This article is from Sep 30, 2018

ஆஷிஃபா குழந்தைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பிற பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு தரவில்லையா?

நாட்டை உலுக்கி இருப்பது இரண்டு பாலியல் வன்புணர்வு சம்பவம். ஒன்று உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீதானது, இரண்டு ஜம்மு-காஷ்மீரில் பச்சிளம் குழந்தை ஆஷிஃபா கடும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது. இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பல.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்வது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு. மத்தியில் இருப்பதும் பாஜக தலைமையிலான அரசே. யோகி ஆதித்யநாத் பெரிய ஆன்மீகவாதி என்றும், அவர் தேச நலனில் மிக அக்கறைக் கொண்டவர் என்றும் பாஜகவினரால் தொடர்ந்து கொண்டாடப்படுபவர். அப்படியானவரின் ஆட்சியில் ஒரு பாலியல் வன்புணர்வை ஒரு எம்.எல்.ஏவே செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதெனில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காமல் அந்த பெண்ணை போராட வைத்து, பெரும் போராட்டத்திற்கு பின் இப்போதுதான் சி.பி.ஐ அந்த எம்.எல்.ஏவை சிறைப்பிடித்து இருக்கிறது.

இந்த வழக்கு தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக போன வருடம் ஆகஸ்ட் 17-ம் தேதி கொடுக்கப்பட்டது. இதில், அந்த பெண்ணுடைய தந்தை எம்.எல்.ஏ உடைய சகோதரரால் தாக்கப்பட்டதும், காவல் துறையின் கஸ்டடியில் இருந்த போது அவர் இறந்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பின்னேதான் இந்த நடவடிக்கை எல்லாம் நடந்திருக்கிறது. என்னை குற்றம்சாட்டிய அவர்களெல்லாம் லோகிளாஸ் மக்கள் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ குல்தீப் சிங். தன்னை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போராடும் அந்த பெண்ணின் வயது 18. இதற்கு நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு அளித்த பதில் போதுமான ஆதாரம் இல்லாததால் கைது இல்லை என்று. இப்படித் தொடர்ந்து தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து கடைசியில் சி.பி.ஐ வந்து கைது செய்து இருக்கிறது. ஆகஸ்ட் மாதமே நடவடிக்கை எடுத்து இருந்தால் அப்பெண்ணின் தந்தை இறந்திருக்க மாட்டார் என்று அலகாபாத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திலீப் போஸ்லே கடுமையாக கண்டித்திருக்கிறார்.

ஒரு தேசத்தின் நம்பிக்கையாக இருக்க வேண்டியவர்களின் இடத்தில் இப்படியான கிரிமினல்களை வைத்தது முதல் தவறு. தன்னை நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்காதது இரண்டாம் தவறு. அவருக்கு ஆதரவாக செயல்பட்டது மூன்றாம் தவறு. இதை எதையும் செய்யாததால்தான் இது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய, மாநில ஆட்சியை வைத்திருக்கும் கட்சியில் இருந்து கொண்டு ஆன்மீகத்தை முன்னெடுக்கிறோம் என்று சொல்பவர்கள் அப்பழுக்கு இல்லாமல் நடந்திருக்க வேண்டும். அதை செய்யாதது யார் தவறு ?

ஆஷிஃபா ஒரு பச்சிளம் குழந்தை, அந்த குழந்தை இறந்து மூன்று மாதம் ஆகிறது. இப்போதுதான் இது தேசிய கவனத்தை ஆற அமர ஈர்த்துள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தேசிய கொடியை தூக்கிக் கொண்டு திரிந்தவர்களை என்ன சொல்ல ? அதற்கு ஆதரவான போராட்டத்தில் இரண்டு பாஜக அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தேசமே வெகுண்டெழுந்த பின் அவர்கள் நேற்று தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு குழந்தை கடத்தப்பட்டு கோவிலில் அடைத்து வைக்கப்பட்டு கடுமையான போதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறாள். அதற்கு ஆதரவாய் ஆளும் பாஜக அமைச்சர்கள் போராட வருகிறார்கள். கோவிலின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள் என்று இந்த வேலையை செய்த அயோக்கியர்கள் மீது பாய்ந்து இருந்தால் ஹிந்து மதத்தை காக்க நீங்கள் துடிப்பதாக ஏற்றுக் கொள்ளலாம். இரண்டு அமைச்சர்கள் ஆதரவாய் போய் நின்றதை எதிர்த்து திமிறி இருந்தால் உங்கள் கட்சியின் புனிதத்தை காக்க துடிக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து சப்பைக் கட்டு கட்டுவது போல் முயற்சிப்பது போன்ற அயோக்கியத்தனம் வேறேதுமில்லை.

இதை திசைத் திருப்ப இந்த வழக்கைப் பார், அந்த வழக்கை பார், இந்த மதத்தினரை பார், அந்த மதத்தினரை பார் என்று பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். அதில் எல்லாம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த ஆளும் கட்சியும் எம்.எல்.ஏவும், அமைச்சரும் பாதுகாக்கவரவில்லை. இதில், நீதி தாமதிக்கப்பட்டதும், அதில் சம்பந்தப்பட்டது ஆளும் தரப்பாகவும் இருந்ததுதான் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தனை எதிர்ப்பும் காட்டியபின் காலம் தாழ்த்தி பிரதமர் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“ கடந்த இரு நாட்களாக நிகழ்ந்த சம்பவங்கள் மேம்பட்ட சமூகத்திற்கு ஒரு சங்கடம். எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதி வழங்கப்படும். அந்த மகள்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும். நாம் அனைவரும் தற்போது உள்ள இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் ”

ஆஷிஃபாவை கொன்றது ஒரு முஸ்லீம் என்றும் ஒரு புரளியை கிளப்பி இருக்கிறீர்கள்.

ஆஷிஃபா சிறுமி வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஒரு மாதத்தில் காஷ்மீரின் பஜல்டா பகுதியில் மட்ராசா இடத்தில் 7 வயது நாடோடி இனச் சிறுமியை பலாத்காரம் செய்த moulvi Shahnawaz என்ற முஸ்லீம் மதக்குரு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் உண்மை எனினும் ஆஷிஃபா சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி வதந்தியை பரப்பி உள்ளனர்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி இரவில் கர்நாடகா மாநிலத்தின் ஹலியல் தாலுக்காவில் உள்ள கர்டோல்லி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக வசித்து வந்த விதவையான சாந்தி என்ற பெண்ணை 9 பேர் தொடர்ந்து 9 நாட்கள் போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை 9 நாட்களாக விதவை பெண் சாந்தியின் வீட்டிலேயே 9 இளைஞர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கொடூரமான செயலை செய்த 9 இளைஞர்களையும் போலீசார் கைது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆஷிஃபா சிறுமி வன்கொடுமை செய்தி வைரலாகிய இத்தருணத்தில் இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வன்புணர்வோ, கொலையோ அதை யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் மதத்தை கடந்தவர்கள். ஆட்சியாளர்கள் குற்றவாளியை காப்பாற்றாத பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும் எனில் தேசம் ஏன் கிளர்ந்து வர போகிறது. குழந்தை வன்புணர்வு என்ற செய்தியை கேட்கும் காதுகள் நமக்கு இருப்பதே மாபெரும் சாபம். அந்த கட்சியின் உண்மை தொண்டர்கள் மேல் நிலையில் இருக்கும் இது போன்றவர்களின் சட்டையை பிடிக்க வேண்டும்.

Rapist Moulvi taken to nagorta PHC 

Women drugged and raped in her own house 

Please complete the required fields.
Back to top button
loader