அங்கீகாரம் இல்லாத கல்லூரி, பாலியல் குற்றச்சாட்டால் கைதான பாஜக பிரமுகர் டாஸ்வின் !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி எனும் தனியார் கல்லூரியின் தலைவரும், பாஜகவைச் சேர்ந்தவருமான டாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளிப்பதாக அக்கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் இல்லாத கல்லூரி நடத்தி வந்துள்ளான் டாஸ்வின் எனும் பாஜக பொறுப்பிலுள்ள பிரமுகர். மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு சொல்லி போராடி வருகிறார்கள். ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட கல்லூரி மீண்டும் எப்படி இயங்கியது? கைது நடக்குமா? @CMOTamilnadu pic.twitter.com/cJzPivXwzD
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) June 11, 2022
” டாஸ்வின் ஜான் கிரேஸ், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி தனியாக அழைத்து பாலியல்ரீதியாக பேசுவது, தவறாக நடந்து கொள்வது போன்ற செயல்களை செய்துள்ளார். அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவதும், மற்ற பெண்களையும் இவ்வாறு நடந்து கொள்ள வழிவகுத்து உள்ளார். இதற்கான ஆதாரங்கள் தங்களின் உள்ளது, டாஸ்வின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாங்கள் படிப்பது தனியார் கல்லூரி என்பதால் எங்கள் படிப்புக்கு என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரியை மூடி விட்டால் எங்கள் படிப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் மற்றும் இங்கு தவறு நடந்து உள்ளதால் தொடர்ந்து படிக்க பயமாக இருக்கிறது. ஆகையால், படிப்பை நிறுத்தாமல் மாற்று கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்யுங்கள் ” எனக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் கல்லூரி மாணவிகளின் போராட்டத்தை அடுத்து கல்லூரி தலைவர் டாஸ்வின் கைது செய்யபட்டுள்ளார். இவர் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர்.
அதுமட்டுமின்றி, 2017-ல் கல்லூரியில் உள்ள உடமைகளை எடுத்துக் கொள்ள வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கல்லூரி தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் அங்கீகாரம் இல்லாமல் டாஸ்வின் நடத்தி வரும் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி கல்லூரியை தமிழ்நாடு அரசு மூடி சீல் வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத கல்லூரி மீண்டும் யாருடைய உதவியால், எப்படி இயங்கியது என்கிற கேள்வி எழுகிறது. அங்கீகாரம் இல்லாத கல்லூரியை நடத்தி, ஏழ்மையில் இருக்கும் மாணவிகளை பயன்படுத்தி பாலியல்ரீதியாக தவறாக நடந்து கொண்டது மட்டுமின்றி, பல மாணவிகளின் சான்றிதழ்களைப் பெற்று வைத்துக் கொண்டு அதைத் தராமலும், அதற்காக அதீத பணம் வசூலிப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவி நம்மிடம் தெரிவித்துஇருக்கிறார்.
கூடுதல் தகவல் :
டாஸ்வின் தற்போது வேறு நிறுவனங்கள் உடன் இணைந்து அழகப்பா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்று கேட்டரிங் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை கொண்ட கல்லூரியையும் நடத்தி வருகிறார். போலீஸ் விசாராணைக்காக அழைத்து செல்லப்பட்ட டாஸ்வினை கைது செய்யக்கோரி மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.