உலகின் நீண்ட தூரம் இடம்பெயரும் “ஆர்க்டிக் டர்ன்” பறவை| கொரோனாவால் வருகையை இழந்த ஃபார்னீ தீவு !

லகிலேயே மிக அதிக தூரப் பயணம் செய்து இடப்பெயர்வை மேற்கொள்வது வெறும் 113 கிராம் எடையுடைய “ஆர்க்டிக் டர்ன்” என அழைக்கப்படும் பறவையே. தன் வாழ்நாள் முழுவதும் அது செய்யும் பயண தூரம் என்பது நிலவிருக்கும் பூமிக்கும் சுமார் மூன்று முறை பயணம் மேற்கொள்ளும் தொலைவிற்கு சமமானது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாக பல்வேறு வகையான பறவைகளின் இடப்பெயர்வு தொலைவு, கால அளவு, அது பறக்கும் விதம் முதலிய பல்வேறு விவரங்களை பதிவு செய்யவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் ஆராய்ச்சியாளர்கள் பறவைகளின் கால்களில் டிரான்ஸ்மிட்டர் கருவியை கட்டிவிடுவார்கள். சமீப காலம் வரை இது போன்ற கண்காணிப்பு கருவிகள் எடை அதிகமாக உள்ளதால், அதிக எடைகொண்ட பெரிய பறவைகளின் கால்களில் மட்டுமே கட்டப்பட்டு வந்தது.

ஆர்க்டிக் டர்ன் பறவை அதிக தூரம் பயணம் மேற்கொள்ளும் என அறியப்பட்டாலும், மிக இலகுரக பறவை என்பதால் அதன் பயண தூரத்தின் அளவு கணிப்பு ரீதியாக மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில், பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே எனும் ஒரு அமைப்பு வெறும் 1.4 கிராம் எடை கொண்ட கண்காணிப்பு கருவியை உருவாக்கியது. இதன் விளைவால் ஆர்க்டிக் டர்ன் பறவையின் பயண தூரங்கள் தெரிய வந்தது.

ஆர்க்டிக் டர்ன்கள் குறுகிய கால்கள் மற்றும் இறக்கைகளைக் கொண்ட மிகவும் எடைக் குறைவான பறவை என்பதால் அடிக்கும் காற்றில் வானத்தில் சறுக்குவது போல் மிக லாவகமாக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியவை. அப்படிப்பட்ட ஒரு பறவையின் கால்களில் கண்காணிப்பு கருவி கட்டப்பட்டது.

பொதுவாக ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவின் ஆர்க்டிக் மற்றும் சபார்க்டிக் பகுதிகளின் கடற்கரைகள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் ஆர்க்டிக் டர்ன்கள், தன் வருடாந்திர பயணமாக அண்டார்டிக் துருவத்திற்கு பயணங்கள் செய்கிறது. ஆர்க்டிக் டர்ன்களின் பயணப்பாதை ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் வளைத்து வளைத்து “ஜிக் ஜாக்” முறையில் பயணத்தை மேற்கொள்வதால், உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும், கடல்களிலும் பரவலாகக் காணலாம்.

இங்கிலாந்தில் உள்ள ஃபார்னீ தீவுகளில் இருந்து 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கண்காணிப்பு கருவி கட்டப்பட்ட ஒரு ஆர்க்டிக் டர்ன் பறவை தன் பயணத்தை தொடங்கி 2016 பிப்ரவரி மாதத்தில் அண்டார்டிக் பகுதியில் உள்ள வெட்டல் கடலை அடைகிறது. பிறகு மீண்டும் அங்கிருந்து 2016 மே மாதத்தில் ஃபார்னீ தீவுகளை அடைத்து தன் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த பயண தூரம் சுமார் 60,000 மைல்கள் (96 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல்). இந்த தூரம் உலகின் சுற்றளவை விட இரண்டு மடங்கு அதிகம்.

வட துருவத்தில் இருந்து நேராக பயணம் செய்யாமல் ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடல் என பல ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றிவிட்டு வருவதை ஆராய்ச்சி செய்து பார்த்தால், அப்பறவை இந்த பயணத்தை சரியான காரணத்தோடு தான் மேற்கொள்கிறது என ஆராய்ச்சியாளர் எகேவாங் கூறுகிறார். அவர் தெரிவித்ததாவது, ” அவை வளிமண்டலத்தில் ஏற்படும் பெரிய சுழல் காற்றை பின்பற்றி, அதை கருத்தில் கொண்டு அக்காற்றில் இருந்து சிக்குவதை தவிர்ப்பதற்காகவே இதனைச் செய்கிறது.”

இந்த நீண்ட பயணத்தில் அப்பறவை திறந்த கடல்பகுதியான இடங்களில் சுமார் ஒரு மாதக் கால அளவில் மூன்று முறை தன் பயணத்தை நிறுத்திவிடுகிறது. இதற்கு காரணம் உணவு இடைவேளையாக இருக்கலாம் என எகேவாங் கூறுகிறார்.

தோராயமாக 30 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஆர்க்டிக் டர்ன்கள் வாழ்கின்றன. இந்த பயணதூரக் கணக்குபடி பார்த்தால், அவை தன் வாழ்நாளில் சுமார் 1.5 மில்லியன் மைல்கள் (2.4 மில்லியன் கிலோமீட்டர்) இடம்பெயர்கிறது. இது நிலவிற்கும் பூமிக்கும் சுமார் மூன்று முறை பயணம் மேற்கொள்ளும் தூரத்திற்கு சமமானது!

“ஆர்க்டிக் டர்ன்கள் ஏன் இவ்வளவு நீண்ட இடம்பெயர்வை மேற்கொள்கிறது என உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் நிறைந்து காணப்படும் உணவுகள் காரணமாக இருக்கலாம் ” என எகேவாங் தெரிவித்துள்ளார்.

அனைத்து புலம் பெயரும் விலங்குகளைப் போலவே, பறவைகளும் குறிப்பிட்ட பருவங்களில் கிடைக்கும் உணவைப் பயன்படுத்திக்கொள்ள இடப்பெயர்வை மேற்கொள்கின்றன. ஆர்க்டிக் டர்ன்களின் இந்த ஆசாத்திய பயண வாழ்கையை,” நம்ப முடியாத ஆற்றல் வாய்ந்த உயிர்வாழும் முறை” என கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் ஒருவரான ரிச்சர்ட் பெவன் சிலாகித்து இருக்கிறார்.

ஆர்க்டிக் டர்ன்களின் இந்த வருடாந்திர விடுமுறைப் பயணம் ஆனது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் சில மாறுதல்களை சந்திந்து உள்ளது.

பிரிட்டனின் நார்தம்பர்லேண்ட் ஃபார்னீ தீவுகளில் உள்ள இன்னர் ஃபார்னீ தீவுகள் தான் ஆர்க்டிக் பறவையின் ஆதர்சமான பகுதி. கோடைகாலத்தில் ஆர்க்டிக் டர்ன்களின் இனப்பெருக்கம் தான் நீண்ட காலமாக ஃபார்னீ தீவுகளின் சுற்றுலா அனுபவத்தில் மிகவும் சுவாரஸ்யமான அம்சமாக உள்ளது. இனப்பெருக்க காலத்தில் இன்டர் ஃபார்னீ தீவில் முக்கிய பாதையில் அமைந்துள்ள டஜன் கணக்கான கூடுகள் என ஏராளமான பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்க குவிந்திருப்பர். இந்நிலையில், இந்த ஆண்டு ஆர்க்டிக் டர்ன்கள் எதுவும் காணப்படாமல் மிகவும் காலியாக உள்ளது இன்னர் ஃபார்னீ.

வழக்கமாக அங்குள்ள நேஷனல் டிரஸ்ட்டின் ரேஞ்சர்கள் தான் அங்கு தாவர மேலாண்மையில் ஈடுபட்டு ஆர்க்டிக் பறவைகளுக்கு இனப்பெருக்கத்திர்க்கான சூழலை உருவாக்குகின்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாட்டால் ரேஞ்சர்கள் யாரும் இல்லாமல், தாவரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் போனது. இதனால் தான் பறவைகள் இந்த ஆண்டு தீவிற்கு வரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

அங்கு உள்ள ஆர்வலர்களும், மக்களும் “இந்த தவறான மேலாண்மையால், பல ஆண்டு காலமாக எடுக்கப்பட்ட முயற்சி வீணாகிப்போனது. இனி இந்த தீவு முன்பு இருந்த நிலையை அடையாது ” என சாடி வருகின்றனர்.

Links :

arctic-tern-makes-longest-ever-migration-equal-to-flying-twice-around-the-planet

worlds-longest-migration-arctic-tern-bird

https://www.nationalgeographic.com/animals/birds/facts/arctic-tern

Overgrown Farne Island plants spark Arctic tern nesting fears

Please complete the required fields.
Back to top button