பொய் பேசும் பிரதமர் மோடி ?

கர்நாடகா மாநிலம் பிடர் பகுதியில் மே 9-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறையில் இருந்த போது எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கூறியது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

எனினும், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியது யாதெனில், “ நம் தேசத்தின் விடுதலைக்காக போராடிய மிகச்சிறந்த வீரர்களான ஷாஹீத் பகத்சிங், பதுகேஷ்வர் டுத்ட், வீர் சவார்கர் உள்ளிட்டோரை சிறையில் எந்த காங்கிரஸ் தலைவராவது சந்தித்து உள்ளார்களா ? ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் ஊழலால் சிறைக்கு சென்றவர்களை சென்று பார்ப்பார்கள் என்று கர்நாடகா பிரச்சாரத்தில் கூறியிருந்தார். இதையே பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவிலும் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஓய்ந்து மே 12-ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக கட்சியின் ஓட்டு எண்ணிக்கையை உயர்த்த பிரதமர் மோடி கூறிய பொய்யான தகவல்கள் முன் கூட்டியே கண்டறியப்பட்டுள்ளது. பகத்சிங் மட்டுமின்றி முன்னாள் இந்திய ராணுவத் தளபதி திமய்யா  அவர்களை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவமதித்துள்ளர் என்ற தவறான கூற்றையும் கூறியுள்ளார்.

பகத்சிங்கை சந்தித்த நேரு :

1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி டெல்லியில் மத்திய சட்டமன்ற வளாகப் பகுதியில் வெடிகுண்டை வீசியதற்காகபகத்சிங், பதுகேஷ்வர் டுத்ட் ஆகியோர் சிறையில் இருந்தனர். இதில், டுத்ட்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜான் சுண்டேர்ஸ் என்பவரை கொன்றதற்காக பகத்சிங் மற்றும் அவருடன் இருந்த சிவராம் ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 1931 மார்ச் 23-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1929-ல் பகத்சிங், பதுகேஷ்வர் டுத்ட் ஆகியோர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக கைதாகி லாகூரில் உள்ள மத்திய சிறை சாலையில் இருந்தனர். அத்தருணத்தில் முன்னாள் இந்திய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு பகத்சிங் அவர்களை சிறையில் சந்தித்தது குறித்து “ Toward Freedom: The Autobiography of Jawaharlal Nehru “  என்ற தன் வாழ்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ லாகூர் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரத போராட்டம் நிகழ்ந்த சமயத்தில் இது நடந்தது. சிறையில் இருந்த சில கைதிகளை பார்க்க அனுமதி பெற்று சென்றேன். அங்கே முதல் முறையாக பகத்சிங்கை பார்த்தேன். ஜடிண்ட்ரநாத் தாஸ் உள்ளிட்ட சிலரையும் பார்த்தேன். அவர்கள் அனைவரும் பலவீனமாகவும், படுக்கையில் இருந்தனர். அவர்கள் அதிகம் பேசுவது கடினமாக இருந்தது. பகத்சிங் பார்ப்பதற்கு வசீகரமாகவும், அறிவுசார்ந்த முகத்துடன் மற்றும் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் என்னை பார்த்து மிக மரியாதையாக பேசினார் “ என்று எழுதியுள்ளார்.

நேரு அவர்கள் பகத்சிங் மற்றும் டுத்ட் ஆகியோரை லாகூர் சிறையில் சென்று சந்தித்துள்ளார் என்று 1929-ன் ஆகஸ்ட் 9 மற்றும் 10 தேதிகளில் வெளியான “ The Tribune “ என்ற நாளிதழில் வெளியாகியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 10, 1929-ல் வெளியான நாளிதழில் லாகூர் சிறைச் சாலையில் உண்ணாவிரதத்தில் போராடுபவர்களின் உடல்நலம் குறித்த நேரு அறிக்கையின் பார்வை என வெளியாகியது.

பகத்சிங் மற்றும் காங்கிரஸ் இடையேயான சுதந்திரப் போராட்ட எண்ணம் வெவ்வேறாக இருந்தது உண்மையெனினும், ஒரு போதும் பிரதமர் மோடி கூறிய பொய்யான தகவலை ஏற்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி அவர்கள் பகத்சிங், டுத்ட் ஆகியோரை சந்திக்கவில்லை என காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை முன் வைக்கும் நேரத்தில் வீர் சவார்கர் பெயரையும் இணைத்ததை பலரும் அறியாமல் உள்ளனர். பகத்சிங் பெயரைக் கூறி கர்நாடகாவில் ஓட்டு பெற நினைத்து உள்ளார்கள். ஆனால், இறுதியில் தவறானப் பரப்புரை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.

கட்சி ஆட்சி என்பதையெல்லாம் விடுங்கள் . நீங்கள் எங்கள் தேசத்தின் பிரதமர். எளிய பின்புலத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய இடத்தில் உள்ளீர்கள். வெறும் ஓட்டுக்காக பொய் ஏன்? நாட்டின் பிரதமர் தரும் தகவலே பொய் எனில் எத்தனை பெரிய தவறு! தேசத்தின் மதிப்பு அல்லவா நீங்கள்? உங்களுக்கு எழுதித் தரும் மக்களின் நோக்கம் என்ன? எதிர்கட்சியை அவமதிப்பதா இல்லை உங்களை தலை குனியச் செய்வதா?

எத்தனை லட்சம் வாக்காளன் காங்கிரஸ் கட்சியின் ஊழல் , விலை ஏற்றம் போன்ற துன்பத்தை துடைத்தெறிவீர்கள் என வாக்களித்தான்! இன்றும் உங்களை நம்பும் முகங்களை அல்லவா முதலில் ஏமாற்றுகிறீர்கள்! பொய் வேண்டாம் பிரதமரே. உங்கள் மாண்பில் தேச மாண்பும் அடக்கம்.

 

Toward Freedom: The Autobiography of Jawaharlal Nehru

indian history pics

PM modi twitter- bhagat singh twit  

Please complete the required fields.
Back to top button