This article is from Feb 23, 2019

கடந்த நான்கு ஆண்டில் வங்கி கடன் மோசடி ரூ.77,500 கோடி – RTI தகவல்.

இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசின் ஆட்சியில் வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தை பிரதானமாக இருக்கும். மத்திய அரசின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதையே கூறுவர். ஆனால், அது எத்தகைய வளர்ச்சி என்பதே கேள்வி.

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்குகளும், தொகைகளும் அதிகரித்து உள்ளது என ஆர்.டி.ஐ தகவலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நிபுணர் மற்றும் சமூக ஆர்வலரான பிரசென்ஞ்சித் போஸ் வங்கி கடன் மோசடிகள் குறித்து ஆர்.டி.ஐ-வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி 2018 மே மாதம் பதில் அளித்து இருந்தது.

அதன்படி, “ UPA-2 வின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த வங்கி கடன் மோசடித் தொகையை விட பிரதமர் மோடியில் ரூ.55,000 கோடி அதிகம் என உறுதிப்படுத்தி உள்ளது “.

2014-2015 நிதியாண்டில் இருந்து 2017-2018 நிதியாண்டு வரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள், பிற சிறிய நிதி நிறுவனங்களில் என மொத்தமாக 9,193 வங்கி கடன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் ஈடுபட்ட மொத்த தொகை சுமார் 77,500 கோடியாகும்.

இதற்கு முன்பான காங்கிரஸின் UPA-2 ஆட்சியில்(2009-2014) பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 10,652 மற்றும் அதில் ஈடுபட்ட மொத்த தொகை 22,441 கோடி என ஆர்.பி.ஐ அளித்த தகவலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த நான்கு ஆண்டில்(2018 நிதியாண்டு வரையில்) மட்டும் வங்கி மோசடி வழக்குடன் தொடர்பான தொகையானது சென்ற ஆட்சியில் இருந்ததை விட 55,000 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும், 9,193 வங்கி கடன் மோசடி வழக்கில் 7,218 வழக்குகள் பொதுத்துறை வங்கிகளில் பதிவாகியுள்ளது. இதன் தொகை 68,350 கோடி எனக் குறிப்பிட்டுள்ளனர்.

” இந்தியாவில் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட மொத்த தொகையானது 1 லட்சம் கோடி அல்லது அதற்கு மேலே இருக்கும் எனக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டுகளில் அதிகபட்சமாக 2017-2018 நிதியாண்டில் மட்டும் ரூ.22,469 கோடியாக இருந்துள்ளது. 2008-2009-ம் வங்கி மோசடி ரூ.1,542.8 கோடியாக இருந்துள்ளது “.

ஆர்.பி.ஐ தகவலின் படி, கடந்த 10 ஆண்டுகளில் வங்கிக் கடன் மோசடி 14 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. 2014-ல் இருந்து தனியார் வங்கிகளில் தொடர்புடைய வங்கி மோசடிகள் குறைவான வேகத்தில் அதிகரித்து உள்ளது. ஆனால், பொத்துறை வங்கிகளில் இதன் வளர்ச்சி அதிகமாக இருந்துள்ளது என வழக்குகள் மற்றும் கடன் தொகையில் இருந்து தெரிய வருகிறது.

இந்தியாவில் வங்கி மோசடி வழக்குகளும், அதில் ஈடுபட்ட தொகையும் ஆண்டுதோறும் கோடிக்கணக்காக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் இதன் பங்கு அதிகமாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டில் வங்கி கடன் மோசடியானது வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூற வேண்டும். விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கி மோசடி பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது.

மக்கள் நலம் சார்ந்த கடன்களை விட தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை இங்கு அதிகமாக உள்ளது. வங்கிகள் பொது மக்களிடம் காட்டும் கண்டிப்பும், கட்டுப்பாடுகளையும் இதுபோன்ற கடன் மோசடியில் ஈடுபடுபவர்களிடமும் செயல்படுத்தினால் மட்டுமே கடன் மோசடி குறைய வாய்ப்புள்ளது.

Loan fraud on the rise in banks

Reserve Bank of India data shows rise in big-ticket bank frauds

RBI admits loan frauds under Modi Govt three times higher than UPA-II

Please complete the required fields.




Back to top button
loader