This article is from Sep 30, 2018

ஆட்டிசம் ஒரு நோயல்ல..!

ஆட்டிசம் என்பது ஒரு மனிதனின் மூளை செயல்திறனில் ஏற்படும் குறைப்பாடுகளே தவிர, அது ஒரு நோய் அல்ல. மூளையானது தகவல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது. இக்குறைபாடு உடைய குழந்தைகளின் செயலானது மனிதர்களின் இயல்பு நடைமுறை பழக்கவழக்கத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். சமூகத்தோடு ஒன்றாமல் அவர்களுக்கென்று தனி உலகில் மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆட்டிசம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைச் சரியான காலத்தில் கண்டறியா விட்டால் அக்குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனினும், குழந்தைகளிடம் ஏற்படும் மாறுதல்களை கண்டறிந்து அது ஆட்டிசம் என அறிந்து கொண்டால் அதற்கென உரித்தான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

ஆட்டிசம் குறைப்பாடு உடைய குழந்தைகள் சிந்திக்கும் திறனை அற்றவர்கள் என்ற தவறான புரிதல் உண்டு. ஆனால், அக்குறைபாடு இருக்கும் குழந்தைகள் கூட அதீத புத்திசாலித்தனமாக இருக்கவும், தனித்திறனுடன் இருக்கவும் வாய்ப்புண்டு.

இந்தியாவில் ஆட்டிசம் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் தெரியவில்லை என்பதால் பலரும் இக்குறைபாடு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், இந்திய பெற்றோர்களிடையே ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. ஆகையால், ஆட்டிசம் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிய எளிய அறிகுறிகள் உள்ளன.

ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் :

  • மற்றவருடன் சேராமல் ஒதுங்கி இருப்பது.
  • அருகில் இருப்பவர்களின் கண்களை பார்த்து பேசுவதை தவிர்ப்பது.
  • பொருட்களைப் பொருத்தமில்லாமல் பற்றிக் கொள்வது.
  • மற்றக் குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்டாமை.
  • அச்சம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பது.
  • பாவனை விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்பச் செய்வது.
  • தனது தேவைகளை உணர்த்தப் பெரியவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
  • தினந்தோறும் செய்யக்கூடிய செயல்பாடுகளில் மாற்றத்தை விரும்பாமல் இருப்பது. மாற்றங்களை அசௌகரியமாக உணருவது.
  • அதீதமான பதட்டம், ஹைப்பர் ஆக்டிவிட்டி அல்லது அதீத மந்தத் தன்மை.
  • சில நேரத்தில் தொடப்படுவதையோ , அணைக்கப்படுவதையோ விரும்பாமல் கத்துவது.

  • வெளிப்படையாக எந்தக் காரணமின்றி அழுவது, வருத்தப்படுவது, சிரிப்பது. சில தருணத்தில் பல மணி நேரங்கள் இவ்வாறு செய்வதுண்டு.
  • வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டாமல் இருத்தல்.
  • வலியை உணராது இருப்பது.
  • வித்தியாசமான நடவடிக்கைகளால் கைகளைத் தட்டுவது, குதிப்பது.
  • சூழலும் மற்றும் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் ரசிப்பது, அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.
  • கேள்வி கேட்டால் அதையே திருப்பி சொல்வது.
  • சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூக புரிதல்கள் இல்லாமலிருப்பது.
  • தனக்கு விருப்பமான ஒன்றை சுட்டிக்காட்டத் தெரியாதது.
  • எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு முன்னிலையில் தனக்கு பிடித்தவாறு இருப்பது.

மேற்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கோ அல்லது நீங்கள் பார்க்கும் குழந்தைகளிடம் தென்பட்டால் உடனடியாகக் குழந்தை நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆட்டிசம் குறைபாடு தீர்க்கக் கூடிய நோயல்ல, வாழ்நாள் முழுவதும் அவர்களை விட்டு நீங்காத குறைபாடு. எனினும், அவர்களால் இச்சமூகத்தில் வாழ்வதும் சாத்தியமே.

இக்குறைபாடு உடையவர்கள் அடிக்கடி காணாமல் போவதுண்டு, ஏதாவது தருணத்தில் இந்த அறிகுறி உடையவர்களை தனியாக பார்த்தால் காவல் துறையிடமோ அல்லது மருத்துவரிடமோ பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய சமூக கடமை நமக்கு உண்டு.

arumbu trust

ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகள் பற்றி காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் 7-ம் தேதி(இன்று காலை) சென்னை தி.நகரில் அரும்பு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது. இதில், தி.நகர் துணை ஆணையாளர்(DC) திரு. அரவிந்தன் ஐ.பி.எஸ், மூத்தப் பத்திரிகையாளர் திரு.பாலபாரதி மற்றும் மருத்துவர் திருமதி. தேவகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஊடக பங்களிப்பாக YOUTURN இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

autism

ஆட்டிசம் குறைபாடு தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால்..! அக்குழந்தையைக் கையாள்வது என்பது எளிது !

 

நன்றி: ஆட்டிசம் சில புரிதல்கள் – எஸ்.பாலபாரதி

Please complete the required fields.




Back to top button
loader