This article is from Jul 21, 2019

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவிட கரம் கொடுங்கள் !

வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்டவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. கனமழையின் காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 140-ஐ தாண்டி உள்ளது. சுமார் ஒரு கோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகி உள்ளன.

பீகாரில் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழையால் 66 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் குழந்தைகள், கால்நடைகளின் உயிரிழப்புகளும் அதிகமாய் இருக்கிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்பு குழு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில் ராணுவமும் இணைந்து மக்களை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்டு வருகின்றார்கள்.

கனமழை, வெள்ள பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் தவித்து வருகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தவிக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான வெள்ள நிவாரணப் பொருட்களை தமிழகத்தின் சென்னையில் இருந்து எடுத்துச் செல்ல தன்னார்வலர்கள் பலரும் ஒன்றிணைத்து முயன்று வருகின்றனர்.

இதில், மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அளிக்க முன்வருபவருக்காக சென்னையில் 26 இடங்களில் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தி உள்ளனர். மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை மட்டுமே பெற்று வருகின்றனர். பணம் பெறுவதில்லை.

உணவு பொருட்கள், புதிய உடைகள், பெட்சீட், சானிட்டரி நாப்கின்ஸ், சோப்புகள், மெழுகுவர்த்தி மற்றும் மருந்து பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

வெள்ள நிவாரணப் பொருட்களை சேகரிக்க சென்னையில் மெரினா, தாம்பரம், வண்டலூர், கிண்டி, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட 26 மையங்களுக்கும் தனித்தனியாக தொலைப்பேசி எண்களை அளித்து உள்ளனர். முதல் பேட்ஜ் ஆக சேகரிக்கப்படும் பொருட்கள் ஜூலை 25-ம் தேதி சென்னையில் இருந்து கவுகாத்தி-க்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருபவர்கள் மேலே அளிக்கப்பட்டு உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்ந்து கொண்டு உங்களால் முடிந்த வெள்ள நிவாரணப் பொருட்களை அளித்து உதவலாம்.

Please complete the required fields.




Back to top button
loader