போலீஸ் துப்பாக்கிச்சூடு, உடலை மிதிக்கும் போட்டோகிராபர்.. அசாமில் என்ன நடந்தது ?

பாதுகாப்பு உடையுடன் குவிந்து இருக்கும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகளுடன் தொடங்கும் வீடியோவில், வேட்டி அணிந்து கொண்டு போலீசாரை நோக்கி கம்புடன் தாக்க வரும் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர் கீழே விழுகையில் பலரும் தடியடி நடத்துகிறார்கள். பின்னர் உடனிருக்கும் போட்டோகிராபர் கீழே இருப்பவரின் உடலின் மீது குதித்து கொலைவெறியில் தாக்குகிறார். தாக்கப்பட்டவரின் நெஞ்சில், காலில் குண்டடிபட்ட இரத்த காயங்கள் காண்பிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது.

இதுவே பாஜக ஆளும் மாநிலத்தின் நிலை என்றும், இனப்படுகொலை என்றும் இத்தாக்குதல் சம்பவத்தின் வீடியோ உடன் கண்டனப் பதிவுகள் ஏராளமாய் பதிவிடப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது ? 

2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, அரசாங்க நிலங்கள், கோவில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களை ” ஆக்கிரமிப்பு ” செய்தவர்களிடம் இருந்து மீட்டு மாநிலத்தின் பூர்வீக நிலமற்ற மக்களுக்கு வழங்குவதாகும்.

” சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை ” அகற்றும் மாநில அரசின் நடவடிக்கையாக அசாம் மாநிலத்தின் சிபஜார் பகுதியில் தோல்பூர் 1 மற்றும் தோல்பூர் 3 கிராமங்களில் செப்டம்பர் 20-ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 20-ம் தேதி அன்று நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது போலீஸ் மற்றும் போராட்டம் நடத்திய குடியிருப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர் ஒருவர் போலீசார் குழுவை நோக்கி கையில் தடியுடன் தாக்க வந்த போது மார்பில் சுட்டு பின்னர் கொடூரமாகவும் தாக்கப்படுகிறார். அதில், அதிர்ச்சியூட்டும் விசயம், மாவட்ட நிர்வாகத்தால் அமர்த்தப்பட்ட ஒரு போட்டோகிராபர் கீழே விழுந்தவரின் உடலில் குதித்து கொலைவெறியில் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ வைரலான பிறகு, அந்த போட்டோகிராபர் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட பிஜோய் சங்கர் போனியா என அடையாளம் காணப்பட்டார். ” நான் வீடியோவைப் பார்த்த தருணத்தில், அந்த போட்டோகிராபரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டேன். இதுபோன்ற செயல்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை ” என அசாம் மாநில டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா தெரிவித்து இருக்கிறார்.

போராட்டக்காரர்களை கலைப்பதற்கு முதலில் வானில் சுட்டதாகவும், அது தோல்வி அடைந்ததால் மக்களை நோக்கி சுட்டதாக தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சதாம் உசேன் மற்றும் ஷேக் ஃபோரிட் என இருவர் கொல்லப்பட்டுள்ளனர், குறைந்தது 10 பேர் காயமடைந்ததாகவும், போலீஸ் தரப்பில் 9 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வமா சர்மா, இந்த நிகழ்வை கண்டிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் திலீப் சைகியா கூறுகையில், இந்த பணிகளுக்கு முன் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் அரசாங்க நிலத்தை அபகரித்து குடியேறினர் ” எனக் குற்றம் சாட்டியதாக நேஷனல் ஹெரால்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அசாம் மாநிலம் தர்ராங் மாவட்ட நிர்வாகம் 602.40 ஹெக்டேர் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 800 குடும்பங்களை வெளியேற்றியதாகவும், சிபஜாரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 4 மதக் கட்டமைப்புகளையும் இடித்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Links :

cameraman-seen-stomping-body-protester-after-assam-police-firing-arrested

assam-video-captures-horrific-police-brutality-dholpur-clashes-reporter-beats-man

assam-eviction-drive-2-killed-20-hurt-in-police-action-but-cm-says-action-will-continue

Please complete the required fields.




Back to top button
loader