சானிட்டரி நாப்கின் இலவசமாக கொடுத்தால் ஆணுறையையும் இலவசமாகக் கேட்பார்களா ?

பீகாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவி ஒருவர் சானிட்டரி நாப்கினை அரசு ரூ.20 – ரூ.30க்கு அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு, “இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள். நாளை ஆணுறை கேட்பீர்கள்” எனப் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.

Advertisement

இதில் பெரும் சோதனை என்னவென்றால் அவர் பேசிய நிகழ்ச்சி “பெண்களின் மதிப்பை அதிகரித்தல்”  (Enhancing Value of Girls) என்ற தலைப்பில் நடைபெற்றது. பீகார் மாநிலம், பாட்னாவில் செப்டம்பர் 28ம் தேதி நடந்த இந்நிகழ்ச்சிக்கு அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமை தாங்கினார். அதில் குடிசைப் பகுதியைச் சார்ந்த 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் ஹர்ஜோத் கவுர் பாம்ராவிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அதில் ஒரு மாணவி, “சானிட்டரி நாப்கினை அரசு ரூ.20-ரூ.30க்கு கொடுக்கலாமா?” எனக் கேள்வி கேட்கிறார்.

அதற்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, “நாளை அரசாங்கம் ஜீன்ஸ் தரலாமே எனக் கேட்பீர்கள். அடுத்து அழகான காலணி இல்லை எனக் கேட்பீர்கள். இறுதியாக அரசாங்கம் கருத்தடை முறையையும், ஆணுறைகளையும் இலவசமாகக் கொடுக்கும் என எதிர்பார்ப்பீர்கள்” எனப் பதில் அளித்துள்ளார்.

ஹர்ஜோத் கவுர் பாம்ரா அவ்வாறு பதிலளித்ததற்கு அம்மாணவி “மக்கள் வாக்கு செலுத்தி அரசாங்கத்தை உருவாக்குகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

அதற்கு அந்த அதிகாரி, “இது மிகவும் முட்டாள்தனமானது. அப்படியானால் வாக்கு அளிக்க வேண்டாம். பாகிஸ்தானாக மாறட்டும். பணத்திற்காகவும், சேவைக்காகவும் தான் வாக்கு அளிக்கிறீர்களா?” என அந்த மாணவியிடம் கேட்டுள்ளார்.

வேறொரு மாணவி எங்களது பள்ளியில் மாணவிகளுக்கான கழிவறை உடைந்து கிடக்கிறது. அதனால் சில மாணவர்கள் அடிக்கடி பெண்கள் கழிவறைக்குள் நுழைகின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.

இதற்கும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்ன பதில் அடுத்த அதிர்ச்சி  “உங்களது வீட்டில் தனித் தனி கழிவறை உள்ளதா?” எனக் கேட்கிறார்.

சானிட்டரி நாப்கின் :

பெண்களின் மாதவிடாய் காலங்களில் சாம்பல், துணிகள் போன்ற பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாப்கின், சானிட்டரி நாப்கின், menstrual cup போன்றவையே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்குச் சுகாதாரமானது எனத் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 15 முதல் 19 வயதுடைய பெண் குழந்தைகளில் 78 சதவீதத்தினரும், 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 77 சதவீதத்தினரும் மட்டுமே மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான முறையினை பின்பற்றுவதாகத் தேசிய குடும்பநல ஆய்வு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, 2011 நவம்பர் மாதம் இலவச சானிட்டரி நாப்கின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார். இத்திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ44.21 கோடி செலவிடப்பட்டது.

இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திய சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் மற்ற மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2021, அக்டோபர் மாதம் ஆந்திராவில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2022, செப்டம்பர் மாதம்தான் அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கத் தொடங்கியுள்ளது.

ஸ்காட்லாந்து  நாடு 2020 செப்டம்பரில் அந்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் சானிட்டரி நாப்கினை இலவசமாக வழங்கச் சட்ட மசோதாவினை நிறைவேற்றியுள்ளது. உலக அளவில் ஒரு நாட்டிலுள்ள பெண்கள் அனைவருக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கியது ஸ்காட்லாந்து நாடுதான்.

இப்படி இலவசமாகக் கொடுத்து அவர்களின் சுகாதார வாழ்வை மேம்படுத்த முயற்சிக்காமல் விலையைக் குறைத்துக் கொடுங்கள் என்றதற்கு மோசமான பேச்சைக் குழந்தைகளிடம் பேசியுள்ளார்.

பள்ளி கழிவறை :

பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பு இடைநிற்றல் அதிகரிக்கக் கழிவறை இல்லாதது ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளரின் 2020 அறிக்கைப்படி, இந்தியாவில் 44 சதவீத அரசுப் பள்ளிகளில் கழிவறை இல்லை. அப்படியே இருந்தாலும், 55 சதவீத கழிவறைகளில் கை கழுவும் வசதி கூட இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவறை சுவர் சரி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள் என மாணவி கூறியதற்கு, உங்கள் வீட்டில் தனித் தனியாகக் கழிவறை உள்ளதா என ஐ.ஏ.எஸ். அதிகாரி கேட்பதுக் குப்பை மனநிலை.

கருத்தடை : 

இந்தியாவில் கருவுறும் விகிதத்தினை 2.1 ஆக 2025ம் ஆண்டுக்குள் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2017 செப்டம்பரில் இரண்டு இலவச கருத்தடை மருந்துகளை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆணுறை :

30க்கும் மேற்பட்ட பாலியல் நோய் தொடர்பான வைரஸ், பாக்டீரியாக்கள் பரவுகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் நாள் ஒன்றுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாலியல் ரீதியாகத் தொற்று நோயினால் (STI) பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இம்மாதிரியான நோய் பரவலைத் தடுக்கவும், ஆரோக்கியமான உடலுறவிற்காகவும் அரசு மருத்துவமனைகளில் இலவச ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.

மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரம், கருத்தடை முறைகள் குறித்து அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஹர்ஜோத் கவுர் பாம்ரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியோ, இன்று சானிட்டரி நாப்கின் குறைந்த விலைக்குக் கேட்பீர்கள். நாளை கருத்தடை முறையையும், ஆணுறையினையும் அரசு கொடுக்கும் என எதிர்பார்ப்பீர்கள் எனப் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். அரசு ஆணுறையை இலவசமாக வழங்குவது கூட தெரியாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.

இம்மாதிரியான சிந்தனை உள்ள ஒரு அதிகாரி மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் என்பது எந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் ?

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button