“மாட்டுக்கறி” பதிவு தேவையற்றது எனப் பதிவிட்டு நீக்கிய சென்னை காவல்துறை கூறும் விளக்கம் !

அசைவ உணவுகளில் ஒன்றான மாட்டுக்கறி(பீப்) சார்ந்த உணவுகளால் அரசியல் களத்தில் கொள்கை சார்ந்த மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஒருவர் உண்ணும் உணவு விசயத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றும், அடுத்தவர் தட்டில் என்ன உணவு இருக்கிறது எனப் பார்க்காதீர்கள் என எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் மாட்டிறைச்சி உண்ணும் நபர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 6-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் அபுபக்கர், ” மாட்டுக்கறி ” என உணவுப் படத்தை பதிவிட்டதற்கு, ” இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது. தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் ” என சென்னை மாநகராட்சி காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்யப்பட்டு உள்ளது.
ஒருவர் தான் விரும்பிய அல்லது உண்ணும் உணவை சமூக வலைதளங்களில் பதிவிட முழு உரிமை இருக்கிறது. ஆனால், மாட்டுக்கறி உணவை பதிவிட்டது எப்படி தேவையற்ற பதிவாக இருக்க முடியும், மற்றவரின் உணவு விசயத்தில் சென்னை காவல்துறை எப்படி தலையிடலாம் என அந்த பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மேலும், திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ” இந்த ஐடியை யார் நிர்வகிக்கிறது. அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை ” என சென்னை காவல்துறையின் ட்விட்டர் பதிவில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த விவகாரம் எம்.பி வரை சென்று கண்டனம் பெற்றதால் அந்த பதிவை சென்னை மாநகராட்சி காவல்துறை ட்விட்டர் பக்கம் நீக்கி உள்ளது.
ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 7, 2022
இருப்பினும், ” தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல ” என சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இருந்து மீண்டும் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் நபரால் ரீட்வீட் செய்யப்பட்டு இருந்தால் அதை நீக்கி இருக்கலாம், ஆனால் இந்த பதிவு தேவையற்றது என பதிவிடுவதற்கு என்ன தேவை இருக்கிறது எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், மாட்டுக்கறி பதிவில் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இருந்து தேவையற்ற பதிவு எனப் பதிவிட்டு நீக்கியது சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கி விட்டது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.