கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு !

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் பெரும் வன்முறை நடந்தது. அந்த வன்முறையின் போது, மார்ச் 3-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த 21 வயதான பில்கிஸ் பானு எனும் 5 மாத கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கும்பல், அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது.

Advertisement

அதுமட்டுமின்றி, பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்தனர். அப்போது பில்கிஸ் பானுவின் கையில் இருந்த 2 வயது குழந்தையை பாறையில் அடித்துக் கொலை செய்த கும்பல் தப்பி ஓடியது. இந்த கொடூர சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் 2008-ம் ஆண்டு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் எனக் கூறி ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் குஜராத் மாநில அரசு விடுவித்து உள்ளது. குஜராத்தில் கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் குஜராத் அரசு விடுவித்தது சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.

11 பேரின் விடுதலைக் குறித்து குஜராத் மாநிலத்தின் கூடுதல் உள்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், ” 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து உள்ளனர். சட்டப்படி, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு தண்டனையில் இருந்து விடுவிக்க மனுதாக்கல் செய்யலாம். அவர்கள் தாக்கல் செய்த மனுவை அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். அந்த வகையில், 11 பேரின் மனு மீது சிறைத்துறைக் குழு மற்றும் மாவட்ட சட்டக் குழு அளித்த பரிந்துரையின்படி இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதில், குற்றவாளிகளின் வயது, சிறை நடத்தை மற்றும் குற்றத்தின் தன்மை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது ” என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Twitter link  

குஜராத் அரசால் விடுவிக்கப்பட்ட 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து வந்த போது ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்று ஆசிர்வாதம் பெறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பில்கிஸ் பானு வழக்கு : 

2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பில்கிஸ் பானு மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பானுவிற்கு கொலை மிரட்டல் வருவதாக கூறியதால் வழக்கின் விசாரணை குஜராத்தில் இருந்து மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 11 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கில் போலீசார், மருத்துவர் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து இருந்தது. அதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு 7 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ரூ.50 லட்சம், பணி மற்றும் அரசுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என குஜராத் அரசிற்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், குஜராத் அரசு கால தாமதம் செய்ததோடு, தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கும் தொடுத்து இருந்தது. எனினும், இழப்பீட்டை 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என 2019ம் ஆண்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

links : 

Bilkis Bano Gang Rape Case: 11 Convicts Sentenced To Life Imprisonment Released Under Gujarat Govt’s Remission Policy

released convicts in bilkis bano gang rape greeted with sweets hugs

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button