This article is from Jul 30, 2021

அரும்பாக்கத்தில் வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டதா ?| பாதிக்கப்பட்டவர், செயற் பொறியாளரின் தகவல் !

“கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த தலித் மக்கள் வெளியேற்றம், 25 வருடங்களாக அப்பகுதியில் வசித்து வந்த பூர்வக்குடிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் நடவடிக்கை, 270 வீடுகள் உள்ள நிலையில் 240 வீடுகள் மட்டுமே கணக்கு எடுத்துள்ளன” என சமூக வலைதளமே என சென்னை அரும்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வந்த மக்களின் வீடுகள் அகற்றப்பட்ட தகவலே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அங்குள்ள 240 வீடுகளில் 90 வீடுகள் அகற்றப்பட்டது என்றும், 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், மாற்று இடம் வழங்கவில்லை என்றும் வீடுகளை அகற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link

சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்ட வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று வீடுகள் அளிக்கப்பட்டதா, அவர்களின் நிலை என்னவானது என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பால்ராஜ் என்பவரிடம் பேசுகையில், ” நேற்று 240 வீடுகளில் 90 வீடுகளை அகற்றுவதாக கூறினார்கள். 93 வீடுகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாடகைக்கு இருந்தவர்களுக்கு அளிக்கப்படவில்லை. எனினும், அந்த 93 வீடுகளிலும் கூட 25 வீடுகள் இன்னும் வரவில்லை. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலத்திற்கு சென்று எழுதி கொண்டு விட்டு வந்தோம். எவ்வளவு வீடு வராமல் இருக்கிறது என்பது இன்று எடுக்கப்பட்ட பிறகு தான் தெரியும். வீடு அகற்றுவது தொடர்பாக எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை.

வீடுகள் ஒதுக்கப்படாதவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர், சிலர் பாலத்திற்கு அடியிலும் தங்கியுள்ளனர். வீடு ஒதுக்கப்பட்டவர்கள் கே.பி.பார்க்கில் உள்ள ஈ பிளாக்கில் உள்ளனர். நேற்று 40 குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார்கள், இன்று 20 குடும்பங்கள் வந்துள்ளனர். எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ” எனக் கூறி இருந்தார்.

ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் கரையோரம் வீடுகள் அகற்றப்பட்ட தருணத்தில் இரு நாட்களாக களத்தில் இருந்த 8 வது மண்டல செயற் பொறியாளர் அவர்களிடம் யூடர்ன்  தரப்பில் பேசுகையில், ” மொத்தம் 243 வீடுகளில் நேற்று மற்றும் இன்று மட்டும் சேர்த்து 93 வீடுகளை அகற்றினோம். அதில், 91 வீடுகளுக்கு கே.பி.பார்க்கில் மாற்று வீடுகள் கொடுத்துள்ளோம். 2016-ல் யாருக்கெல்லாம் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்ததோ அவர்கள் அனைவருக்கும் வீடுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. வீடுகள் ஒதுக்கப்பட்டு ஒரு மாதங்கள் இருக்கும்.

243 வீடுகளில் முதல் கட்டமாக 91 வீடுகளுக்கும், மீதமுள்ள 150 வீடுகளுக்கு அடுத்த கட்டத்தில் அளிக்கப்படும். அவர்கள் அனைவருக்குமே கே.பி.பார்க்கில் (புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு) கேட்டு உள்ளோம். 2016-ல் நடத்திய சர்வே அடிப்படையிலேயே தற்போது 243 வீடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நடந்த சர்வே அல்ல, அடுத்த கட்டத்தில் வரும் 150 வீடுகளுடன் கூடுதலாக வீடுகள் வழங்கப்படலாம். தற்போது 91 குடும்பங்களுக்கு கே.பி.பார்க்கில் வீடுகளை வழங்கி உள்ளோம். அவை நிரந்தரமானவை தான், தற்காலிகமாக அல்ல. அவர்களுக்கு பொருட்களை எடுத்து செல்ல வாகன வசதியும், 3 நாட்களுக்கு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் அகற்றப்பட்ட வீடுகளுக்கு பதிலாக 30 கி.மீக்கு மேல் தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக சில பதிவுகளில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால், முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட வீடுகள் கே.பி.பார்க்கில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. ராதாகிருஷ்ணன் நகரில் இருந்து 9 கி.மீ(தோராயமாக) தொலைவில் கே.பி.பார்க் பகுதி அமைந்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் ஒதுக்கப்பட உள்ள வீடுகளும் அங்கேயே அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வே கணக்கின்படி 243 வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி செயற் பொறியாளர் அளித்த தகவலின்படி அறிய முடிகிறது. எனினும், அதற்கு பிறகு அங்கு வந்த மற்றும் வீடுகள் ஒதுக்கப்படாத மக்களின் நிலையும் கவலைக்குரியதே. அவர்களுக்கான தங்குமிட வசதியையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Please complete the required fields.




Back to top button
loader