கடுமையாக சாடிய இந்திய மருத்துவ சங்கம், மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ் !

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி மருந்துகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படவே அவரை கடுமையாக சாடி அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ சங்கம்.

Advertisement

அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை பேசியது மற்றும் “அலோபதி ஒரு முட்டாள்தனமான அறிவியல்” என நவீன மருத்துவத்தை இழிவுப்படுத்தும் வகையில் பாபா ராம்தேவ் பேசியதை தொடர்ந்து, “ஒன்று ராம்தேவ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் நவீன மருத்துவ கட்டமைப்புகளை கலைத்துவிடுங்கள் அல்லது அவரை தேசிய தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் இந்திய மருத்துவ சங்கம் (IMA) கோரியுள்ளது. 

இதுதொடர்பாக இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ சங்கம். அவ்வறிக்கை உள்ளடக்கிய கருத்துக்கள் பின்வருமாறு :

Twitter link 

Advertisement

“SARS-COV-2 தொற்றுநோயால் இந்தியா முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிக நெருக்கடியான நிலையை எதிர்கொள்கிறது. நவீன மருத்துவ அமைப்புகள் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற கடுமையாக முயற்சித்து வருகிறது. இந்த இடைவிடாத போரில் 1200க்கும் மேற்பட்ட அலோபதி மருத்துவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த யுத்ததில் தீய சந்தர்ப்பவாத மனப்பான்மை கொண்டவர்கள், அவர்களின் நேர்மையற்ற, ஒழுக்கமற்ற, தேசப்பற்று இல்லாத தங்களது வணிக நோக்கத்தை அதிகரிப்பதற்காக நவீன மருத்துவர்கள் மீது சேற்றை எறிகின்றனர். மக்களை மீட்பதாக கூறி அவர்களிடம் தங்களுடைய வித்தியாசமான சித்தாந்தங்களை விற்பது, விஞ்ஞான மருத்துவத்தை அவதூறு செய்வதன் மூலம் வியாபாரத்தை பெருக்க முனைவது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் கல்வியறிவுள்ள சமூகத்திற்கும், அவரின் பேச்சுக்கு இரையாகும் எளிய மக்களுக்கும் இத்தகைய பயிற்றுவிக்கப்படாத அறிக்கைகள் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும் ” என பாபா ராம்தேவை மிகக் கடுமையாக சாடியுள்ளது IMA.

“புகழ்பெற்ற யோகா குருஜியாக கருதப்படும் ராம்தேவ் நவீன மருத்துவத்தை இழிவுப்படுத்தி பேசிய காணொளியை ஐ.எம். , சுகாதார துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறது. கடந்த காலங்களிலும், அவர் தனது “அதிசய மருந்துககளை” வெளியிடும் போது மாண்புமிகு சுகாதார அமைச்சரின் முன்னிலையிலேயே நவீன மருத்துவ மருத்துவர்களை “கொலைகாரர்கள்” என்று கூறியுள்ளார். இருப்பினும், யோகா குருஜி என அழைக்கப்படும் அவரும், அவரது கூட்டாளியான ஸ்ரீ பால்கிருஷ்ணா ஜியும் நோய்வாய்ப்பட்டபோது நவீன மருத்துவ அலோபதி சிகிச்சையை எடுத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இப்போது அவரின் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான மருந்துகளை விற்பதற்காக பெருவாரியான பொதுமக்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தவறாக வழிநடத்த பார்க்கிறார்.

பாபா ராம்தேவ் உரையில், டி.சி.ஜி.ஐ வழங்கிய ரெம்டெசிவிர், ஃபாவிஃப்ளூ மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் தோல்வியுற்றதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையை விட அலோபதி மருந்துகளால் லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துள்ளனர் என்றும் கூறினார், இது டி.சி.ஜி.ஐயின் அறிவாற்றாலையும், ஒருமைப்பாட்டையும் சவால் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ரெம்டெசிவிர் மற்றும் ஃபாவிஃப்ளூ ஆகியவை சி.டி.எஸ்.கோ (மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 2020 ஜூன்-ஜூலை மாதங்களில் மத்திய அரசால் கோவிட் நோயாளிக்கு பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது. எனவே தேசிய தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஐபிசியின் பிரிவு 188 கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் அலங்கரிக்கப்பட்ட யோகா குரு ஒரு மருந்துவ கார்ப்பரேட் ஏஜென்ட் ஆவார். அவரது நிறுவன தயாரிப்பு மருந்துகளான கொரோனில் மற்றும் ஸ்வாசரி பற்றிய சர்ச்சைகள் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட உண்மைகள்.

பொறுத்ததுவரை போதும். 1200 மருத்துவர்களை இழந்த வேதனையுடனும், மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மனித ஆற்றலுக்கும் இடையில், பெரும்பான்மையான மருத்துவர்கள் இரக்க உணர்வோடு முன்னணியில் பணியாற்றுகிறார்கள். நவீன அலோபதி மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்று இத்துறையில் பணியாற்றும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் ஒன்று ராம்தேவ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் நவீன மருத்துவ கட்டமைப்புகளை கலைத்து விடுங்கள் அல்லது அவரை தேசிய தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்.

அமைச்சர் அவர்மீது தானாக நடவடிக்கை  எடுக்காவிட்டால், உண்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்க்கும், நீதியை பெறுவதற்கும் ஜனநாயக வழிமுறையை பின்பற்றி நீதிமன்றத்தை அனுகுவோம். 

நாட்டின் சுகாதாரத்துறையை நிபுணத்துவ மனப்பான்மை உடைய ஒரு தொழில்முறை நிபுணரால் கையாளப்பட வேண்டும். அறிவியல் அறிவு அற்ற பேச்சுக்களை கண்டும் காணாமல் கேட்டும் கேளாமல் இருப்பது நிபுணத்துவம் இல்லை ” என மிகக் கடுமையான குரலை பதிவு செய்திருக்கிறது இந்திய மருத்துவ அமைப்பு.

இதற்கு ராம்தேவ் சார்பில் பதஞ்சலி அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணா தரப்பில் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில்,” இந்த நிகழ்வு ஒரு தனியார் நிகழ்வு என்பதையும், சுவாமி ஜீ [ராம்தேவ்] அவருக்கு பல உறுப்பினர்களிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு  வாட்ஸ்அப் செய்தியைத் தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும். அலோபதி ஒரு முற்போக்கான அறிவியல் என்றும்; அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவை ஒரு கூட்டு பலனை அளிக்கும் என்றும் அவர் நம்புகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இரவு பகலாக உழைத்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கும் அவர் பெரும்மதிப்பு அளிக்கிறார் ” என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 Twitter link 

IMA வின் அறிக்கையை தொடர்ந்து நேற்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அலோபதி மருந்துகள் குறித்த ராம்தேவின் அறிக்கையை “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி அதை திரும்பப் பெறுமாறு கேட்டு கடிதம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

Twitter link 

இந்நிலையில் தற்போது, ” மாண்புமிகு அமைச்சரே, உங்கள் கடிதம் எனக்கு வந்துள்ளது. பல்வேறு மருத்துவ நடைமுறைகள் குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்து எனது கருத்துக்களை நான் திரும்பப் பெறுகிறேன்…” என பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக, நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  உலக சுகாதார அமைப்புக் குழு தனது நிறுவனத்தைப் பார்வையிட்டதாகவும், 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்வதற்கான உரிமத்தை கொரோனிலுக்கு வழங்கியதாகவும் ராம்தேவ் கூறினார்.

Twitter link 

அம்மருந்துக்கான வெளியீட்டு விழாவிலும் அமைச்சர் ஹர்ஷவர்தன் முன்னிலையில் இதனை தெரிவித்தார். பல பாரதிய ஜனதா தலைவர்களும் பதஞ்சலியின் கூற்றை ஆதரித்தனர். இதையடுத்து, எந்தவொரு ஆயுர்வேத மருத்துவத்தின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவில்லை அல்லது சான்றளிக்கவில்லை என்று WHO பின்னர் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button