பெங்களூரில் வங்கதேச அகதிகள் வசிப்பிடம் என பரவிய தவறான தகவலால் வீடுகள் இடிப்பு!

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் இந்திய அளவில் நடைபெற்றன. அதேபோல், சமூக வலைதளங்களில் போராட்டங்கள் தொடர்பாகவும், அகதிகள் தொடர்பாகவும் பல்வேறு தவறான வீடியோக்கள், செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், இந்தியாவிற்குள் வந்த வங்கதேச அகதிகள் பெங்களூர் பகுதியில் சட்ட விரோதமாக வசித்து வந்த வீடுகள் என நினைத்து நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் இடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், வங்கதேச அகதிகள் குறியேறி இருப்பதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Few people have taken shelter under illegally constructed sheds located in Kariyammana Agrahara of Bellanduru which is within the jurisdiction of our Mahadevapura Assembly constituency. 1/3 pic.twitter.com/cuWujv4MGT
— Aravind Limbavali (@ArvindLBJP) January 11, 2020
ஜனவரி 11-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில், ” மஹாதேவபுரா தொகுதிக்கு உட்பட்ட பகுதி பெல்லந்தூரின் காரியம்மனா அக்ரஹாராவில் சில பேர் சட்ட விரோதமாக கூடாரங்களை அமைத்து உள்ளனர். இந்த கூடாரப் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன மற்றும் சுத்தமின்மையால் சுற்றுச்சூழல் மோசமாகி உள்ளது. எனவே இந்த பகுதி சட்டவிரோத நடவடிக்கையின் பகுதியாகி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற பகுதியில் இருந்து வந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர் மற்றும் அவர்களில் சிலர் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது ” என வீடியோ மற்றும் புகைப்படங்கள் உடன் தொடர்ந்து ட்வீட் செய்து இருந்தார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காவல்துறை பாதுகாப்புடன் பெங்களூர் நகராட்சியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரங்களை இடித்து அகற்றியுள்ளனர். இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் மற்றும் மின்சார சேவையை நிறுத்தியுள்ளனர். மக்கள் வசித்து வந்த கூடாரங்களை இடிக்கும் பொழுது அங்குள்ளவர்கள் கூறியதை எதையும் கேட்காமல் வீடுகளை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், வீடுகள் அகற்றப்பட்ட நிகழ்விற்கு பிறகே அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் அசாம், திரிபுரா மற்றும் வட கர்நாடகா பகுதியில் இருந்து குடியேறியவர்கள். வட கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள் வசித்து வருவதாக அங்குள்ளவர்கள் பேட்டி அளித்து உள்ளனர். அந்த பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதால் தெருக்களின் இருபுறங்களிலும் அவர்கள் வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
” பெங்களூர் நகராட்சியின் துணை செயற் பொறியாளரிடம் இருந்து குடியிருப்புகளை அகற்ற பாதுகாப்பு வேண்டும் என காவல்துறைக்கு அளித்த கடிதத்தில், இங்கே சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் தங்கியுள்ளனர் மற்றும் அவர்கள் இப்பகுதியை சேரியாக மாற்றி வருகின்றனர். இதனால் அருகே இருக்கும் பகுதியும் மோசமடைவதாக அங்கு வசிப்பவர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன ” என தெரிவித்ததாக ஹிந்து ஆங்கில செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பாஜக எம்எல்ஏ ட்வீட் செய்த ஜனவரி 11-ம் தேதி அன்றே பெங்களூர் போலீஸ் தரப்பில் இருந்து நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் கூடாரங்கள் அமைத்து இருப்பதாக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் தங்கியிருப்பதாக தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். அப்பகுதியில் வசித்து வந்த மக்களின் கூடாரங்கள் இடிக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அங்குள்ளவர்கள், நாங்கள் இந்தியர்கள் என்பதற்காக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சிலர் தேசிய குடிமக்கள் பதிவிட்டில் தங்களின் பெயர் உள்ள ஆதாரங்கள் உள்ளிட்டவையை காண்பித்து உள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் மூன்று வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்த சம்பவங்களும், சந்தேகத்தில் சிலரை பிடித்து விசாரித்த பொழுது சரியான ஆவணங்கள் காண்பித்த பிறகு விடுவித்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் சட்டவிரோதமாக கூடாரங்கள் அமைத்து வசித்து வருவதாக பரவிய தவறான தகவலால் முறையான ஆதாரங்கள் இல்லாமல் மக்கள் வசித்து வந்த கூடாரங்கள் அகற்றப்பட்டது சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது.
Proof links :
Hundreds of Huts of ‘Illegal Bangladeshi Immigrants’ Razed in Bengaluru, Turns Out All Are Indians
Police detain three Bangladeshi migrants in Bengaluru
Bengaluru: Palike flattens 300 huts of ‘illegal Bangladeshi immigrants
Bengaluru Police demolishes makeshift houses of migrants as CAA-NRC debate rages on