அசாம் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம்.. மறுவாக்கெடுப்பு நடத்த உத்தரவு !

அசாம் மாநிலத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்ட இயந்திரத்தை(EVM) அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

சுமார் 77% வாக்கு பதிவுகளுடன் அசாம் மாநிலத்தில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள ரதபாரி என்னும் தொகுதியில் கிரிஷ்னெண்டு பால் என்பவர் பாஜக  சார்பில் போட்டியிடுகிறார். அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்கின்ற காட்சி சமூக வலைதளங்களில் கடந்த ஏப்ரல் 1 இரவு வெளியாகி பரபரப்புக்கு உள்ளானது.

இந்த சம்பவத்தை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்த தொகுதியில் பணிபுரிந்த நான்கு தேர்தல் ஆணையம் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விளக்கம் ஒன்றையும் வெளியிட்டது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு முடிவு பெற்றவுடன் ரதபாரியில் இருந்து மாவட்ட தலைநகரான கரிம்கன்ச்சுக்கு செல்ல போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் ஆயுத பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது, சுமார் இரவு 9 மணி அளவில் தேர்தல் ஆணையத்தின் வாகனம் ‘நிலம் பஜார்’ எனும் இடத்தில் பழுதாகி நின்றுள்ளது.

இதையடுத்து அத்தொகுதியின் செக்டர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று வாகனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, தாமதம் ஆனதால் சுமார் 9.20 மணி அளவில் AS-10B-0022 எனும் பதிவெண்ணைக் கொண்ட ஒரு வாகனத்தின் உரிமையை சரிபார்க்காமல் அந்த வாகனத்தில் வாக்கு இயந்திரத்தை ஏற்றி சென்றதாகவும், அதன் பிறகுதான் அது அத்தொகுதி பாஜக வேட்பாளரின் மனைவியின் வாகனம் என தெரியவந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், சுமார் 10 மணி அளவில் அந்த வாகனம் கரிம்கன்ச்சை அடைந்த பொழுது, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்து கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஒருவர்,” இந்த வாக்கு இயந்திரம் சிதைக்கப்பட்டுள்ளது, இது அத்தொகுதி வேட்பாளருடைய மனைவியின் வாகனம்” என அவர் கூறிய பிறகுதான் தேர்தல் அதிகாரிகளுக்கு முழு விவரங்கள் தெரிந்ததாகவும், தகவல் அறிந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அங்கு வந்து ஆய்வு செய்த பொழுது வாக்கு இயந்திரம் எந்த ஒரு சேதமும் இல்லாமல் சீல் பிரிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கெடுப்பு நடத்துவதாகவும், ஒரு தேர்தல் அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு எந்திரங்களை கையாள்வதில் மெத்தனம் காட்டிய தேர்தல் ஆணையம் மீது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “நான் தென்னிந்தியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பதால் இச்சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் கூறியபடி நடந்திருந்தால் தேர்தல் ஆணையம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் எப்போதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தடையாக இருந்ததில்லை” என இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்( பயிற்சி) 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button