அண்ணாமலை கடனாளியா ? தேர்தல் செலவு கணக்கு, தேர்தல் பத்திரம் கூறுவதென்ன ?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து களம் காண வேண்டும் என தனது விருப்பத்தை நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது. இதன் எதிரொலியாக கூட்டணிக் குறித்த முடிவுகளை தேசிய தலைமையே எடுக்கும் என அக்கட்சி எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் பதிவு செய்தனர். இதனால் தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பான சூழல் உருவானது.
இச்சூழலில் மார்ச் 19ம் தேதி அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பணமில்லாத ஓர் அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் மாற்றம் உருவாகாது. இரண்டு வருட அரசியலைப் பார்த்த பிறகு இம்முடிவுக்கு நான் வந்துள்ளேன். அதை என்னுடைய கட்சிக்குள் பேச ஆரம்பித்து இருக்கிறேன். ஆனால் கூட்டணிப் பற்றி அதற்கான நேரம் வரும் போது எங்களது தலைவர்கள் சொல்வார்கள்.
நான் போலீசாக பணியாற்றிய 9 வருடத்தில் சம்பாரித்த எல்லா பணமுமே அரவக்குறிச்சி தேர்தலில் போய் விட்டது. நான் குருவியாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம். தேர்தல் முடிந்த பிறகு சத்தியமா கடனாளியாக இருக்கேன் ” எனப் பேசி இருக்கிறார்.
இதையடுத்து, அண்ணாமலை போட்டியிட்ட தேர்தலில் தன்னுடைய சொந்த பணத்தை செலவே செய்யவில்லை(NIL) எனத் தேர்தல் செலவு கணக்கில் கூறி இருக்கிறார். பின்னர் எப்படி கடனாளி ஆனார் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது.
2021 அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தேர்தல் செலவுகள் குறித்து அளித்த தகவல்களில், ” தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட சொந்த நிதி என்ற பகுதியில் எதுவும் இல்லை(NIL) எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்ததாக, கட்சியில்(பாஜக) இருந்து 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இறுதியாக, எந்தவொரு நபர்/நிறுவனம்/சங்கங்கள் போன்றவற்றில் இருந்து கடனாக பெறப்பட்ட மொத்த தொகை ரூ.25 லட்சம் ” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த 25 லட்சம் ரூபாய் கடனை எந்தெந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றார் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதை வைத்தே தேர்தலால் கடனாளி ஆனேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். 2021 தேர்தலுக்காக அண்ணாமலை கட்சியில் இருந்து 15 லட்சம், கடனாக 25 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ40 லட்சம் வரை பெற்று இருக்கிறார். ஆனால், அண்ணாமலை தேர்தலில் செலவு செய்த தொகையாக ரூ30,80,000 எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மீதமிருந்த தொகை ரூ9,20,000 லட்சம்.
2021ல் அண்ணாமலை அளித்த தேர்தல் வாக்குறுதிப் பத்திரத்தின்படி, அவருக்கு 2.9 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன, கடனாக 25 லட்சம் ரூபாய் உள்ளன. அவரின் பெயரில் இரு வங்கிகளில் 37.5 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளார். நேரடியாக தன்னுடைய சொந்த சேமிப்பை தேர்தலுக்கு பயன்படுத்தவில்லை.
பாஜக கட்சி கொடுத்த ரூ15 லட்சத்தை தாண்டி அண்ணாமலை அரவக்குறிச்சி தேர்தலுக்காக செலவு செய்த தொகை ரூ15.8 லட்சம். ஆனால், அவரின் மொத்த சேமிப்பாக வங்கிகளில் வைத்து இருந்த நிரந்தர வைப்புத் தொகை மட்டுமே ரூ37.5 லட்சம். இப்படி இருக்கையில், கடனாளியாக இருக்கிறேன் என அண்ணாமலை கூறுவது ஏன் எனத் தெரியவில்லை.
Links :
ANNAMALAI. K(Criminal & Asset Declaration)
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு!