This article is from Aug 17, 2020

பாஜகவின் வன்முறை பேச்சுக்கு ஃபேஸ்புக் ஆதரவாக இருப்பதாக வெளியான வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கட்டுரை !

இந்தியாவில் மிகப்பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் அரசியல் செய்யும் முக்கிய இடமாக மாறியதை கடந்த சில ஆண்டுகளாவே பார்த்து வருகிறோம். குறிப்பாக, வன்முறை தூண்டும் விதத்தில், வெறுப்புணர்வு மற்றும் வதந்திகள் தொடர்ந்து பரப்பப்படுவது கண்முன்னே நிகழ்கிறது. வதந்திகள், வன்முறை பேச்சுக்கள் பரவும் வேகத்திற்கு உண்மை தகவல்கள் மக்களிடம் அவ்வளவு வேகமாக போய் சேர்வதில்லை.

இந்தியாவில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களை தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்காவும், கருத்துக்களை விதைக்கவும் பயன்படுத்தும் கட்சியில் முதன்மையானதாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி என அனைவரும் அறிந்ததே. பொதுதளமாக பார்க்கப்பட்ட ஃபேஸ்புக் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கட்டுரை :

”  Facebook’s Hate-Speech Rules Collide With Indian Politics ” என்கிற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆய்வு கட்டுரையை 2020 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிட்டு இருந்தது. உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக் பாஜவிற்கு ஆதரவாக வளைந்து கொடுப்பதாகவும், கட்சியை சேர்ந்தவர்களின் வெறுக்கத்தக்க பேச்சைப் புறக்கணிக்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இருக்கிறது. இதற்கு காரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரியான அங்கி தாஸ் என்பவர் தலையீடு இருப்பதாக ஊழியர்களின் பேட்டி உடன் வெளியாகி இருக்கிறது.

உதாரணமாக, தெலங்கானாவின் பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், இந்தியாவில் குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை சுட்டுக் கொல்ல வேண்டும், முஸ்லீம்களை துரோகிகள் என அழைக்க வேண்டும், அவர்களின் மசூதிகள் இடுக்கப்பட வேண்டும் என ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் பொதுமேடைகளில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை, வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளிப்படுத்தி வந்தவர். இருப்பினும், டி.ராஜா சிங் உடைய மோசமான பேச்சுக்களின் பதிவுகள் மற்றும் முகநூல் கணக்கை ஃபேஸ்புக் நீக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் முகநூல் பக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

பாஜகவின் எம்எல்ஏ டி.ராஜா சசிங் ” ஆபத்தான நபர் ” என்று ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்தப்பட்டால் மோசமான அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அங்கி தாஸ் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதுமட்டுமின்றி பிற காரணங்களும் இருப்பதாக ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆன்டி ஸ்ட்டோன் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இருப்பினும், பாஜக எம்எல்ஏவின் ஃபேஸ்புக் பக்கத்தை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னலுக்கு தெரிவித்து உள்ளார்.

” இந்தியாவின் இனவாத வன்முறை மற்றும் சமீபத்திய மத பதற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ​​அவருடைய (பாஜக எம்எல்ஏ) பேச்சுக்கள் நிஜ உலக வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும், உலகெங்கிலும் உள்ள நிறுவனத்தின் தளங்களில் இருந்து அவரை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். முன்னாள் ஊழியர்களின் தகவலின்படி, அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளரான அலெக்ஸ் ஜோன்ஸ், நேஷன் ஆஃப் இஸ்லாம் தலைவர் லூயிஸ் ஃபாரகான் மற்றும் ஏராளமான வெள்ளை மேலாதிக்க அமைப்புகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக ” கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி சில உதாரணங்கள் குறிப்பிடப்ப்பட்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமானது, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த்குமார் ஹெக்டே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா ஜிகாத் ” என கொரோனா சதித்திட்டம் என்றும், முஸ்லீம்களே நாட்டில் கொரோனா வைரஸை பரப்புவதாக குற்றம் சாட்டிய பதிவு குறித்தும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளது.

இப்படி கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அங்கி தாஸ் தங்களுக்கு பதில் அளிக்கவில்லை என வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் தெரிவித்து இருக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தியின் கட்டுரையால் இந்தியாவில் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன.

ஏற்கனவே, ஃபேஸ்புக் முழுவதும் வதந்திகள் சூழ்ந்து இருக்கையில், வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுக்கள், பதிவுகளை அரசியல் காரணங்களால் ஃபேஸ்புக் நீக்காமல், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்ந்தால், ஃபேஸ்புக் தளம் வெறும் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்களை பரப்பவும் இடமாக மட்டும் அமைந்துவிடும்.

Link : 

Facebook’s Hate-Speech Rules Collide With Indian Politics

Report on Facebook’s leniency to BJP members’ communal posts causes row

Please complete the required fields.




Back to top button
loader