன்கள் ஆகியவையும், ஆதார் அட்டையிலிருந்து பெறப்பட்ட தகவல்களுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் மாணவர்களின் பெயரில் போலி சான்றிதழ்கள் உருவாக்கப்படுவதைத் தடுக்க முடியும். 
  • இது மாணவர்கள் தங்கள் கல்வி ஆவணங்களை தொலைத்தால் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தடுப்பதோடு, உயர்கல்வி அல்லது வேலைகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதையும் எளிதாக்குகிறது.
  • ஒலிம்பியாட்களில் தரவரிசை மற்றும் சிறப்புத் திறன் பயிற்சிகளில் எடுத்துள்ள சாதனைகள் ஆகியவற்றையும் APAAR பதிவு செய்கிறது.
  • மாணவர்கள் ஒரு பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கோ அல்லது கல்வி நிறுவனத்திற்கோ மாறுவதற்கான சேர்க்கை செயல்முறையையும் இது எளிதாக்குகிறது. இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நிறுவனத்திலும், மாணவர்கள் எளிதில் சேர முடியும்.
  • மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருந்தார்கள் எனில், அதற்கான காரணங்களை கண்டறிந்து அவர்கள் கல்வியில் தொடர்வதையும் இது உறுதிபடுத்துகிறது.
  • இந்த அபார் கார்டு மூலம் வழங்கப்படும் கிரெடிட் மதிப்பெண்களை உயர்கல்வியில் சேரும் போது பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பதிவு செய்யும் முறை:

  • APAAR அடையாள அட்டையை abc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த பதிவு முறை டிஜிலாக்கர் (DigiLocker)-ஐப் பயன்படுத்தி பதிவு செய்யப்படும். 

  • இதில் இரண்டு விதமான பதிவுமுறைகள் இருக்கும். அதில் மாணவர்கள் தன்னிச்சையாக பதிவு செய்ய, Students என்பதையும், உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் பதிவு செய்ய University என்பதையும் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். 

  • இந்த டிஜிலாக்கர் கணக்கை உருவாக்க மொபைல் எண்ணோடு, மாணவர்கள் தாங்கள் பயிலும் வகுப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் விவரங்களையும் கொடுக்க வேண்டியது அவசியம். 

  • மேலும் இதனோடு ஆதார் எண்ணைக் கொடுத்து உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியமானது. 

அபார் திட்டத்தின் மூலம் ஏற்படும் சவால்கள்:

  • ஏற்கனவே தனித்துவமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளபோது, மீண்டும் இந்த அபார் அட்டையின் தேவை என்ன? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதே போன்று ஆதார் தரவுகளின் பாதுகாப்பு பல கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அபார் அட்டையின் தரவு பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
  • அபார் அட்டையின் திட்டத்திற்கு இன்னும் சில மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. குறிப்பாக ‘புதிய கல்விக் கொள்கை 2020’-ஐ அமல்படுத்தாத மாநிலங்கள் எதுவும் அபார் அட்டைக்கான பணிகளை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • APAAR அடையாள எண்ணை உருவாக்குவதற்கு பள்ளிகள் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. “அந்த ஒப்புதல் படிவங்களில், “UDISE தரவுத்தளம் மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது அடையாளம் காணக்கூடிய தகவல்களான பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, பாலினம் மற்றும் புகைப்படம் ஆகியவை கிடைக்கப்பெறலாம் என்பதை நான் அறிவேன்.” என்று அதில் குறிப்பிடபட்டுள்ளது. இதன்மூலம் பெற்றோர்கள் பலரும் இதற்கு ஒப்புதல் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

  • பெற்றோரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே APAAR செயல்முறை தொடங்கப்படும் என்று கூறப்பட்டாலும், பெற்றோர்கள் சம்மதத்தை மறுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.
  • குழந்தைகளின் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் கோரி நாடு முழுவதிலும் சுமார் 40 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். மேலும் ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளே சுமார் 19 லட்சம் பேர் உள்ள நிலையில், அபார் அட்டைக்கான விவரங்களை பள்ளிகள் திரட்டுவதில் தாமதம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாணவரின் விவரங்களும் ஏற்கனவே UDISE-ல் உள்ள நிலையில், இந்த புதிய தரவுகள் சேகரிக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

ஆதாரங்கள்:

https://www.education.gov.in/nep/ncrf-apaar 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Thematic_Session_NCrF.pdf 

https://indianexpress.com/article/cities/mumbai/one-nation-one-student-apaar-student-id-card-sc heme-8989558/lite/ 

https://timesofindia.indiatimes.com/education/news/apaar-all-you-need-to-know-about-this-one-nation-one-id-to-be-rolled-out-for-students/amp_articleshow/104468708.cms 

https://www.hindustantimes.com/cities/mumbai-news/parents-concerned-as-apaar-id-consent-form-requires-students-personal-information 101697656934269.htm l#:~:text= Mumbai%3A% 20Parents%20have% 20raised%20concerns,gender%2C%20and%20photograph%2C%20to%20educational 

https://www.hindutamil.in/news/india/1140891-one-country-one-identity-card-unique-number-for-school-students-across-nation-1.html

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader