அன்று 20,000 புத்தகங்கள், இன்று 2 லட்சம் வழக்குகள்.. பொய் பேசி சிக்கும் அண்ணாமலை.. முழுமையான ஆதாரங்கள் !

மிழகத்தில் சட்டம் ஒழுங்கில் மெத்தனப்போக்கை திமுக அரசு கடைபிடிப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்வதை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை(2:02:40 மணி நேரத்தில்), ” முதலமைச்சருக்கு இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி) தெரியுமானு தெரியாது. 11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் கேஸ்(வழக்கு) போட்டு இருக்கேன் ” எனப் பேசி இருக்கிறார்.

2 லட்சம் வழக்குகளை பதிவு செய்தாரா ? 

2 லட்சம் வழக்குகளை பதிவு செய்து இருக்கிறேன் என அண்ணாமலை பேசியது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு காரணம், அண்ணாமலை கூறுவதுபோல், 11 ஆண்டுகளில் மொத்தம் 4,015 நாட்களே வரும், ஆனால் அவர் 5,000 நாட்கள் பணியாற்றியதாகத் தவறாகக் கூறி இருக்கிறார்.

அடுத்ததாக, அண்ணாமலை ஐபிஎஸ் தேர்ச்சிப் பெற்று 2011ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். முதல் பணி நியமனமாக கர்நாடகாவில் உள்ள கர்கலா எனும் பகுதியில் ஏஎஸ்பி ஆக பணியாற்றத் துவங்கினார்.

இதையடுத்து, 2015 ஜனவரி முதல் 2016 ஆகஸ்ட் வரை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் எஸ்.பி ஆக பணியாற்றி இருக்கிறார். பின்னர், 2018 அக்டோபர் வரை சிக்கமகளூர் மாவட்டத்தின் எஸ்.பியாக பணியாற்றி இருந்தார். அதன்பின், 2019ம் ஆண்டு மே மாதம் அவர் பெங்களூர் தெற்கு பகுதியின் துணை ஆணையராக(டி.சி) பணியாற்றும் போது தன்னுடைய பணியை ராஜினாமா செய்து உள்ளார்.

Advertisement

ஆக, 2011 முதல் 2019 வரையில் இடைப்பட்ட 9 ஆண்டுகள்(முழுமையாக நிறைவடையவில்லை) மட்டுமே அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் இருந்துள்ளார். மேலும், 2019ம் ஆண்டு அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், ” கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஐபிஎஸ் ஆக வேலை செய்தேன ” எனக் கூறி இருக்கிறார். இதில் இருந்து அவர் மேடையில் 11 ஆண்டுகள் போலீஸ் பணியில் இருந்ததாக பேசியதும் தவறு . 

அடுத்ததாக, அவர் 2 லட்சம் ஐபிசி வழக்குகளை பதிவு செய்து உள்ளதாகக் கூறி இருக்கிறார். எனவே, கர்நாடகாவில் பதிவான ஐபிசி குற்ற(IPC Crime) வழக்குகள் பற்றிய என்சிஆர்பி தரவுகளைத் தேடிப் பார்த்தோம்.

” அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் சேர்ந்த பிறகு அவர் பணியாற்றிய கர்நாடகா மாநிலத்தில் மொத்தமாக 2011ம் ஆண்டு 1,37,600 ஐபிசி குற்ற வழக்குகளும், 2012ம் ஆண்டு 1,34,021 ஐபிசி குற்ற வழக்குகளும், 2013ல் 1,36,689 வழக்குகளும், 2014ம் ஆண்டு 1,37,338 வழக்குகளும், 2015ம் ஆண்டு 1,38,847 வழக்குகளும், 2016ல் 1,48,402 வழக்குகளும், 2017ல் 1,46,354 வழக்குகளும், 2018ல் 1,26,534 வழக்குகளும், 2019ல் 1,20,165 வழக்குகளும் பதிவாகி இருப்பதாக என்சிஆர்பி தரவுகள் தெரிவிக்கின்றன”.

என்சிஆர்பி தரவுகளின் படி, 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 12,25,950 ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மேலும், கர்நாடகாவில் உள்ள 31 மாவட்ட வாரியாக ஒவ்வொரு ஆண்டும் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறையக்கூடும். ஆகையால், அண்ணாமலை பணியாற்றிய மாவட்ட வாரியாக பதிவான ஐபிசி குற்ற வழக்குகளின் எண்ணிக்கையையும் தேடினோம்.

கர்நாடகா மாநில குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, ” 2015ல் அண்ணாமலைப் பணியாற்றிய உடுப்பி மாவட்டத்தில் மொத்தம் 2,617 ஐபிசி குற்ற வழக்குகளும், 2016ல் மொத்தம் 2,529 ஐபிசி குற்ற வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. 2017ல் பணியாற்றிய சிக்கமகளூர் மாவட்டத்தில் 2,684 வழக்குகளும், 2018ல் 2404 வழக்குகளுமே பதிவாகி இருக்கிறது”. 2019ல் பெங்களூர் நகரம் முழுவதும் 27,251 ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், அண்ணாமலை பெங்களூர் நகரின் தெற்கு பகுதிக்கு மட்டுமே துணை ஆணையராக இருந்தார்.

இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், அண்ணாமலை பணியாற்றிய மாவட்டங்களில் ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்குள் தான் ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அவர் பணியாற்றிய மாவட்டங்களில் பதிவான வழக்குகள் தோராயமாக 20,000-த்தை தாண்டாத நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாழ்க்கையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐபிசி வழக்குகளைப் பதிவு செய்து இருப்பதாக கூறியதும் பொய் என அறிய முடிகிறது.

இதற்கெல்லாம் முன்பாக, 2022 மே மாதம் மதுரையில் மகளிர் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை 20,000 புத்தகங்களைப் படித்து இருப்பதாக பேசியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், தற்போது அண்ணாமலை தன்னுடைய வாழ்க்கையில் 11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐபிசி வழக்குகளைப் பதிவு செய்து இருப்பதாக பேசி பொய்யும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Links :

singham annamalai the-ips-officer-engineer-mba-who-studied-islam-to-fight-terror

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button