
பாஜக முன்னாள் இராணுவத்தினர் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் கர்னல் பாண்டியன் “நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது என்றும், மேடையில் உள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் குண்டு வைப்பதிலே கெட்டிக்காரர்கள், சுடுவதிலே கெட்டிக்காரர்கள். இதை நாங்கள் செய்வதாக இல்லை. ஆனால், செய்ய வைத்து விடாதீர்கள், நான் தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்” எனப் பேசி இருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இராணுவ வீரர் பிரபு கொலை :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி இரண்டு தரப்பிற்கு இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் பிரபு என்ற இராணுவ வீரர் பலத்த காயங்களுடன் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 6 பேரை கடந்த 9ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பிரபு கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி 15ம் தேதி கைது செய்யப்பட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் செய்தியாளர் சந்தித்தார்.
அதில், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே உறவினர்கள்தான். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. இதனை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்ட கொலை என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
பாஜகவினர் போரட்டம் :
இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்த நாளில் இருந்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு பாஜக இன்றைய தினம் (பிப்.21) திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிகழ்த்தி இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர் திமுக கவுன்சிலர் அக்கட்சியின் பிற தலைவர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி கொலை செய்ததாக் பேசி இருக்கிறார்.
”எங்களை சீண்டினால் திமுக அரசுக்கு நல்லதல்ல”
முன்னாள் ராணுவ வீரர் பகிரங்க எச்சரிக்கை!https://t.co/wupaoCzH82 | #DMK #BJP #Chennai #TNPolitics pic.twitter.com/vv5DzIFd6k
— ABP Nadu (@abpnadu) February 21, 2023
மேலும், “நீங்கள் எங்களுக்கு பரீட்சை வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால். அது நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலே கெட்டிக்காரர்கள், சுடுவதிலே கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதிலே கெட்டிக்காரர்கள். இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று நான் தமிழக அரசை எச்சரிக்கிறேன்” என மேடையில் பேசினார்.
அவர் பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர், ‘இராணுவ அதிகாரியாக இருந்து கொண்டு மிரட்டும் தோரணையில் குண்டு வைப்போம் என பேசுவது சரியா?’ என கேள்வி கேட்டார். “இனி மேலும் இது தொடர்ந்தால் செய்வோம்” என பாண்டியன் மிக ஆவேசமாக பதில் அளிக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘I am challenge’ என கத்துகிறார்.
குண்டு வைப்பது தீவிரவாத செயல் அல்லவா? என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு “நீங்கள் இனிமேல் செய்தால் நாங்கள் செய்வோம். இது மிரட்டல்தான். இது மிரட்டல்தான்” என பலமுறை கூறி தமிழ்நாடு அரசை எச்சரிப்பதாக அதே ஆவேசத்தில் கூறுகிறார்.
கர்னல் பாண்டியன் முன்னாள் இராணுவ வீரர் என செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இராணுவ வீரர் மட்டும் அல்ல. 2015ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாஜகவின் முன்னாள் இராணுவத்தினர் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர், தற்போது தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இராணுவ அதிகாரி குண்டு வைப்போம் என மாநில அரசை மிரட்டுவதும், அப்போது கூட்டத்தில் ஒருவர் அதற்கு ஆதரவாக கூச்சல் இடுவதும் நாட்டின் பொது அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.