Factcheck : அரும்பாக்கம் எனப் பரவும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !

சென்னை அரும்பாக்கத்தின் ராதா கிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் நதி கரையோரம் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றப்பட்டன. இடிபாடுகளுக்கு பிறகு சுவர்களில் அம்பேத்கார் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல காட்சிகள் அடங்கிய புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் பல பழைய புகைப்படங்களும் கலந்தே அரும்பாக்கம் பகுதி என வைரல் செய்யப்பட்டு வருகிறது.
புகைப்படம் 1 :
” கல்வி இங்கே வீடு எங்கே, தொழில் இங்கே வீடு எங்கே ” என அம்பேத்கர் புகைப்படத்திற்கு மேலே சுவற்றில் எழுதப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரல். இயக்குனர் பா.ரஞ்சித் கூட இப்புகைப்படத்தின் ட்வீட் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
ஆக்கிரமிப்பு அல்ல
குறிப்பிட்ட சமூகத்தின் மேல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை#அரும்பாக்கம் pic.twitter.com/BepxxHAzoL
— BillaBalagi (@ak4115880) July 30, 2021
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021 ஜனவரி 27-ம் தேதி english.madhyamam எனும் இணையதளத்தில் இதன் முழுமையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில், ” தங்கவேல் தெரு மக்களின் நிலத்திற்கான போராட்டம் ” என இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
புகைப்படம் 2 :
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் சுவரில் அம்பேத்கரின் ஓவியம் தெரியும்படி எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படமும் அரும்பாக்கம் ராதா கிருஷ்ணன் நகர் என வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இப்புகைப்படமும், 2021 ஜனவரி 27-ம் தேதி english.madhyamam எனும் இணையதளத்தில் தங்கவேல் தெருவில் இருந்து பட்டியலின மக்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படங்கள் 3 & 4 :
அடுத்ததாக, இடிபாடுகளில் சிறுவர்கள் இருக்கும் புகைப்படமும், குறுகிய தெருவில் வீட்டின் முன் சிலர் அமர்ந்து இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பகிரப்பட்டு இருக்கிறது.
இவ்விரு புகைப்படங்களையும் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், முதல் புகைப்படம் 2019 டிசம்பரில் கூவம் அருகே சத்திய மூர்த்தி நகர் பகுதியில் வீடுகள் அகற்றப்பட்டதாக தி இந்து செய்தியிலும், இரண்டாம் புகைப்படம் 2017-ல் சென்னை குடிசை பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது தொடர்பாக thebetterindia இணையதளம் வெளியிட்ட கட்டுரையிலும் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 5 :
வீடுகள் இடிக்கப்படுவதை கைக்குழந்தை உடன் பெண் ஒருவர் பார்க்கும் புகைப்படம் அரும்பாக்கம் பகுதி என பகிரப்படும் புகைப்படங்களின் தொகுப்புகளில் இடம்பெற்று இருக்கிறது.
இதை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், ” சென்னை காந்திநகர் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்துவதை மே பதினேழு இயக்கம் கண்டித்துள்ளது ” என 2020 டிசம்பரில் சமயம் வெளியிட்ட செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
புகைப்படம் 6 :
இடிபாடுகளில் இருந்து மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களை சிறுவர்கள் எடுக்கும் புகைப்படமும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் அரும்பாக்கம் எனக் குறிப்பிட்டு பகிரப்பட்டு வருகிறது.
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், கூவம் பகுதி அருகே எஸ்.எம் நகரில் வீடுகள் இடிக்கப்பட்டதாக 2020 டிசம்பரில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : அரும்பாக்கத்தில் வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டதா ?| பாதிக்கப்பட்டவர், செயற் பொறியாளரின் தகவல் !
அரும்பாக்கம் என தற்போது வைரல் செய்யப்பட்டு வரும் பல புகைப்படங்கள் யாவும் பழைய புகைப்படங்களே. அவை அனைத்து கூவம் அருகே வசித்த மக்களின் வீடுகள் அப்புறப்படுத்திய போது எடுக்கப்பட்டாலும் பல மாதங்கள், பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. 2021 ஜனவரி மற்றும் 2020 டிசம்பர் உள்பட சென்னையில் கூவம் அருகே குடிசைப் பகுதி வீடுகள் அகற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அரும்பாக்கம் என தவறாக வைரல் செய்து வருகின்றனர்.
Links :
Drive to evict over 2,000 families in S.M. Nagar begins
1.48 Lakh Families of Slum Dwellers in Chennai to Get Houses Within the City