இயக்குனர் பாக்யராஜின் “ பாக்யா “ இதழில் கதை திருட்டா ?

“ சர்கார் “ படத்தின் கதை பிரச்சனையில் நடுநிலையாக இருந்து தீர்ப்பு வழங்கிய திரு.பாக்யராஜ் அவர்களுக்கு சொந்தமான “ பாக்யா “ இதழில் கதை திருட்டு ஒன்று நிகழ்ந்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாற்றியுள்ளார். அது தொடர்பானதே இக்கட்டுரை.
டி.வி.எஸ் சோமு என்ற பத்திரிகையாளர் தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை கட்டுரையாக தன் முகநூல் பக்கத்தில் 2017 அக்டோபர் 28-ம் தேதி வெளியிட்டு இருந்தார்.
அதில், தந்தைக்கும் தனக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் “ அப்பா அதிகாரம் “ என எழுதி இருக்கிறார். இந்த பதிவு அதிக ஷேர்கள் மற்றும் வாட்ஸ் ஆஃப் பார்வர்ட்கள் செய்யப்பட்டு லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்பா மகன் இடையேயான உறவை வெளிப்படுத்திய இக்கட்டுரை பாக்யராஜ் அவர்களின் “ பாக்யா “ இதழில் பிப்ரவரி 8-14 தேதிக்கான இதழில் வெளியாகி இருக்கிறது. அது எழுத்தாளர் சுஜாதா கதை என அவர் படத்துடன் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதை எழுதியதோ அல்லது எழுத்தாளர் சுஜாதா வாழ்வில் நடந்ததோ இல்லை.
இந்த கட்டுரையை “ பாக்யா “ இதழ் நேரடியாக ஒன்றும் அச்சிடவில்லை. இதற்கு முன்பாகவே “ மாலை மலர் “ 2019 பொங்கல் சிறப்பிதழில் வெளியாகி இருந்துள்ளது இக்கட்டுரை. திரு.டி.வி.எஸ் சோமு எழுதிய கட்டுரையை சுஜாதா எழுதியதாக முதலில் வெளியிட்டது மாலை மலர் இதழே. அதைப் பற்றி குறிப்பிடவும் இல்லை.
“ திருட்டில் இருந்து திருட்டு “ என்கிறார் டி.வி.எஸ் சோமு.
தன் சொந்த கதை வேறு ஒரு பிரபல எழுத்தாளர் பெயரில் வெளியானதை ஏற்றுக் கொள்ள முடியாத பத்திரிகையாளர் டி.வி.எஸ் சோமு, பாக்யராஜ் அவர்களின் உதவியாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டு பலமுறை இதைப் பற்றிய விவரம் தெரிவித்த போதும் அதற்கான எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, பாக்யா இதழின் உதவி ஆசிரியர் ஜெகதீஸ் என்பவரை தொடர்பு கொண்டு கட்டுரை பற்றி கூறிய போதும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்கிறார் சோமு. இறுதியாக, உதவி ஆசிரியர் ஜெகதீசின் வாட்ஸ் ஆஃப் எண்ணிற்கு தன் கட்டுரை மற்றும் அதற்கான ஆதாரத்தை அனுப்பியுள்ளார்.
தவறாக முதலில் வெளியிட்ட “ மாலை மலர் “ இதழுக்கு மெயில் அனுப்பியும், ஆசிரியர், உதவி ஆசிரியர் என அனைவரிடம் பேசியும் எந்த பதிலும் இல்லை. நடந்த நிகழ்வு அனைத்தையும் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் டி.வி.எஸ் சோமு.
இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் டி.வி.எஸ் சோமுவிடம் Youturn தொடர்பு கொண்டு பேசிய போது, “ தன் எழுத்துக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். அது என் கட்டுரை தான் என பாக்யா இதழ் விளக்கமாக வெளியிட்டால் போதும், வேறொன்றும் நான் எதிர்பார்க்கவில்லை “ என்றார்.
இதையடுத்து, Youturn பாக்யராஜ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது, “ இந்த கட்டுரை குறித்த விசயம் நான் வெளியூரில் இருக்கும் பொழுது என் கவனத்திற்கு வந்தது. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தவறு நடந்து விட்டது. அதற்காக வருந்துகிறேன். நானே இதைப் பற்றி எழுதலாம் என நினைத்து இருந்தேன். அடுத்த வாரம் இது பற்றிய விளக்கத்தை எழுதி வெளியிடுவேன் “ எனக் கூறினார்.
தன் எழுத்திற்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும் டி.வி.எஸ் சோமு கூறினார். அந்த அங்கீகாரத்தையும், மன்னிப்பையும் கே.பாக்யராஜ் பதிவு செய்வாரா என பொருத்து இருந்து பாப்போம் !
தவறாக பதிவிட்ட “ பாக்யா “ இதழ் பதில் அளித்து விட்டது, முதலில் வெளியிட்ட” மாலை மலர் ” இதழும் பதில் அளிக்க வேண்டும்.
UPDATE :
நம்மிடம் பாக்யராஜ் தெரிவித்து இருந்தது போன்று தன் தவறுக்கான மன்னிப்பை பாக்யா இதழ் கேட்டுள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.