பிரதமர் மோடிக்கு நன்றி கூறி கனடாவில் விளம்பர பலகை.. யார் வைத்தது ?

கனடா நாட்டிற்கு முதல் கட்டமாக ஆஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சுமார் 5 லட்சம் டோஸ்கள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டது. இதற்கு அடுத்து, 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது. இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி புகழ்ந்து இருந்தார்.
இந்நிலையில், இந்தியா கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக கனடாவின் டொரான்டோ பகுதிகளில் இந்தியாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறி வைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையின் புகைப்படம் ஆனது செய்திகள், சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Billboards come up in Greater Toronto area thanking PM Narendra Modi for providing COVID-19 vaccines to Canada pic.twitter.com/0AaQysm6O1
— ANI (@ANI) March 11, 2021
இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. சில செய்திகள் மற்றும் பதிவுகளில் இந்த நன்றி தெரிவிக்கும் விளம்பர பலகைகளை வைத்தது யார் எனக் குறிப்பிடவில்லை. ஜீ ஹிந்துஸ்தான், நியூஸ்18 செய்திகளில் கனடா வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்கள்.
ஆனால், ” Hindu Forum canada ” எனும் அமைப்பே இந்தியா மற்றும் பிரதமருக்கு நன்றிக் கூறும் டிஜிட்டல் விளம்பர பலகையை கனடாவில் வைத்துள்ளது. அந்த விளம்பர பலகையிலும் அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.
“Our objective is to highlight the natural friendship between Canada and India and to highlight this positive development with India sending vaccines to Canada,” said Rao Yendamuri, president of Hindu Forum Canada https://t.co/Z5vSLPj3Uz
— HinduForumCanada (@canada_hindu) March 11, 2021
” கனடா மற்றும் இந்தியா இடையிலான நட்பை முன்னிலைப்படுத்துவதும், கனடாவுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்புவதன் மூலம் இந்த நேர்மறையான வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதுமே எங்களின் நோக்கமாகும் ” என்று விளம்பர பலகை பிரச்சாரத்திற்கு பின்னணியில் உள்ள Hindu Forum Canada-வின் தலைவர் ராவ் என்டாமுரி தெரிவித்து உள்ளார்.
மொத்தம் ஒன்பது டிஜிட்டல் விளம்பர பலகைகள் ஜி.டி.ஏவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டன. மேலும், பிராம்ப்டன் நகரில் நான்கு இடங்களில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
கனடாவிற்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பப்படுவதற்கு அந்நாட்டு தரப்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறி அந்நாட்டில் வைத்த விளம்பர பலகையின் புகைப்படம் இந்தியாவில் வைரல் செய்கையில், அதை யார் வைத்தது என்கிற தகவல் விடுபட்டு விடுகிறது. செய்திகளிலும் கூட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமல், கனடா எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
Links :
Giant billboards in Canada thank Indian PM Modi for providing Covid-19 vaccines