This article is from Sep 30, 2018

நிர்மலாவை சிக்க வைத்த நிர்மலா..!

இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் நிர்மலா தேவி ஆடியோ. தன்னிடம் படிக்கும் மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்ய பேசிய ஆடியோ பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் சந்தித்தது. காவல்துறை தரப்பில் யாரும் புகார் அளிக்கப்படாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி, ஆடியோ, அவர் பற்றிய விவரம் என அனைத்தும் வெளியானது. அருப்புக்கோட்டையின் இணைய பக்கங்கள் கொதித்தெழுந்து இதைப் பற்றி எழுதி வந்தனர். அருப்புக்கோட்டை அரண்கள், அருப்புக்கோட்டை, நம்ம ஊரு அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை நியூஸ் ஆகிய பக்கங்கள் இந்த விசயத்தை பற்றி சிரத்தை எடுத்து எழுதி வந்தனர்.

அது மெல்ல மெல்ல பரவி தமிழ்நாட்டின் செய்தியாக வந்து நிற்கிறது. சமூக வலைத்தள பக்கங்களின் பங்களிப்பு இதன் மூலம் புரிந்து இருக்கும். இந்த விசயம் கசிந்த உடன் கல்லூரி நிர்வாகம் அவரை 15 நாள் இடை நீக்கம் செய்திருந்தது. ஆனால், அந்த நடவடிக்கை போதாது என அனைவரும் வெகுண்டு எழுந்தனர். அந்த கல்லூரியின் செயலாளர் அளித்த பேட்டியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொல்வது தவறு, இடைநீக்கம் செய்திருக்கிறோம் விசாரணை செய்து அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். ஆனாலும், காவல் துறைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உதவி பேராசிரியர் நிர்மலா மாணவிகளிடம் பேசியது நான் தான், ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மட்டும் கூறியிருந்தார்.

இதில் அந்த மாணவிகளின் செயல்பாடு துணிச்சலானது, பாராட்டுக்குரியது. நிர்மலாவின் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்காமல் வேலை, மதிப்பெண், பணம் எதுவும் முக்கியம் அல்ல என்ற துணிவுடன் எதிர்த்தது மட்டுமின்றி மிக விவரமாக அந்த உரையாடலை பதிவு செய்து இருக்கிறார்கள். நேரடியாக அவரோடு மோதி இருந்தால் வேறு வகையான சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கலாம். அந்த ஆதாரத்தை சேகரித்து அவரிடம் இல்லை இல்லை நாங்கள் உங்களை பற்றி வெளியே சொல்ல மாட்டோம் என்று சொல்லி விட்டு சமூகத்திற்கு தெரியப்படுத்திய அந்த புத்திசாலித்தனம் பாராட்டப்பட வேண்டியது. ஏனென்றால், இதற்கு முன் இப்படி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா ? இதில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார் யார் ? பல்கலைக்கழகத்தில் தொடர்புடையவர்கள் யார் ? இதேபோல் வேறு எந்தெந்த கல்லூரியில் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், கவர்னர் பெயரும் இதில் அடிப்படுகின்றதே என்ற விசயங்களும் சிந்திக்க வேண்டியது.

அனைத்து இடங்களில் எதிர்ப்பும், கேள்வியும் எழுந்தாலும் நடவடிக்கையே எடுக்கப்படாமல் இருந்த நேரத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் சி.பி.எம் மாதர் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் நிர்மலா ராணி அருப்புக்கோட்டைக்கு திருச்சியில் இருந்து வந்து கல்லூரிக்குள் சென்று போராட்டம் நடத்தினார். அவர் போராடியதும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும் அனல் பறந்தது என்கின்றனர் அருப்புக்கோட்டைவாசிகள்.

அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து விட்டீர்கள் என்று உங்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தால் என்ன செய்வீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு இங்க விபச்சாரத்தை ஊக்குவிக்க முயன்ற ஆசிரியர் மீதே நடவடிக்கை இல்லை, என் மீது எடுத்தால் எப்படி சந்திக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று பதிலளித்து அதிரச் செய்திருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து தந்த அழுத்தத்தில் நிர்மலா தேவி மீது வழக்கு தொடுக்க, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைதாகியுள்ளார் நிர்மலா.

அம்பை பிடித்து விட்டார்கள் இனி வில்லையும், எய்தவனையும் பிடித்தால்தான் முழுமை பெறும். அதுவே அனைவரின் எதிர்பார்ப்பும். அதற்காக போராடிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Please complete the required fields.




Back to top button
loader