This article is from Jul 13, 2021

இந்துக்கள் வசிப்பிடம், கோவிலை சுற்றி 5 கி.மீ பகுதியில் மாட்டிறைச்சி விற்க தடை : அசாமில் புதிய மசோதா !

இந்து, சமண, சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி சாப்பிடாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் அல்லது கோவில்கள், வைணவ மடங்கள் உள்ள பகுதிகளின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டு இறைச்சிகள் விற்க தடை செய்யும்படியான புதிய மசோதா அசாம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக , ஜூலை 7 அன்று அசாம் அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா, 2021 ஐ கடந்த ஜூன் 12ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அசாம் மாநிலத்தின் கால்நடை பாதுகாப்பு சட்டம் 1950-ஐ இது மாற்றி அமைக்கும்.

1950 சட்டத்தின்படி, “14 வயதுக்கு மேற்பட்ட” அல்லது “வேலைகளில் ஈடுபடுத்த முடியாத கால்நடைகளுக்கு” மட்டும் உள்ளூர் கால்நடை அதிகாரி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் இறைச்சிக்கு அனுப்பப்படும். ஆனால் இந்த புதிய மசோதாவின் படி அனைத்து கால்நடைகளுக்கும் ஒப்புதல் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். ‘காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகள்’ அடங்கிய அனைத்து கால்நடைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்படுகிறது. எவ்வாறாயினும் வயது வரம்பு இன்றி எந்த பசுக்களையும் இறைச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய வரைவு சட்டத்தின் படி, மாநிலத்துக்குள் மற்றும் அசாம் மாநிலம் வழியாக முறையான கால்நடை படுகொலை சட்டம் இல்லாத பிற மாநிலங்களுக்கு, கால்நடைகளை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்ல முடியாது என தெரிவிக்கிறது.

மேகாலயா, மிசோரம், நாகாலாந்து போன்ற இந்தியாவின் பிற வடகிழக்கு பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக அசாம் உள்ளதால், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாய தேவை, மாட்டிறைச்சி போன்ற காரணங்களுக்கான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மாட்டிறைச்சி வணிகம் தான் கிருத்துவ பெரும்பான்மை உடைய மேகாலயா மாநிலத்தில் உள்ள பெருவாரியான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இதுகுறித்து அம்மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறையின் முதன்மை செயலாளர், ஜி.எச்.பி ராஜு கூறியதாவது, “எங்கள் சந்தையில் மாட்டிறைச்சி பற்றாக்குறை இருப்பதாக துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.. பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து கால்நடைகளை எங்கள் மாநில இறைச்சி வணிகர்கள் கொண்டு வருகின்றனர்… நாங்கள் அதிகப்படியான இறைச்சியை உட்கொள்ளும் ஒரு மாநிலம். எனவே அதன் விநியோகத்தில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் விலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் அது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்..”

“..பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்ற அசாம் அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பிற மாநிலங்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் நம் மாநிலத்தின் ஏழை விவசாயிகளுக்கு எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது வழிவகை செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமின் இந்த மசோதா குறித்து, அது அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஹிந்து செய்தி நிறுவனத்திற்கு அவர் கூறியதாவது, “பிற மாநிலங்களிலிருந்து மேகலாயாவுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதில் இந்த சட்டம் பாதிப்பு ஏற்படுமேயானால் , அஸ்ஸாம் அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசிடமும் இந்த பிரச்சினையை எழுப்புவோம் … பிற மாநிலங்களில் இருந்து மேகாலயாவுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. அசாம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படக் கூடிய இந்த சட்டத்தால் எங்கள் மாநிலத்தின் இறக்குமதி தடைப்படாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படும்.”

மேலும், இந்த மசோதா அமல்படுத்தப்படுமேயானால், சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் , கால்நடை அதிகாரிகளுக்கும் விதிமீறலாக நடைபெறுகிறது என சொல்லப்படும் எந்தவொரு இறைச்சிக் கூடத்திலும் நுழைந்து ஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், மனுவை அரசு வழக்கறிஞர் விசாரிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற முடியாது.

அசாம் மாநிலம் போன்று ஏற்கனவே ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசு வதை தடுப்பு சட்டங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டு அமலில் உள்ளது. ஆனால் முதன் முதலாக குறிப்பிட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி பொருட்களை விற்கவோ, வாங்கவோ, கூடாது என்பது போன்ற தடை சட்டங்கள் வரையறுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Links :

no-beef-near-temple-assam-cm-tables-cattle-preservation-bill

assam-cabinet-approves-cow-protection-bill-coming-session

assam-bill-proposes-ban-on-sale-of-beef-in-hindu-jain-sikh-areas-near-temples

why-assam-cattle-preservation-bill-worries-meghalaya

assam-cow-protection-bill-meghalaya-will-raise-issue-if-state-is-affected-cm

assam-cow-protection-plan-stirs-meghalaya

Please complete the required fields.
Back to top button
loader