வைரலாகும் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்ட சம்பவங்கள் !

பிப்ரவரி 9-ம் தேதி இரவு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டை வீசியது “கருக்கா வினோத்” என கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அதை கண்டித்து பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என விசாரணையில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதற்கு முன்பு 2015-ல் தி.நகர் டாஸ்மாக் கடையிலும், 2017-ல் தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் மேல் பல வழக்குகளைக் கொண்ட கருக்கா வினோத்திற்கு யாரேனும் பணத்தைக் கொடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீச சொல்லி இருக்கலாமோ என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பத்தை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக கூறி வருகிறது.

பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட செய்தி வெளியாகத் தொடங்கிய போதே, கடந்த காலங்களில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்களே வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது, கார், பைக்கை கொளுத்திய சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.

பாஜக நிர்வாகிகள் :  

2013-ல் கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாஜகவின் வேலாண்டிபாளையம் மண்டல பகுதி முன்னாள் செயலர் ராமநாதன் கட்சியில் செல்வாக்கை பெற தன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

2013-ல் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பாஜக கிளை தலைவர் பிரவீன்குமார் தனது வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகப் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், ” பிரவீன்குமார் கட்சியில் விளம்பரத்திற்காகவும், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும் நண்பருடன் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்தது.

2017-ல் திருவள்ளூர் மாவட்ட பாஜகவின் எஸ்சிஎஸ்டி பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த பரமானந்தம் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாக புகார் அளித்தார். ஆனால், கோவில் சொத்து பிரச்சனையில் ஏற்பட்ட தகராறை திசை திருப்ப தன்னுடைய வீட்டிலேயே அவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார்.

இந்து மக்கள் கட்சி : 

2020-ல் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பகவான் நந்து என்பவர் கட்சியில் பதவி, பிரபலம் ஆவதற்கு ஆள் செட் செய்து தன்னை வெட்ட செய்துள்ளார், பழியை பிற மதத்தினர் மீது போட்டு விடலாம் என அவர் திட்டமிட்டது போலீசார் விசாரணையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க : கட்சிப் பதவிக்காக தன்னைத் தானே வெட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் !

2018-ல் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக இருந்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார், ஒரு கும்பல் தனது காரை வழிமறித்து பெட்ரோல் குண்டை வீசியதாகவும், அதனால் கார் தீப்பற்றி எரிந்ததாகவும், தன்னை கொல்ல முயன்றதாகவும் புகார் அளித்தார். ஆனால், விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளிகுமார் நாடகமாடி இருக்கிறார் என போலீஸ் விசாரணையில் வெளியாகியது.

இந்து முன்னணி : 

2020-ல் திருச்சி மாவட்டம் மணிகண்டன் அருகே அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் இந்து முன்னணியில் இணைந்த பிறகு கட்சியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும், பைக் லோனை கட்டாமல் ஏமாற்றவும் தனது பைக்கை நண்பர்களுடன் சேர்ந்து கொளுத்தி விட்டு மர்மநபர்கள் கொளுத்தியதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இப்படி கடந்த காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை குறிப்பிட்டு சமூகவலைத்தளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

Please complete the required fields.
Back to top button
loader