சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்…

ஆஷிஃபா சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தபட்ட 8 பேரை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சிறுமி ஆஷிஃபா கொலை சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் அதிகளவில் #justice for asifa வைரலாகி வருகிறது. இதற்கிடையில், விசாரணையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்ற போது, இந்த வழக்கில் சி.பிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் எதற்காக கதுவா வழக்கில் சி.பிஐ விசாரணை அமைக்க வேண்டும் என போராடியதற்கான காரணங்கள் என்று கூறி பொய்யான தகவல்களை பதிவிட்டுள்ளது ஃபேஸ்புக் பக்கமான சங்க்நாத். இந்த பதிவானது 7,600-க்கும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டுள்ளது.
வதந்திகளும், உண்மைகளும் :
- ஆஷிஃபா சிறுமியின் முதல் பிரேதப் பரிசோதனையில் கொலை செய்யப்பட்டதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.
- குற்றப்பத்திரிகையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரேதப் பரிசோதனை நடந்ததாக ஏதும் குறிப்பிடவில்லை. சிறுமியின் உடல் கிடைத்த ஜனவரி 17-ம் தேதி 2:30pm அளவில் மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
- ஆஷிஃபா சிறுமியை கொலை செய்வதற்கு முன்பாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- மக்கள் அதிகம் வந்து செல்லும் தெருவின் நடுவில் அமைந்துள்ள கோவிலில் சிறுமியை 8 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வாய்ப்பில்லை.
- சிறுமி ஆஷிஃபா 8 நாட்கள் அடைத்து வைக்கப்படவில்லை. 6 நாட்கள் மட்டுமே அடைந்துள்ளனர். ஜனவரி 15-ம் தேதி சிறுமியின் உடலை ராசனா வனப்பகுதியில் வீசியுள்ளனர்.
- மேலும், சிறுமி அடைத்து வைக்கப்பட்ட கோவில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி வீடுகள் ஏதும் இல்லை.
- கோவிலை நிர்வகித்து வந்த சஞ்சிராம் என்பர் தான் இக்குற்றத்திற்கு திட்டம் தீட்டியவர். கிராமத்தில் கோவிலுக்கு சிறுது தூரம் தள்ளி இருக்கும் வீடுகளில் இவரது வீடும் ஒன்று.
- சிறுமியின் உடலில் சேறு படிந்துள்ளது. கோவில் இருக்கும் பகுதியில் சேறுகள் இல்லை. ஆக, சிறுமியை வேறு எங்கோ கொன்று விட்டு உடலை கோவிலில் வீசியுள்ளனர்.
- தடயங்களை அழிப்பதற்கு வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் துட்டா மற்றும் திலக் ராஜ் ஆகியோர் தங்களுக்குள் சதித் திட்டம் தீட்டி, சஞ்சி ராம் சிறுமியின் உடையை துவைத்துள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
- வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு கோவிலில் உடலை வீசியதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது ராசனா வனப்பகுதியில்.
- கோவில் வளாகத்தில் கிடைத்த தலை முடியை DNA பரிசோதனை செய்ததில் பாதிக்கப்பட்ட குழந்தை கோவிலில் இருந்துள்ளார் என்பதை குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர்.
- ரோஹிங்கியாவில் இருந்த வந்து வசித்து வரும் மக்களிடம் விசாரிக்கும் படி அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆனால், அரசு அவர்களை மிரட்டியுள்ளது.
- உரிய அனுமதியுடன் ரோஹிங்கியா மக்கள் ஜம்முவில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு முன்பு 3 ஆண்டுகளாக உள்ளூர் மக்களால் வேறுபாடு பிரச்சனைகள் இருந்துள்ளன.
- குற்றவாளிக்கு ஆதரவாக போராடி, குற்றவியல் விசாரணைக்கு தடையாக இருந்தவர்களையே போலீஸ் எச்சரித்துள்ளனர்.
- ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி புதிய வழக்கை உருவாக்க இர்ஃபான் வானி என்ற அதிகாரியை அனுப்பியுள்ளார். இர்ஃபான் வானி ஏற்கனவே ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் அக்குழந்தையின் சகோதரரை போலீஸ் கஸ்டடியில் வைத்து கொன்றவர்.
- முதல் பாதி தவறு. முதல்வர் மெகபூபா முப்தி விசாரணை குழுவின் உறுப்பினர்களை தேர்வு செய்யவில்லை.
- ரமேஷ் குமார் ஜல்லா என்பவரின் தலைமையில் குற்றவியல் தனிப்படையை முப்தி நியமித்துள்ளார்.
- இர்ஃபான் வானி வருகைக்கு பிறகு புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தடயவியல் அறிக்கை இன்றி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. மேலும், விசாரணை என்று கூறி அங்குள்ள மக்களை சித்ரவதை செய்துள்ளனர்.
- சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து தடயங்களை அழித்துள்ளனர் என்று தடயவியல் துறையின் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.
- பிரேதப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று குறிப்பிட்டதை மையமாக கொண்டே விசாரணையை நடத்தியுள்ளனர்.
- உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். ஜம்மு போலீஸ் உள்பட அப்பாவிகள் குற்றவாளிகள் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
- இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று குற்றப்பத்திரிகையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
- முழு விசாரணையில் கிடைத்த தடயங்களை வைத்தே உண்மையான குற்றவாளிகளை சிறப்பு போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கதவே இல்லாத கோவில் என்று கூறிய ஹெச்.ராஜா :
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, காஷ்மீர் சிறுமி கொலை சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் மற்றும் இந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். மேலும், சிறுமி கோவிலில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கதவே இல்லாத கோவிலில் எவ்வாறு ஒரு சிறுமியை 7 நாட்கள் அடைத்து வைக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்.
ராசனா பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள காளி வீர் மந்திர் என்ற கோவிலில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸின் குற்றப்பத்திரிகை தெரிவிக்கின்றன. காளி வீர் மந்திர் மூன்று கிராமத்தில் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தின் குடும்பங்களுக்கு குல தெய்வமாகும்.
பாபா காளி வீர் கடவுளுக்காக ஒரே ஒரு அறை கொண்ட கோவிலை கட்டியுள்ளனர். இதில், மூன்று கதவுகளும், அதற்கென மூன்று பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சாவிகள் மூன்று கிராமத்திற்கும் ஆளுக்கு ஒன்றாக உள்ளது. இதில், ஒரு சாவி கோவிலின் பாதுகாவலரும், சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராமிடன் இருந்துள்ளது.
கோவிலின் தேவஸ்தானத்தில் இருந்த மேசைக்கு அடியில் மயக்கமடைந்த நிலையில் சிறுமியை துணியில் சுற்றி மறைத்து வைத்ததாக போலீஸ் தெரிவித்துள்ளனர்.
சிறுமி ஆஷிஃபா பாடும் வீடியோ :
ஆஷிஃபா இறப்பிற்கு பின்பு அக்குழந்தை பற்றிய பல பதிவுகள் வைரலாகி வருகிறது. அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆஷிஃபா குழந்தை இறுதியாக பாடிய பாடல் எனக் கூறி குழந்தை ஒன்றின் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது ஆஷிஃபா குழந்தை அல்ல. டெல்லியை சேர்ந்த கவிஞரான இம்ரான் பிரதாப்கார்கி என்பரின் ரசிகர்கள் வலைத்தள பக்கத்தில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தாம் பதிவிட்ட வீடியோ பதிவை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இம்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வீடியோ தனது ரசிகர் ஒருவரின் சகோதரி மகள் பாடிய வீடியோ என்றும், இதை ஜூலை 18, 2017-ல் வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு, ஏதோவொரு குழந்தையின் வீடியோ பதிவை ஆஷிஃபா குழந்தை பாடும் வீடியோ என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.
ஆஷிஃபாவின் தந்தை என்று போலியாகச் சித்தரித்த வீடியோ :
சிறுமி ஆஷிஃபாவின் தந்தை என்று கூறி ஒருவர் பேசும் வீடியோ பதிவு youtube உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அதிகம் பரவி வருகிறது. அதில், பிஜேபி கட்சிக்கு பிரச்சாரம் செய்வது போன்று உளறுகின்றார் என்று கூறப்படுகிறது.
ஆஷிஃபாவின் தந்தை முகமது யூசப் புஜ்வாலா என்று ஒருவரை போலியாக சித்தரித்து கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்கள் மூலம் மக்களின் எண்ணத்தை மாற்ற முயல்கின்றனர்.
ஆஷிஃபாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பேசிய வீடியோ பதிவுகளில் அவர்கள் வேதனையின் உச்சத்தில் பேசுவதை அறியலாம். குறிப்பிட்ட வீடியோவில் ஆஷிஃபாவின் தந்தை எனது மகள் நீதிக்காக தற்போதுவரை காத்திருக்கிறாள் என்று தன் உள்ளத்தின் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
அரசியல் லாபத்திற்காக கட்சிகளின் தொழில்நுட்ப பிரிவுகள் எந்த எல்லைக்கும் செல்வர் என்பதற்கு இதுவே சான்று.
இங்கு மட்டுமின்றி இந்திய அளவில் ஆஷிஃபா குழந்தை கொலை சம்பவத்தில் பல வதந்திகளை பரப்பி மக்களிடையே தவறான எண்ணத்தை தோற்றுவிக்கவும், மத உணர்வை தூண்டும் தரம் தாழ்ந்த செயலை சிலர் செய்து வருகின்றனர்.
kathua rape case: temple sullying strike raw nerve
Asifa still waiting for justice