மாட்டையும், மதத்தையும் முன்னிறுத்தி ஆராய்ச்சி.. கோடிகளில் நிதி ஒதுக்கி வீணடித்த ஒன்றிய அரசு !

“மயில்கள் இனச்சேர்க்கை கொள்வதில்லை. பெண் மயில்கள் ஆண் மயிலின் கண்ணீரைப் பருகி கருத்தரிக்கின்றன” போன்ற  அறிவியலுக்கு புறம்பான கூற்றுகளை உயர் அரசு பதவியில் இருப்போரும், அரசியல்வாதிகளும் பேசுவது நமது நாட்டில் மிகச் சாதாரணமான நிகழ்வு.

விநாயகரை மேற்கோள்காட்டி “நமது பண்டைய இந்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரியில் நிபுணத்துவம் பெற்று இருந்தனர்” என்று 2014 ஆம் ஆண்டு மருத்துவர்கள், அறிவியலாளர்கள் நிறைந்த மாநாட்டில் அறிவியலுக்குப் புறம்பான ஆதாரமற்ற விசயங்களை நாட்டின் பிரதமரே பேசுவது நாட்டின் சாமானியனின் அறிவியல் தேடலை தவறானப் பாதையில் வழிநடத்தும்.

இதுபோல் அரசியல்வாதிகளின் அறிவியல் புரிதல் நாட்டின் அறிவியல் வளர்ச்சியை பாதிக்காதவரை சமூகவலைத்தளங்களின் கிண்டலுக்குள் முடிந்துவிடுவது சிக்கலற்றது. ஆனால் அவர்களது அறிவியல் புரிதலும், அறிவியலுக்கு மதசாயம் பூச எத்தனிக்கும் முயற்சியும் நிர்வாக ரீதியாக தலை எடுக்கும் போது நாட்டின் அறிவியல் வளர்ச்சி கேள்விக்குரியதாகின்றது.

நிர்வாக ரீதியாக மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் பாஜக அரசாங்கம் நிதி ஒதுக்கிய அறிவியல் தன்மையற்ற, மதவாதத்தின் அடிப்படையில் மட்டுமே முன்மொழிந்த ஆராய்ச்சித் திட்டங்களையும், அறிவியலுக்கு புறம்பான போலி அறிவியலை ஊக்குவிப்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.

மாடும், நாடும் :

2014இல் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின் மாட்டின் சிறுநீர் முதலான பொருட்களால் நோயை குணப்படுத்தும் முறைக்கு “Cowpathy” என்ற புதிய சொல்லாடல் கொடுக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு இந்தியாவின் முதன்மை அறிவியல் அமைப்புகளுள் ஒன்றான Department of Science and Technology (DST) தலைமையில் ‘Scientific Validation and Research on Panchgavya (SVAROP)’ என்ற ஆராய்ச்சிக்கான தேசிய வழிநடத்தல் குழு (National Steering Committee) ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் முக்கிய நோக்கம் மாடுகளின் சிறுநீர், பால், சாணம் முதலான ஐந்து பொருட்களால் ஆன பஞ்சகவ்யத்தின் மருத்துவ குணங்கள், விவசாய பயன்பாடுகள் குறித்து அறிவியல் பூர்வ(!) தரவுகள் நிறுவுவது.

DST மற்றும் Council of Scientific & Industrial Research (CSIR) இணைந்து ஐஐடி டெல்லியை மையமாக வைத்து செயற்படுத்தும் இந்த தேசிய திட்டத்திற்கான செயற்குழுவின் தலைவர் அன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஹர்ஷ் வர்தன். மேலும் ஆர்எஸ்எஸ்-ன் அறிவியல் அமைப்பான விஞ்ஞான பாரதியின் அன்றைய தலைவரான விஜய் பட்கரும், செயலாளரான ஜெய்குமாரும் மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திரா அமைப்பின் உறுப்பினர்களும் இந்த SVAROP ஆய்வுக்குழுவில் முக்கிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SVAROP தேசிய திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 100 கோடி இந்திய ரூபாய். பின் 2019ஆம் ஆண்டு DST இத்திட்டத்திற்கு 30 கோடி வழங்குவதாக அறிவித்த நிலையில் இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏதும் இல்லை [2]. ஒரு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் போது அதை மையமாக வைத்து வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகளே அந்த திட்டத்திற்க்கான அறிவியல் சான்று. SVAROP திட்டத்திற்கான ஆய்வறிக்கைகளை தேடுகையில் இதுவரை இரண்டே இரண்டு விவரிப்பு கட்டுரைகள் (Reviews) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன [3,4]. ஆனால் பஞ்சகவ்யம் தொடர்பான எந்த ஆய்வறிக்கையும், ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிடப்படவில்லை.

மாட்டின் சிறுநீர் புற்றுநோய், AIDS முதலான கொடிய நோய்களை குணப்படுத்தும் என்று பிரஞ்யா தாகூர் முதலான பல பாஜகவின் எம்பிக்கள் மக்களிடம் நிரூபிக்கப்படாத போலி அறிவியல் பேசி வரும் நிலையில் SVAROP மூலமாக பஞ்சகவ்யம் குறித்து எந்த அறிவியல்பூர்வ ஆய்வு ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

SVAROP தேசிய திட்டம் வெற்றியடையாத நிலையில் 2020 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மீண்டும் மாட்டை மையமாக வைத்து மற்றுமொரு ஆய்வு திட்டத்தை முன்மொழிந்தது. மாடும் திட்டமும் ஒன்று தான் பெயர் மட்டும் தான் வேறு – “Scientific Utilisation Through Research Augmentation-Prime Products from Indigenous Cows”(SUTRA PIC).

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (DST) தலைமையில் மீண்டும் நாட்டின் பிரத்யேகமான முதன்மை அறிவியல் அமைப்புகளான DBT, CSIR, Indian Council of Medical Research (ICMR) மற்றும் AYUSH அமைச்சகம் உடன் சேர்ந்து பசு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான ஆராய்ச்சிக்கான முன்மொழிவு (proposal) அறிக்கைக்கான அழைப்பு விடுத்தது இந்திய அரசு.

SUTRA PIC ஆய்வுக்கான அழைப்பில்,

 • இந்திய பசுக்கள் சில தனித்துவமான குணங்கள் மற்றும் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதாக ‘நம்பப்படுகின்றது’.
 • பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் நுண்ணுயிர்கள் நிறைந்திருப்பதாக ‘நம்பப்படுகின்றது’.
 • உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மாட்டின் நெய் உதவும் என்று ‘நம்பப்படுகின்றது’.
 • எரியூட்டப்பட்ட மாட்டின் சாணம் கொசுக்களை விரட்டும் என்று ‘நம்பப்படுகின்றது’ [5].

என்று பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலான கூற்றுக்களே இருந்தனவே அன்றி மாடு சார்ந்த பொருட்களின் மருத்துவ குணமோ , அறிவியல்பூர்வ பயன்களோ விளக்கப்படவில்லை.

இவ்வாறான unscientific திட்டங்களின் மூலம் மத நூல்களிலிருந்து கூறப்பட்ட கற்பனைகளை ஆராய்வதற்கு நாட்டின் நிதி செலவு செய்யப்படுமே தவிர நாட்டின் அறிவியல் வளர்ச்சி எந்த பயனுமில்லை என்றும், SUTRA PIC திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் 100 விஞ்ஞானிகள் கையொப்பமிட்ட மேல்முறையீடு கடிதம் இந்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டது [6].

மேலும் 2017ஆம் ஆண்டே மோடி அரசாங்கம் சரியான அறிவியலுக்கான நிதியை வழங்காமல் அறிவியலுக்கு புறம்பாக மதம் சார்ந்த அறிவியலை ஊக்குவிப்பதை எதிர்த்து டெல்லி மற்றும் சென்னையில் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் மற்றும் பல அறிவியல் மாணவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலம்:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், சரியான திட்டமிடல் இல்லாமையாலும் பல லட்சம் உயிர்களை இந்தியா இழந்துகொண்டிருந்த போது இந்திய விஞ்ஞானிகளை முகம் சுளிக்கவைத்த, நேரடியாக மதநம்பிக்கையை அறிவியலுக்குள் புகுத்திய இன்னொரு ஆய்வு “COVIDஇன் சிகிச்சை முறையாக காயத்ரி மந்திரம்”.

2021 ஆம் ஆண்டு இந்த ஆய்வுக்கான முன்மொழிவில் (proposal) கூறப்பட்டிருப்பதாவது “காயத்ரி மந்திரம் இந்துக்களின் புனிதமான பிரார்த்தனை முறை. கொரோனா வைரஸுக்கு இதுவரை பயனுள்ள சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. விஞ்ஞானிகள் இந்நோய்க்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதற்கு வேகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிராணாயாமா மற்றும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது மற்ற நோய்களில் நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காட்டியதால் இந்த ஆய்வில் கோவிட் நோய் தொற்று உடையவர்களுக்கு காயத்ரி மந்திரம் மற்றும் பிராணாயாமம் மூலம் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்ய உள்ளோம்” [8].

இந்த ஆய்வு AIIMS, ரிஷிகேஷில் நடத்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) கொடுத்த 3 லட்சம் ருபாய் நிதியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மிதமான நோய் அறிகுறி உடைய 20 நோயாளிகள் பங்குபெற்றனர். அவர்களை இரண்டு குழுவாக பிரித்து (குழுவிற்கு 10 பேர்) ஒரு குழுவிற்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிராணாயாமத்துடன் சேர்ந்து காயத்திரி மந்திரமும் காலை மற்றும் மாலையில் ஓதப்பட்டது [9].

மிகக்குறைந்த நோயாளிகளை கொண்டு வெறும் 14 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பெரிதாக எந்த மாற்றமும் கண்டுபிடிக்க இயலாது என்றும் பிராணாயாமம் மூச்சு பயிற்சியினால் சிறு மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பினும் மந்திரம் ஓதுவதினால் நோய் குணப்படுத்தலாம் என்பது மிக பெரிய போலி அறிவியல் மற்றும் அறிவியலுக்கு மத சாயம் பூசுவதே அன்றி வேறில்லை என்று விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பாபா ராம்தேவின் குறுக்கீடு:

கோவிட் பெருந்தொற்று காலத்தில் அறிவியலாளர்களை புறந்தள்ளி யோகா குரு என்று அறியப்பட்ட பாபா ராம்தேவுக்கு அறிவியலாளருக்கான அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எந்த ஆய்வு அடிப்படையுமே இல்லாத பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தை(!) இந்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனே வழி  நின்று ஊக்குவித்தார்.

கொரோனில்கான ஆய்வு முழுவதுமாக முடிக்கப்பட்டது என்றும், உலக சுகாதார மையமே அதற்கான அங்கீகாரம் கொடுத்தது என்றும் பாபா ராம் தேவ் கூறியிருந்த நிலையில் உலக சுகாதார மையமே கோவிட் சிகிச்சைக்கு எந்த விதமான பாரம்பரிய மருத்துவ முறைக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்று விளக்கமளித்தது.

அத்தோடு இந்திய மருத்துவ சங்கமும் கொரோனில் ஒரு நிரூபிக்கப்படாத அறிவியல்-நிரூபணம் அற்ற மருந்து, இது நாட்டிற்கு அவமானகரமானது என காட்டமாக தெரிவித்திருந்தது. இதனையொட்டி ராம்தேவ் இந்திய மருத்துவர்களை அவமதித்ததும் அதற்கு  இந்திய மருத்துவ சங்கத்தின் எதிர்வினையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம் [10].

அறிவியலாளர்களுக்கு நெருக்கடி:

தனிப்பட்ட மதம் சார்ந்த நம்பிக்கைகளை “விஞ்ஞான ரீதியில் நிறுவ” இந்திய அரசின் அறிவியல் அமைப்புகள் நிதி வழங்குவதும், தவறான கருத்தாக்கத்திற்கான ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவிப்பது அதிகமாக நடந்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான Department of Atomic Energyக்கு கீழ் இயங்கும் Tata Institute of Fundamental Research, Mumbaiயின் ஊழியர்கள், முதுமுனைவர் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 2019 பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் 50 சதவீகிதமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது [11].

நிதி நெருக்கடி மட்டுமன்றி முறையான ஆராய்ச்சிக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் அங்கீகாரம் புறக்கணிக்கப்படுவது நடந்து வருகின்றது.

மிகச்சமீபமாக இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு இதுவரை DST, DBT, CSIR உள்ளிட்ட ஏழு அறிவியல் அமைப்புககளின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுக்கும் நூற்றுக்கணக்கான விருதுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை குறைப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

உதாரணமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST) இதுவரை கொடுத்துவந்த 207 விருதுகள் நீக்கப்பட்டு நான்கே நான்கு விருதுகள் மட்டும் கொடுக்கப்படும் என்று அந்த முன்வரைவு அறிவித்திருந்தது. மேலும் பெண் விஞ்ஞானிகளுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்டு வந்த 4 விருதுகளில் மூன்று விருதுகள் ரத்து செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் பசு அரசியல், மத குருக்களின் தலையீடு, போலி அறிவியல் ஊக்குவிப்பு இன்னொருபுறம் அறிவியலார்களுக்கு செவி சாய்க்காமை மற்றும் அவர்களுக்கான நிதி மற்றும் அங்கீகாரம் பற்றாக்குறை என்று இன்றைய ஒன்றிய அரசு நாட்டின் அறிவியல் கட்டுமானத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அச்சுறுத்துவதாக உள்ளது.

உலக அறிவியல் அரங்கில் இந்தியா ஒரு மறுக்க முடியாத சக்தியாக உருவெடுக்க வேண்டிய வேலையில் போலி, மத அறிவியலில் சிக்குண்டு இருப்பது வருத்தமே.

நிதிப்பற்றாக்குறையால் பிரதான விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும் போது, தவறான கருத்தாக்க ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி செய்வது, தனிப்பட்ட மத, அரசியல் நம்பிக்கைகளை அறிவியல்ரீதியாக நிறுவுவதற்கு அரசு அறிவியல் கட்டமைப்புகளைக்கொண்டே நிதியுதவி செய்வது நாட்டின் அறிவியல் கட்டுமானத்தை உடைக்கும் முயற்சி அன்றி வேறில்லை. இந்தியாவின் மனிதவளத்தை மனதில் கொண்டு இனி வரும் ஆண்டுகளில் சரியான வழிநடத்தலில் நமது நாடு மிகப்பெரிய அறிவியல் நாடாக வளர்ச்சியடையும் என்று நம்பிக்கை கொள்வோமாக.

 • முனைவர்.தேவி (Genetics)

Reference:

 1. https://thewire.in/science/panchgavya-svarop-iit-csir-cow-urine
 2. https://www.thehindu.com/news/national/lack-of-funds-from-centre-stalls-research-in-cow-derivatives/article28982768.ece?homepage=true
 3. https://www.sciencedirect.com/science/article/pii/S0975947617304977
 4. https://www.sciencedirect.com/science/article/pii/S0975947621001947
 5. https://dst.gov.in/sites/default/files/SUTRA-%20PIC%20Format.pdf
 6. https://indianexpress.com/article/india/research-plan-on-indigenous-cows-scientists-urge-govt-to-withdraw-programme-call-it-unscientific-6277539/
 7. https://qz.com/india/1050040/more-funds-less-cow-dung-angry-indian-scientists-message-to-the-modi-government
 8. http://ctri.nic.in/Clinicaltrials/showallp.php?mid1=51219&EncHid=&userName=Gayatri%20Mantra
 9. https://www.thehindu.com/news/national/science-ministry-funds-trial-on-effect-of-gayatri-mantra-in-treating-covid-19/article34111676.ece
 10. https://youturn.in/articles/baba-ramdev-allopathic-medicine.html
 11. https://www.hindustantimes.com/india-news/tifr-gives-half-salary-to-staff-citing-fund-crunch-pays-remaining-amount-after-news-goes-viral/story-k62t6FZEtBa9xt1nm4LcHN.html
 12. https://timesofindia.indiatimes.com/india/govt-to-phase-out-100-awards-several-fellowships-in-science/articleshow/94466088.cms
Please complete the required fields.
Back to top button
loader