This article is from Sep 12, 2019

பிச்சைக்காரர்கள் கூட இன்கம்டாக்ஸ் கட்ட ஆசைப்படுகிறார்களா? | அண்ணாச்சி கதைகள்.

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில் வண்டி பயணம் அது. ” இந்த மாசமும் ஃபிக்செட் டெப்பாசிட் கம்மியா வந்து இருக்கு, லோன் கலக்சன் 60% தான் வந்திருக்கு. இப்படியே போனால் இந்த வருசம் நமக்கு கொடுத்த இலக்கில் பாதியைக் கூட அடைய முடியாது போல இருக்கே ” என கை கழுவும் இடத்திற்கு அருகில் நின்று கொண்டு பஞ்சாபகேசன் யாரிடமோ சத்தமாக பேசிக் கொண்டு இருந்தார். அவர் பேசும் வார்த்தைகளிலேயே அவர் வங்கி சார்ந்த பணியில் இருக்கிறார் என்பது அருகில் இருப்பவர்களுக்கு புரிந்துவிடும்.

பேசி முடித்துவிட்டு அருகில் இருந்த முகம் கழுவும் குழாயில் தண்ணீரை எடுத்து முகத்தில் தண்ணீரை பல முறை அடித்து கழுவிக் கொண்டார். படபடப்பாக இருக்கும் போது சிலர் இப்படி செய்வதுண்டு.

அவர் அங்கிருந்து நகரும் போது அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒருவர் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை பார்த்தார். அந்த நபர் சற்று கசங்கிய சட்டை, கோணிப்பை சகிதமாக இருந்தார். வழக்கமாக ரயிலில் வரும் பிச்சைக்காரர்கள் என நினைத்துவிட்டு பஞ்சாபகேசன் அங்கிருந்து தன் இருக்கைக்கு நகர்ந்து விட்டார்.

நீரிழிவு நோயாளியான அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு செல்வார். அவருக்கு கிடைத்ததோ அப்பர் பெர்த் என சொல்லப்படும் மேல் படுக்கை. ஒவ்வொரு முறையும் மேலிருந்து கீழே இறங்கி செல்வது சிரமம் . சிறிது நேரத்திற்கு பின் தனக்கு கிடைத்த மேல் இருக்கையை மாற்றி கீழே இருக்கும் இருக்கையில் இடம் கிடைக்குமா என கேட்பதற்காக மற்றோரு ரயில் பெட்டியில் இருக்கும் பயணச்சீட்டு பரிசோதகரை பார்க்க பஞ்சபகேசன் போய்க் கொண்டு இருந்தார்.

போகும் வழியில் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் முன்பு பார்த்த அதே நபர் எதையோ எடுத்து கோணிப்பையில் திணித்துக் கொண்டு இருந்தார். ச்.. சே! இந்த பிச்சைக்காரர்கள் தொல்லை எங்கே போனாலும் விடுவதாக இல்லை என முனுமுனுத்துக் கொண்டே நகர்ந்தார்.

அவர் தேடிப்போன இடத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் இல்லாத காரணத்தால் அவர் இருக்கையில் அமர்ந்த பஞ்சாபகேசனில் காலில் எதோ இடருவது போன்று இருந்தது.

கீழே குனிந்து பார்த்த போது முன்பு குப்பைத் தொட்டில் எதையோ தேடிய அதே நபர் கீழே கிடந்த அலுமினிய ஃபாயில் எனப்படும் ரயில் உணவுப் பொருட்களை சுற்றித்தரும் அலுமினிய காகிதத்தை எடுத்துக் கொண்டு இருந்தார்.

இப்பொழுது அந்த நபர் எழுந்து, சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும், “சொல்ல முடியுமா ? “.

பஞ்சாபகேசனுக்கு எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சரி கேளுங்கள் என்றார். நீங்கள் பேசியதை கேட்டேன். நீங்க வங்கியில் பெரிய உத்தியோகத்தில் இருக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் பெரிய படிப்பு படிச்ச மாதிரி இருக்கு. இப்போது பஞ்சாபகேசனுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

யாராவது நம்முடைய பதவி, படிப்பு, சமூக அந்தஸ்து பற்றிச் சொன்னால் நம் மனம் மகிழ்வது இயற்கை தான். அதே போல் நாம் யாரிடமாவது உதவி கேட்க போனால் எடுத்தவுடன் எனக்கு உங்க பைக்கை இரண்டு நாள் கொடுக்க முடியுமா? உங்க பிரிண்டரில் 10 பக்கம் பிரிண்ட் அவுட் எடுக்க முடியுமா? என ஆரம்பித்தால் “இல்லை எனக்கு வேலை இருக்கு “ , “ இப்போது முடியாது “என்ற பதில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் . முடிந்தால் அவர்கள் பற்றி இரண்டு பெருமைகளுடன் பேச்சை ஆரம்பியுங்கள்.

” ஷாம் சார், நீங்க பல்லாவரத்தில் ஒரு வீடு கட்டுனீங்களே. சூப்பர் சார்! கவர்மெண்ட் சொல்லுவதற்கு முன்பே மழை நீர் சேகரிப்பு செய்தீர்களே! நீங்க செஞ்சதுக்கு அப்புறம் தான் சார் அரசாங்கமே செய்தது ” எனக் கூறி பேச்சை ஆரம்பித்து பாருங்கள். அப்புறம் தெரியும் எதிராளியிடமிருந்து வருகின்ற ஆர்வமும் புன்னகையும். முதலில் அவர்கள் உங்கள் பேச்சை கவனிக்க வேண்டும் . அப்போது தான் உங்கள் உதவி அவர் காதில் விழும்.

அந்த கசங்கிய உடை அணிந்த மனிதர் கேட்ட கேள்விக்கு பஞ்சாபகேசன் பதில் அளிக்காமல் பயணச்சீட்டு பரிசோதகர் வருகின்ற வழியை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்படி அவர் என்ன கேட்டு விட்டார். “ சார் பேன் கார்டு (வருமான வரி கணக்கு எண் அட்டை) வங்கியில் வாங்க முடியுமா? “.

இந்த கேள்விக்கு தான் அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். “பிச்சைக்காரர்கள் கூட இன்கம்டாக்ஸ் கட்ட ஆசைப்படுகிறார்களா? “ என்ற அவருடைய எண்ணம் தான் அதற்கு காரணம்.

அந்த கசங்கிய உடை மனிதர், அங்கேயே எதையோ தேட தொடங்கிவிட்டார்.

அப்போது அங்கு வந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் தனது இடம் மாற்றும் கோரிக்கையை சொன்னார் பஞ்சாபகேசன். எப்போது போல் “இடம் கிடைத்தால் சொல்கிறேன் ” என்று சொன்ன பயணச்சீட்டு பரிசோதகரிடம் ” ஏன் சார் இந்த மாதிரி பிச்சைக் காரர்களை எல்லாம் கண்டிக்க மாட்டீர்களா? முன் பதிவு செய்த குளிர்சாதன பெட்டியில் கூட இவர்கள் வருகிறார்கள் ” என கசங்கிய உடையுடன் இருந்த நபரைக் சுட்டிக்காட்டிச் சொன்னார்.

அதற்கு பயணச்சீட்டு பரிசோதகர் சிரித்துக் கொண்டே, மோகன்தாஸ் இங்க வாங்க என அந்த கசங்கிய உடை அணிந்த நபரை அழைத்து அவருக்கு அருகில் அமரவைத்து . உங்க பயணச்சீட்டை இவரிடம் காண்பியுங்கள் என்றார்.

வாங்கி பார்த்த பஞ்சாபகேசனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை. இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் பயணச்சீட்டு அது.

இப்போது மெதுவாக பஞ்சாபகேசன் எதுக்காக பான் கார்ட் ( வருமான வரி எண் அட்டை) பற்றி கேட்டீர்கள் என மோகன்தாஸிடம் கேட்டார்.

வருமான வரி கட்ட தான் சார். எல்லாரும் வருமான வரி கட்டிட்டா அரசாங்கம் நிறைய வசதிகள் செய்து கொடுக்கும்னு ஒரு புத்தகத்தில் படிச்சேன் சார்.

“என்ன வேலை பாக்குறீங்க ? ” – பஞ்சாபகேசன்.

இதற்கு பயணச்சீட்டு பரிசோதகர் பதில் சொல்லத் தொடங்கினார். அவர் முதலாளி சார். அவரிடம் பத்திற்கும் மேல் ஆட்கள் வேலை செய்கிறார்கள்.

பஞ்சாபகேசனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சற்று முன் பிச்சைக்காரர் என நினைத்த ஒரு நபர் முதலாளி என்றால் யாருக்குதான் ஆச்சரியம் வராது.

பயணச்சீட்டு பரிசோதகரே தொடர்ந்தார். ரயில் உணவுகள் கொடுக்கின்ற அலுமினிய பெட்டிகள் மற்றும் ரயில் பயணிகள் கொண்டு வருகின்ற உணவுப் பொருட்களில் சுற்றித்தருகின்ற அலுமினிய காகிதத்தை சேகரித்து மொத்தமாக பழைய விற்பனை செய்கின்றார்.

அதில் எவ்வளவு சார் கிடைத்துவிடப் போகிறது ? – பஞ்சாபகேசன்

இதற்கு மோகன்தாஸ் பதில் சொல்ல தொடங்கினார். எப்படியும் ஒரு ரயில் பயணத்தில் ரூ 1500ல் இருந்து ரூ 2000 வரைக்கும் கிடைக்கும் ஐயப்பன் கோவில் போன்ற விசேச காலத்தில்
ஒரு தடவை போய்ட்டு வந்தா எப்படியும் போகும் போது ரூ 3000, வரும் போது ரூ.3000 ஆக மொத்தம் ரூ 6000 வரைக்கும் கிடைக்கும்.

நம்மகிட்ட பத்து பசங்க இருக்காங்க . ஆளுக்கு ரூ.2000 சம்பாதிச்சாலும் ஒரு நாளுக்கு எப்படியும் 20000 கிடைக்கும் சார்.

பஞ்சாபகேசனுக்கு தலை சுற்ற தொடங்கியது.

20000 X 30 நாட்கள் = 6 லட்சம் ரூபாய்.

மோகன்தாஸே தொடர்ந்தார். நான் எப்போதும் மூன்றாம் வகுப்பில் தான் சார் வருவேன் . இடம் இல்லாதனால் இன்னைக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் வந்தேன் சார்.

முக்கியமான ரயில் நிலையத்தில் அந்த ஊரில் இருக்கிற கடைக்காரர் வந்து என்னிடம் இருக்கிற அலுமினிய காகிதம் சேகரித்த பையை வாங்கிருவாங்க சார். சில சமயம் அவுங்களே சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாங்க சார் . அதுனால இந்த அலுமினிய காகித பையை சுமந்து போகிற பிரச்சனை இல்லை சார்.

எல்லா செலவும் போக எப்படியும் மாசம் 2 லட்சம் நிக்கும் சார்.

நீங்க உங்க இடத்தை மாத்தனும் சொன்னீங்க எனக்கு கீழ் இருக்கை தான் கிடைச்சிருக்கும் . நான் தூங்க ராத்திரி 12 மணியாகும் . எனக்கு எங்க படுத்தாலும் தூக்கம் வரும் நீங்க வேண்டுமானால் என் இருக்கையை எடுத்துக் கோங்க என்றார்.

சற்று முன் குப்பையாக தெரிந்த நபர் இப்போது கோபுரத்தில் இருக்கின்ற கலசமாக தெரிந்தார்.

” சார் சென்னை வந்ததும் எங்க வங்கிக்கு வாங்க நானே உங்களுக்கு வங்கிகணக்கு , வருமான வரி எண் அட்டை எல்லாம் வாங்கித்தரேன். இதான் சார் என்னோட விசிட்டீங் கார்ட் ”

அவரை அறியாமலேயே முதல் முறையாக பஞ்சாபகேசன் மோகன்தாஸை சார் என்றார்.

அனு

Please complete the required fields.
Back to top button
loader