விஜய் கழுத்தில் சிலுவை எனப் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி.. அது நங்கூரம் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் !

நடிகர் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” திரைப்படத்தின் “அரபிக் குத்துப்” பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், ” அரபிக் குத்துப்” பாடலில் விஜய் கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பது விவாதமாகி வருவதாக இந்து மக்கள் கட்சி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
Joseph Vijay wearing Cross is a welcome sign, he is unapologetically and boldly displaying his religious identity – what’s wrong in it.
IMK welcomes this, every one has freedom of religion in India.
Unnecessary propaganda must be avoided. pic.twitter.com/xidZcU1zrT
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) February 16, 2022
இந்து மக்கள் கட்சி ட்விட்டரில், ” ஜோசப் விஜய் சிலுவை அணிந்திருப்பது வரவேற்கத்தக்க அறிகுறி. அவர் தன்னுடைய மத அடையாளத்தைத் தைரியமாக வெளிப்படுத்துகிறார் – அதில் என்ன தவறு. ஐஎம்கே இதை வரவேற்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. தேவையற்ற பிரசாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் ” எனப் பதிவிட்டு உள்ளனர்.
அரபிக் குத்துப் பாடலில் 2.27வது நிமிடத்தில் விஜய், நெல்சன், அனிரூத் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி மற்றும் பிற காட்சிகளில் விஜய் கழுத்தில் இருக்கும் செயினில் நங்கூரம் போன்றதே இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம்.
விஜய் அணிந்து இருப்பது சிலுவை அல்ல, நங்கூரம் தான் என பலரும் கமெண்ட்களில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு, அது நங்கூரம் வடிவில் இருக்கும் சிலுவை(Marine Cross) என சிலர் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
மெர்சல் திரைப்படத்தில் உருவான சர்ச்சையால் நடிகர் விஜயின் பெயரை பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் ஜோசப் விஜய் என அழைத்து வருகிறார்கள். அதன் பிறகு, பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய் கிறிஸ்தவராக இருந்தாலும், அவரை சுற்றி இஸ்லாமியர், இந்து என அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சியும் பேசுப் பொருளானது.
ஹிஜாப் விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜயின் அரபிக் குத்துப் பாடலைக் குறிப்பிட்டு ட்ரோல் மீம்கள் மற்றும் பதிவுகள் வைரலாகியது. இந்நிலையில், அரபிக் குத்துப் பாடலில் விஜய் அணிந்து இருக்கும் நங்கூரம் வடிவிலான செயின் சிலுவை வடிவில் இருப்பதாக பதிவிட்டு வருவதை வருபவர்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படியே அது சிலுவையாக இருக்கட்டுமே, அப்படி இருந்தால் என்ன தவறு.