This article is from Sep 17, 2021

பனாரஸ் இந்து பல்கலை. “பாரதி இருக்கை”, பிரதமர் மோடியின் அடுத்த பொய்யா.. விரிவான விளக்கம் !

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-ம் ஆண்டு நினைவுநாளின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ” உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் ” என அறிவித்து இருந்தார்.

Twitter link | Archive link 

ஆனால், பிரதமர் மோடியின் இத்தகைய அறிவிப்பிற்கு ஓரிரு நாட்களுக்கு பிறகு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தமிழ் இருக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது என அப்பல்கலைக்கழகத்தில் பயின்ற உஷா சுப்பிரமணியன் என்பவர் பதிவிட்ட முகநூல் பதிவின் பக்கம் மற்றும் தீக்கதிர் உடைய பதிவு உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உஷா சுப்பிரமணியன் முகநூல் பதிவில், ” பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு பாரதி பெயரில் இருக்கையை அமைத்துள்ள செய்தி கேட்டு சிரிப்பு வருகிறது. நான் இதே பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் முனைவர் சித்தலிங்கையா அவர்களிடம் தமிழ் பயின்றுள்ளேன். அநேகமாக, 1962-ம் ஆண்டு நேருவின் தலைமையில் இருந்த ஒன்றிய அரசு அமைத்தது என நினைக்கிறேன். அப்போது ஒரே ஒரு மாணவியாக அங்குத் தமிழ் படித்தேன். எனது ஆசிரியர் எனக்கு ஏராளமான இலக்கியம் மட்டும் இலக்கணங்களைக் கற்பித்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு பி.எச்.யூ சென்ற போது சித்தலிங்கையா மற்றும் சிவராமன் ஆகியோரின் வகுப்புகளுக்குச் சென்றேன். எனவே, இந்த பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளுக்கு தமிழ் உள்ளதால் புதிதாக நிறுவப்பட தேவையில்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.

இப்பதிவுகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்ற உஷா சுப்பிரமணியன் உடைய முகநூல் பக்கத்தை ஆராய்கையில், வைரலாகும் பதிவு இடம்பெறவில்லை. அதை நீக்கி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஆகையால், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தமிழ் இருக்கை குறித்து தேடுகையில், 2003-2004 ஆம் ஆண்டிற்கான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இருக்கைகளுக்கான நிதியுதவி குறித்த பட்டியலில் தமிழ் இருக்கைக்கு ரூ.9 லட்சம் என இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறையின் உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ”  பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதை நானும் பார்த்தேன். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ம் ஆண்டில் இருந்து தமிழ் படிப்புகள் இருந்து வருகிறது. 1960களில் தமிழ் இருக்கை மற்றும் சித்தலிங்கையா குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், 1977-78 கல்வியாண்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசாங்கம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உட்பட இரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 3 லட்சம் நிதி அளித்து இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நிதியுதவி பற்றாக்குறை காரணமாக, 2003-2004-ம் ஆண்டில் இங்கிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் தமிழ் இருக்கை தொடர்பான நிதியுதவி பற்றிய ஆவணத்தை மேற்கொள்காட்டியே சமூக வலைதளங்களில் பேசி வருவதையும் பார்த்தேன். 2003-04 காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசும் தமிழ் இருக்கை என்பதற்கு பதிலாக பாரதியின் பெயரை வைத்ததாக ஒரு கூற்றும் இருக்கிறது. ஆனால், அதற்கான தரவுகள் இல்லை. அதுகுறித்த தரவுகளை அலுவலகத்தில் கேட்டு உள்ளோம்.

பொதுவாக இருக்கை என்பது 5 ஆண்டுகள் அந்த நிதியில் இயங்கும். ஒரு பேராசிரியர் வந்து நிர்வகிப்பார். அதன்பின், அது வழக்கமான போஸ்ட் ஆக துறையின் ஒரு பகுதியாக மாறிவிடும். முன்பு தமிழ்நாடு அரசு அளித்த நிதியுதவி மற்றும் பாரதி இருக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான போஸ்ட் ஆக எங்கள் காலக்கட்டத்தில் துறையுடன் இணைத்து விட்டது. அதன்பிறகு, பெயரும் மாறிவிடும். அந்த போஸ்டில் தற்போது நான் இருக்கிறேன்.

உஷா சுப்பிரமணியன் இங்கு படித்துள்ளார். அவர் தவறாக புரிந்து கொண்டு பதிவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு அரசு அளித்த நிதியில் உருவாக்கப்பட்ட இருக்கை தொடர்ந்து இங்கு இயங்கி வருகிறது, அதில் ஆட்களும் இருக்கிறார்கள். தற்போது பிரதமர் அறிவித்துள்ள பாரதியார் இருக்கை தனி, அதற்கான நிதி ஒன்றிய அரசு அளிக்கும். இதுதான் அடிப்படை வேறுபாடு. ஒரு துறையில் 10 இருக்கைகள் கூட இருக்கும். தமிழ் மொழிக்கு பாரதியார், பெரியார், பாரதிதாசன் என பல பெயர்களில் கூட இருக்கைகள் இருக்கலாம் ” என விளக்கம் அளித்து இருக்கிறார்.

Please complete the required fields.




Back to top button
loader