This article is from Jan 25, 2018

அறம் பட நிஜ நாயகர் ” மணிகண்டன் ” மெய்சிலிர்க்கும் நேர்காணல்…

இன்றைய நவீன காலக்கட்டத்திலும் தொலைதூர கிராமங்களில் குழந்தைகள் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து சிக்கி கொள்வதும், தீயணைப்பு மீட்பு குழுவின் பலமணி நேர போரட்டத்திற்கு பின்பு குழந்தைகளை சடலமாகவே மீட்கப்படுவதும் அனைவரையும் வேதனைக்குள்ளாகும் நிகழ்வு. இதற்கு காரணம் மீட்பு குழுவினரிடம் அதற்கான கருவிகள் ஏதும் இல்லாதது தான்.

மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை உயிருடன் மீட்பதை மையமாகக் கொண்டு சமீபத்தில் வெளியாகிய படம் அறம். அதில், குழந்தையைக் காப்பாற்ற போர்வெல் உயிர் காக்கும் கருவியுடன் மதுரையில் இருந்து ஒரு கண்டுபிடிப்பாளர் வந்து கொண்டிருப்பதாக இடம்பெற்றிருக்கும் காட்சியில் குறிப்பிடப்பட்டவை திரு.மண்கண்டன் அவர்களை பற்றி தான். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகில் உள்ள நாலாட்டின்புத்தூர் கிராமத்தை பூர்வீமாக கொண்டவர் மணிகண்டன். தனது தந்தை மெக்கானிக் தொழில் செய்து வந்தவர் என்பதால் சிறுவயதில் இருந்து மெக்கானிக் தொடர்பான பணிகளை செய்து வந்துள்ளார். ஐ.டி.ஐ படிப்பை முடித்த மணிகண்டன் 17 வருடங்களாக  கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் ஃபிட்டராக பணியாற்றிவர்.

தற்போது மதுரையின் டி.வி.எஸ் சமுதாயக் கல்லூரியில் 11 ஆண்டுகளாக தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதைத் தவிர பகுதி நேரத்தில் ஃபிட்டராகவும் வேலை பார்த்து வருகிறார். மதுரைக்கு அருகே தான் வசித்து வரும் பகுதியில் சிறியதாக ஒரு ஆராய்ச்சி கூடத்தை நிறுவி, போர்வெல் உயிர் காக்கும் கருவி, சோலார் பைக், சோலார் சைக்கிள், பேட்டரியில் இயங்கும் அடிகுழாய் போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறார். 

ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகளை பாதுகாப்பாக வெளியில் தூக்கி வரும் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடிக்கும் எண்ணம்,

“ 2003-ல் எங்கள் ஊரில் உள்ள தோட்டத்தில் போர்வெல் பணிக்காக சென்ற போது என்னுடன் வந்திருந்த என் 3 வயது மகன், அருகில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயனற்ற நிலையில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றினுள் தவறுதலாக விழப் பார்த்தான். அந்நேரத்தில் அவனை காப்பாற்றி இருந்தாலும், அச்சம்பவத்தால் என் மனம் அடைந்த வேதனை தான் இந்த கருவியைக் கண்டுபிடிக்கும் எண்ணத்தை தோற்றுவித்தது ” என்கிறார் மணிகண்டன்.

கடுமையான பொருளாதார சூழ்நிலையிலும் 2003-ம் ஆண்டிலேயே போர்வெல் உயிர் காக்கும் கருவியைக் கண்டுபிடித்தார் மணிகண்டன். தனது கண்டுபிடிப்பு மக்களுக்கு பெரிதும் பயன்பட வேண்டும் என்று எண்ணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறைக்கு தன் கருவி பற்றிய விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். எனினும், பார்வையிட்ட அதிகாரிகள் கருவியில் பல மாற்றங்கள் செய்து மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இதையடுத்து தன் முயற்சியை கைவிடாமல் 2013-ம் ஆண்டில் உயிர் காக்கும் கருவியில் சிறிய கேமரா, இரத்த அழுத்த சோதனை செய்யும் கருவி போன்றவற்றை பொருத்தி நவீனமாக்கியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் கருவியின் வடிவமைப்பு 9 அடி நீளத்துடன் பெரிதாக இருந்த காரணத்தினால் மற்ற ஊர்களுக்கு எடுத்த செல்ல சிரமமாக இருந்துள்ளது. எனவே அதில் பல மாற்றங்களை கொண்டு வந்து பெட்டியினுள் வைக்கும் அளவிற்கு எளிதாக்கியுள்ளார்.

இத்தகைய கருவியைக் கண்டு மற்றவர்கள் “ இது உயிர் காக்கும் கருவி அல்ல.. உயிரைப் பறிக்கும் கருவி.! ” என்று கேலி செய்தாலும் தனது மனதை தளரவிடாமல் முயற்சித்ததன் பலனாக  2008-ல் சென்னை ஐ.ஐ.டி-யில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது மற்றும் சான்றிதழை பெற்றுள்ளார்.  

“ 2014 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு அன்று சங்கரன்கோவில் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தர்ஷன் என்ற குழந்தையை எனது கருவியின் உதவியால் ஒரு மணி நேரத்தில் காப்பாற்றினோம். இதன் பின்னரே எனது கருவியின் மீது தீயணைப்பு துறையினருக்கும், மக்களும் நம்பிக்கை வந்தது. இதுவரை எட்டு குழந்தைகளை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து காப்பாற்றி உள்ளேன் “ என்கிறார் மணிகண்டன். 

தற்சமயம் வேலூர், விழுப்புரம், மதுரையில் உள்ள தீயணைப்பு துறையினர் இக்கருவியை வாங்கியுள்ளனர். மேலும், கோயம்பத்தூர் ரோட்டரி சங்கம், விஜயவாடா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களிலும் இக்கருவி வாங்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் உயிர் காக்கும் கருவியை வாங்குபவர்களுக்கு அதை இயக்குவதற்கு இலவசமாக பயிற்சி அளிப்பதோடு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை நேரில் சென்று பயிற்சி அளித்தும் வருகிறார்.  ஆழ்துளைக் கிணறு உயிர் காக்கும் கருவி ஒன்றிற்கு ரூபாய் 30,000 மட்டுமே விலை நிர்ணயம் செய்துள்ளார். 

மூன்று மாவட்ட தீயணைப்பு துறையினரிடம் மட்டுமே போர்வெல் உயிர் காக்கும் கருவி உள்ளன. எனினும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தீயணைப்பு துறையினரிடமும் இக்கருவி அவசியமாக இருக்க வேண்டும். அப்போது தான் குழியில் சிக்கும் குழந்தைகளை உரிய நேரத்தில் மீட்க முடியும் என்கிறார். 

 

கடந்த 2015-ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் ஆழ்துளை துயர சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது. எனினும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இத்துயரங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றன. கர்நாடகாவில் ஆழ்துளை கிணறு துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு அம்மாநிலத்தில் உள்ள மூடப்படாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணிகள் நடைபெற்றன. அதில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதாகக் கூறுகிறார்.

தன் சிறு வயதில் தண்ணீர் மேல்மட்டத்தில் இருந்ததால் 3 இன்ச் அளவுடைய ஆழ்துளைக் கிணறுகளே அமைக்கப்பட்டன. தற்போது அவை 8 இன்ச் அளவிற்கு மாற்றம் அடைந்துள்ளன. இனி வரும் காலங்களில் பெரு நிறுவனங்களில் 15  இன்ச் அளவிற்கு அமைக்க வாய்ப்புள்ளதால் பெரியவர்களே ஆழ்துளைக் கிணற்றினுள் விழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கிறார்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்களே இனி இல்லாமல் போக வேண்டும். இதனால், என் கருவி பயன்படாத கருவியாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே ” என்கிறார்.

இத்தகைய சேவைக்காக எத்தகைய பிரதிபலனையும் எதிர்பார்க்காமலும், தனது கருவி மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதனால் அதற்கு காப்புரிமை வாங்கவில்லை என்று பொதுநலத்துடன் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன். 

மதுரை பொறியியல் கல்லூரியில் படித்து வரும் அவருடைய மகனுக்கும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். மணிகண்டன் முயற்சித்து வரும் சோலார் சைக்கிள் கண்டுபிடிப்பில் அவரது மகனின் பங்கு அதிகம் என்கிறார். வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் சோலார் கொண்டு இயங்க வேண்டும் என்ற அப்துல் கலாம் ஐயா அவர்களின் நிறைவேறாத கனவை நிறைவேற்ற கடுமையாக முயற்சித்து வருகிறார்.

தமிழக அரசின் உதவியும், இளைஞர்களின் உதவியும் கிடைத்தால் தம்மால் மேலும் பல நல்ல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த திரு.மணிகண்டன். 

அகிலன் வாசு 

Please complete the required fields.




Back to top button
loader