பணம் எடுத்தாலும், பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணமா ?| விரிவானத் தகவல் !

வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்றால் அபராதக் கட்டணம், ஏடிஎம்களில் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் சர்வீஸ் சார்ஜ் கட்டணம் எனக் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் நிலவியே வருகிறது. இந்நிலையில், வங்கியில் பணத்தினை கட்டினாலும், எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

வங்கிகள் குறிப்பிட்ட அளவு பணம் எடுக்கும் சேவையை இலவசமாக வழங்குகிறது. அதேபோல் தான் பணத்தை கட்டுவதற்கான சேவையையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும் போது மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியில், நவம்பர் 1-ம் தேதி முதல் பேங்க் ஆப் பரோடா வங்கி பணத்தை டெபாசிட் செய்வதற்கும், பணத்தை எடுப்பதற்குமான கட்டணத்தைத் திருத்தி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

பெருநகர பகுதிகளில் உள்ள சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் மாதத்திற்கு 3 முறைகளுக்கு மேல் என இருக்கும் வரம்பை மீறி டெபாசிட் பரிவர்த்தனை செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். அதே, மூத்த குடிமக்கள், பென்ஷன் பெறுபவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 3 முறைக்கு மேல் சென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.40 வசூலிக்கப்படும்.

பணம் எடுப்பதில், மாதம் மூன்று முறை இலவசமாக (ஏடிஎம் தவிர்த்து) பணம் எடுக்கலாம். 3 முறைகளுக்கு மேல் செல்லும் போது பெருநகரங்களில் ரூ.125 மற்றும் நகர்புற சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், மூத்த குடிமக்கள், பென்ஷன் பெறுபவர்களுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு கணக்கு, ரொக்க கடன் வரம்பு மற்றும் ஓவர் டிராஃப்ட் ஆகிய கணக்கை வைத்திருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 1 ரூபாய் வசூலிக்கப்படும். இதற்காக, குறைந்தபட்ச வரம்பாக 50ரூ மற்றும் அதிகபட்சமாக 20,000ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கணக்குகளில் இருந்து மாதம் 3 முறை மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.

குறிப்பாக, இந்த கட்டண விதிமுறைகள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என பேங்க் ஆப் பரோடா தெரிவித்து உள்ளதாக வெளியாகி இருக்கிறது.

Advertisement

பேங்க் ஆப் பரோடாவைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சில இதேபோன்ற கட்டண விதிமுறைகள் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து, ஆக்சிஸ் வங்கி ஊழியரை தொடர்பு கொண்டு பேசிய போது, குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் சென்றால் கட்டணம் வசூலிக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறி இருந்தார்.

” சில வங்கிகள் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், பணத்தை எடுப்பதற்கும் கட்டணம் விதித்து இருக்கும் முறை ஜன் தன் கணக்கிற்கும், அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கிற்கும் பொருந்தாது ” என எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஏடிஎம் கட்டணம் : 

நவம்பர் 1-ம் தேதி முதல் வங்கிகளின் வேலை நேரம் இல்லாத தருணத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணத்தை ஐசிஐசிஐ வங்கி வசூலிக்க உள்ளதாக மனிகன்ட்ரோல் செய்தியில் வெளியாகி இருக்கிறது. பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் ஒரு பரிவர்த்தனை அல்லது பல பரிவர்த்தனைகளாக மாதத்திற்கு ரூ.10,000-க்கு மேல் செய்தால் வங்கியானது கட்டணம் விதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கி தரப்பில்,” மூத்த குடிமக்கள், அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு, ஜன் தன் கணக்குகள், திறனற்ற மற்றும் பார்வையற்றோர் பயன்படுத்தும் கணக்குகள், மாணவர் கணக்குகள், ஐசிஐசிஐ வங்கியால் அடையாளம் காணப்பட்ட வேறு எந்த கணக்குகளுக்கும் இந்த கட்டண முறைகள் பொருந்தாது ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Update:

கோவிட் தொடர்பான தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா கூறியுள்ளது. மேலும், வேறெந்த பொதுத்துறை வங்கியும் இந்தக் கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தவில்லை என நிதி அமைச்சகம் இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் இணையதள வாயிலாக கூறியுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வங்கிக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இதர பொதுத் துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669751

Links : 

Bank of Baroda revises charges on deposits and withdrawals, effective Nov 1

No charges to be levied by banks for debit in Jan Dhan account

ICICI Bank to levy fee of Rs 50 for cash deposits by customers in cash recyclers during non-business hours and bank holidays

 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button