This article is from Oct 05, 2020

ஹத்ராஸ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர், வலதுசாரி அமைப்புகள், ஆதிக்க சாதியினர் ஒன்றுகூடினர் !

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கப்பட்டதாக கூறப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தால் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹத்ராஸ் பெண் உயிரிழந்த உடன் உடலை அவசரமாக நள்ளிரவில் போலீசார் தகனம் செய்தது முதல் தற்போது வரை பெரும் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென போராட்டங்களும், நாடு முழுவதிலும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் 4 பேருக்கு ஆதரவாகவும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நிகழ்ந்து வருகின்றன.

ஹத்ராஸ் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக அணிவகுத்து வந்தவர்களில் உள்ளூர் பாஜக தலைவர் மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தால், கர்னி சேனா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்கள், ராஷ்டிரிய சவர்ணா சங்கதான், சத்திரிய மகாசபா போன்ற ஆதிக்கச் சாதி அமைப்புகள் இடம்பெற்றதாக தி குய்ண்ட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

அக்டோபர் 4-ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ ராஜ்வீர் சிங் பெஹெல்வான் வீட்டிற்கு முன்பாக நடைபெற்ற சந்திப்பில் நூற்றுக்கணக்கான பேர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கலந்து கொண்டனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜ்வீர் சிங் மகன், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சந்திப்பிற்கு வந்துள்ளனர் என கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

நூற்றுக்கணக்கான பேர் மட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குடும்பமும் முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் இருந்துள்ளனர். ” குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் நீதி வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவை வரவேற்கிறேன். இனி உண்மை வெளியே வரும் ” என குற்றவாளிகளுக்கு ஆதரவாக ராஜ்வீர் சிங் பெஹெல்வான் பேசிய வீடியோ பரவி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பக்னா எனும் கிராமத்தில் பஞ்சாயத்து நடைபெற்ற பிறகு போராட்டத்தை துவங்கி உள்ளனர். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நன்மைக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்துவதாக பஞ்சாயத்து தரப்பில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாயத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், வழக்கு தொடர்பாக சார்பற்ற விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.

Links : 

BJP Leader, Right Wing Outfits Rally in Support of Hathras Accused

After Panchayat, Gathering of ‘Upper Castes’ in Support of Hathras Rape Accused Demands Unbiased Probe

Hathras gang-rape accused defended at meeting held at ex-BJP MLA’s residence

Please complete the required fields.




Back to top button
loader