கிருத்தவப் பள்ளிகளை மிரட்ட பொய் பாலியல் குற்றச்சாட்டு.. பணம் பறிக்க சதி, சிக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி

கிருத்தவப்  பள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பி அதன் மூலம் 25 லட்சம் பணம் பறிக்கத் திட்டமிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலுள்ள கிருத்தவப்  பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி மாணவியை மதம் மாற கோரி கட்டாயப்படுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவி பேசும் வேறொரு வீடியோவும் வெளியானது. அதில் மதமாற்றம் குறித்து மாணவி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் முதலில் பரவிய மாணவி பேசும் வீடியோவை எடுத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவரது செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அதில் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வெளிவராத உண்மை : தஞ்சை மாணவிக்கு நடந்தது என்ன? வீடியோ வைரல் !

முதல் வீடியோவில் மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் உள்ளது. மத மாற்றம் குறித்து மாணவி எதுவும் குறிப்பிடாத வீடியோ இரண்டாவதாக எடுக்கப்பட்டது. மதம் மாற கூறியதாக மாணவி பேசிய வீடியோ மூன்றாவதாகவும், மாணவியின் சித்தி பேசிய வீடியோ நான்காவதாகவும் எடுக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. மேலும் மதம் மாற சொன்னதே மாணவியின் தற்கொலைக்கு  காரணம் என பரப்பப்பட்ட தகவல் பொய் என்பது தெரிய வந்தது.

பணம் பறிக்கத் திட்டம் : 

இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முத்துவேல் பாதிரியார் ஒருவரிடம் இருந்து பணம் பறிக்க போடப்பட்ட திட்டம் குறித்து பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “5 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். பிளக்‌ஷ், போஸ்டர் அனைத்தும் நாங்கள் கொடுத்து விடுகிறோம். ஆர்ப்பாட்டத்திற்குச் செலவு அனைத்தையும் செய்து கொடுக்கிறோம் என்கிறார்கள். 

இந்த விசயத்தில் நாம் எதாவது செய்ய முடியுமா எனப் பார்ப்போம். பிட் நோட்டீஸ் அடித்து உனக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் எதுவும் செய்ய வேண்டாம் எனச் சொன்னால், எதாவது கொடுத்தால் உனக்கும் வாங்கிக்கொள், எனக்கும் வாங்கிக்கொள். ஒரு 25 லட்ச ரூபாய் வாங்கு. அந்த ஆளிடம் பணம் உள்ளது. மைக்கேல்பட்டியில் நடந்தது, இங்கு நடந்தது எல்லாம் உண்மைதானாம். எல்லாம் பகவானுக்குதான் தெரியும். 

“அரியலூர் பள்ளியில் இந்து பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியில் இந்துக்களே உஷார்! உஷார்! உஷார்!” சேர்க்காதீர்கள். அப்படினு மொத்தமா கிருத்தவப் பள்ளி அடித்துவிட்டால், மான்போர்ட், நிர்மலா ஸ்கூல் எல்லாத்தூக்கும் ஆகிடும். இது தமிழ்நாடு அளவில் பத்திகிட்டு எரியும். இந்த விசயத்தை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்ய என்னால் முடியும். இதைச் சரியாகச் செய்தால் நீயும் சம்பாதிக்கலாம், நானும் சம்பாதிக்கலாம்” எனப் பேசியுள்ளார்.

முத்துவேலின் இத்திட்டம் குறித்து புனித லூர்து அன்னை ஆலயத்தின் பாதிரியாரும், ஆர்.சி.பள்ளி தாளாளரும் தோமினிக் சாவியோ என்பவர் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரிலும், முத்துவேல் என்பவர் மைக்கேல்பட்டி மாணவி தற்கொலையின் போதும் நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக் காரணமாக இருந்தவர். தற்போது என் மீது கற்பழிப்பு, வன்கொடுமை போன்ற குற்றங்களைச் சுமத்தி, பணம் பறிக்க முயற்சி செய்து வருகிறார் என்றுக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியான ஆடியோவை ஆதாரமாகக் கொண்டு முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவத்தினை மத பிரச்சனையாக மாற்ற முயன்றவர்கள், தற்போது கிருத்தவப் பள்ளிகளின் மீது பொய் புகார்களைச் சுமத்தி, அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கவும், சமூகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கவும் முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader