பிரபல குழந்தை நட்சத்திரம் பற்றி ஆபாச தலைப்பு !

மக்களை ஈர்ப்பதற்காக செய்திகளை விரைவாக கூற முயற்சிப்பது போல் செய்தியின் தலைப்புகளும் வித்தியாசமாக, பொருந்தாமல் இருப்பதை பார்த்து இருப்போம். அரசியல் உள்ளிட்ட செய்திகளே இப்படி என்றால் சினிமா தரப்பு செய்திகளுக்கு சொல்லவே வேண்டாம். ஒன்று என்றால் இரண்டு எனத் திரித்து செய்தியை வெளியிடுவர்.

சினிமா செய்திகளை மக்கள் அதிகம் விரும்புவதால் ஒன்றும் இல்லாத செய்திகளுக்கு கூட ஆபாசமான தலைப்புகளை வைத்து விடுகின்றனர். இணைய செய்தி நிறுவனங்கள் அதிகரிப்பதால் வெளியாகும் செய்தி பற்றி எதிர்ப்பு ஏதும் பெரிதாக வெளியாவதில்லை.

நடிகர், நடிகைகள் மட்டுமின்றி திரைத்துறையில் முகம் காட்டும் குழந்தை நட்சத்திரங்கள் வரையிலும் எதையாவது எழுதி தள்ளுகின்றனர். அதில், எல்லையையும் மீறி விடுகின்றனர். அப்படியான ஒரு செய்தியை இணைய செய்தி தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது.

Asianet News “ என்ற செய்தி நிறுவனத்தின் இணைய தளத்தில் “ தெய்வதிருமகள் “ படத்தில் நடித்த சாரா பற்றிய சாதாரண செய்திக்கு “ தொப்புள் தெரிய ஹீரோயின் போல் போஸ் கொடுத்த “ தெய்வ திருமகள் “ சாரா “ என்ற தலைப்பு.

வயது உயர்ந்த காரணத்தினால் ஹீரோயின் போல் தெரிகிறார் என்ற ஒற்றை செய்திக்கு இவ்வாறான தலைப்பு. சாராவுக்கு தற்போது 13 வயது ஆகிறது. இந்த செய்தியின் உள்ளே சாரா நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணைத்து உள்ளனர்.இதனை எழுதியதே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலை இந்துஜா என்ற பெண் பத்திரிகையாளர்  ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார், இதையடுத்து இணையதளத்தில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. எனினும், Asianet ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்படாமல் அதே தலைப்பு, படத்துடன் இருந்து வருகிறது. தொடர்ந்து அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஆபாச தலைப்பு இருப்பது வருந்தத்தக்கது. இம்மாதிரியான தவறுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு முன்னோடி பத்திரிகை தமிழில் காலடி வைக்கும் பொழுது ஆபாச தலைப்புகள் மூலம் வாசிப்பாளர்களை பெற நினைக்கக்கூடாது.

பத்திரிகை தர்மம் எது என்பதை அறியாமல் எதையாவது எழுத வேண்டும் என நினைக்கக் கூடாது. இது ஒரு குழந்தையை தவறாக சித்தரிக்கும் செயலாகும். POCSO சட்டத்தில் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் செயலுக்கு தண்டனைகள் உள்ளன என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

செய்திகளில் கண்ணியம் காக்க வேண்டும் என்பது பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள் அறிதல் அவசியம்.

Please complete the required fields.




Back to top button