அர்னாபிடம் தன் மகளுக்கு சிபாரிசு கேட்ட பார்க் முன்னாள் சிஇஓ| சமூக மூலதனம் பற்றி அறிக !

அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தா இடையேயான வாட்ஸ் அப் உரையாடல் கசிந்த பக்கங்களில் அர்னாபிடம் தன் மகளுக்காக பார்த்தோ தாஸ்குப்தா சிபாரிசு ஒன்றைக் கேட்டு இருக்கிறார். மும்பையில் சிறந்த வழக்கறிஞரிடம் தன் மகளின் இன்டெர்ன்ஷிப்-க்கு சிபாரிசு கேட்டு 2018-ல் நடந்த உரையாடலும் இடம்பெற்று இருக்கிறது. அதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் அர்னாப் பதில் அளித்து இருக்கிறார்.

Advertisement

நாம் அதிகம் விவாதிக்காத மற்றும் அறியாத பகுதி சோசியல் கேபிடல் அல்லது சமூக மூலதனம் என்பதாகும். சமூக மூலதனம்(Social Capital) என்பது சமூகத்தில் ஒருவருக்கு இருக்கும் அந்தஸ்து மூலமாக கிடைக்கின்ற ஓர் ஆதரவு.

உதாரணத்திற்கு, ஒருவர் பல ஆண்டுகளாக விவசாயக் கூலியாக மட்டுமே இருந்து வருகிறார் என்றால் அவருக்கு தெரிந்தவர்கள் என்று பார்த்தால், அங்குள்ள சக விவசாயிகள், கூலித் தொழிலாளர்களே அதிகம் இருப்பர். அதிகபட்சமாக, அவர்களின் முதலாளி மற்றும் அந்த ஊரில் இருக்கும் தபால்காரர், விஏஓ போன்ற பதவியில் இருப்பவர்களை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

தங்களுக்கு ஒரு தேவை என வரும் போது அவர்களால் அதிகபட்சமாக விஏஓ போன்ற அதிகாரிகளையோ அல்லது தங்களுக்கு ஊதியம் தரும் முதலாளிகளிடமோ உதவி என நிற்க முடியும். அது மட்டுமே அவர்களுக்கு சமூகத்தில் கிடைத்த சொத்து. அதே நேரத்தில், சில தலைமுறைக்கு பிறகு அதிகபட்சமாக அக்குடும்பத்தில் ஒருவர் பொறியாளர், டாக்டர் ஆகி இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் தொடர்புகளே இருக்கும்.

அதே, ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளாக படித்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு தெரிந்தவர்களின் வட்டம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். உதாரணத்திற்கு, ஒரு வழக்கறிஞர் இருந்தால் அவருக்கு அதிக அளவில் வழக்கறிஞர்கள், நீதிபதி, காவல்துறை என பலரையும் தெரிந்து இருக்கக்கூடும். அப்படியானவர் திருமணம் செய்யும் நபர் நன்கு படித்த பிற துறையை சேர்ந்தவராகவோ அல்லது சமூகத்தில் அந்தஸ்து உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில் தெரிந்தவர்களின் வட்டம் விரிவடையும்.

பல தலைமுறைகளாக இப்படி தொடர்ந்து நடக்கும் போது அதிகார மையத்தில் இருப்பவர்கள் அல்லது வசதி படைத்தவர்களிடம் அவர்களுக்கான தொடர்பு என்பது அதிக அளவில் இருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் இருந்து வரும் நபருக்கு சமூக மூலதனம் மூலமான நலன் என்பது அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. அதே முதல் பட்டதாரி நபருக்கு சமூக மூலதனத்தின் மூலமான நலன் ஆனது மிகக் குறைவே. முதல் பட்டதாரிகள் எண்ணிக்கை உயர இடஒதுக்கீடு என்கிற ஒரு விசயமும் பேருதவியாக இருந்து இருக்கிறது.

சமூக மூலதனம் அதிகம் கொண்ட குடும்பத்தில் இருந்து ஒருவர் ஐஐடி போன்ற தேர்வுகளுக்கு செல்லும் போது அவர்களின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ அங்கு பணியில் இருந்தால் அல்லது முன்பே தேர்வுகளை எழுதிய அனுபவம் இருந்தால் அவருக்கு எளிதாக உதவக்கூடும். தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் போது பணியில் சேர நேரடி உதவியோ அல்லது ஆட்கள் சேர்ப்பு குறித்த தகவல்களை பெற முடியும். இப்படி பல உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

Advertisement

மேலும் படிக்க : அர்னாப் வாட்ஸ் அப் சாட் விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

அதற்கான சிறு உதாரணமே, அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தா இடையேயான நடந்த இந்த வாட்ஸ் அப் சாட். பார்க் சிஇஓ எனும் உயர் பதவியில் இருக்கும் பார்த்தோ தாஸ்குப்தா அரசியல் தொடர்பு கொண்ட அர்னாப் கோஸ்வாமியிடம் தொடர்பு இருப்பதால் தனது மகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் சிறந்த வழக்கறிஞர் அல்லது பிற சிறந்த வழக்கறிஞரிடம் இன்டெர்ன்ஷிப் ஏற்பாடு செய்ய முடிகிறது. அதுவே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய தொடர்பு நினைத்து பார்க்க முடியாதது. இதுவே சோசியல் கேபிடல் அல்லது சமூக மூலதனம் என்பதாகும்.

Privilege ஆனது இவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. சமூகத்தில் அவர்களுக்கான தொடர்பு அதிகம் மற்றும் அது பற்றிய அறிவும் அதிகம். அவர்களுக்கு அது பல ஆண்டுகளாக சாத்தியப்பட்டு உள்ளது என்ற போது, சமூக மூலதனை இடஒதுக்கீடு வைத்து பார்ப்பதில்லை. அதையும், பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.

இன்டெர்ன்ஷிப் போன்ற விசயங்களுக்கு கூட எதுவும் தெரியாத முதல் பட்டதாரி ஒருவர் தெரு தெருவாய் அலைந்து தேடுவதற்கும், அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு வெறும் வாட்ஸ் அப் செய்தி மூலம் செய்து கொள்வதற்குமான இடைவெளியை யோசித்து பாருங்கள். இதுவே சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பெரிய வழக்கறிஞரிடம் இன்டெர்ன்ஷிப் சேர்வதற்கு முதல் பட்டதாரி முயற்சிப்பதற்கான வாய்ப்பும், இப்படியான பெரும் பணக்காரர் மற்றும் உயர் பதவியில் பல தொடர்புகளுடன் இருப்பவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் ஒன்றா என யோசியுங்கள் !

ஐயன் கார்த்திகேயன் 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button