This article is from Feb 28, 2020

வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பாஜக தலைவர்கள் !

டெல்லியில் பல நாட்களாக நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்கள் உருவாகி தலைநகரின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இக்கலவரத்தில் போலீஸ், போராட்டக்காரர்கள், பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வழிபாட்டு தலங்கள், கடைகள், வீடுகளை சேதப்படுத்தி உள்ளார்கள் என்பதை களத்தில் இருந்து வெளியான செய்திகளில் அறிய முடிகிறது.

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் மதவாதக் கலவரமாக உருவெடுத்தது. இந்த கலவரத்திற்கு முன்பும், பின்பும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், கோபத்தையும் தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்களையும், குறிப்பாக டெல்லி பாஜக தலைவர்களுடைய பேச்சை நீதிமன்றத்தில் ஒளிபரப்பி விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி மாற்றப்பட்டது விவகாரத்தையும் உள்ளடக்கிய தொகுப்பை காண்போம்.

கடந்த வாரம் டெல்லி பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஷ்ரா, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை டெல்லி போலீஸ் அப்புறப்படுத்தவில்லை என்றால், தானும் தன்னுடைய ஆதரவாளர்களும் விவகாரத்தை கையில் எடுத்து, ” ஆக வேண்டியதைச் செய்வோம் ” எனக் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், தனது ஆதரவாளர்கள் அடுத்த நாள் மெளஜ்பூர் பகுதியில் ஒன்றுக்கூடுமாறு ட்விட்டரில் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஜாஃப்ராபாத் மற்றும் மெளஜ்பூர் ஆகிய இரு பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்களும், சிஏஏ ஆதரவாளர்களும் எதிரெதிராக போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது ஒரு கட்டத்தில் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு கபில் மிஷ்ராவே காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

இதற்கு முன்பாக, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தக்கூர், சிஏஏ போராட்டக்காரர்களை சுட்டிக்காட்டி ” தேச துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள் ” எனக் கூறி இருந்தார்.

ஜனவரி 28-ம் தேதி மேற்கு டெல்லி பாஜக எம்பி பர்வேஷ் வர்மா அளித்த பேட்டியின் போது, ” அங்கு(ஷாகீன் பாக்) லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். டெல்லியின் மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்களின் சகோதரிகள், மகள்களை பலாத்காரம் செய்து கொலை செய்வார்கள் ” என பேசியது சர்ச்சைக்குரியதாக உருவெடுத்தது.

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்  ஹர்ஷ் மந்தர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதே மனுவில், அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஷ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள் என்றும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் போது பாஜக முன்னாள் எம்எல்ஏ கபில் மிஷ்ரா, மேற்கு டெல்லி பாஜக எம்பி பிரவேஷ் வர்மா, பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்எல்ஏ அபேய் வர்மா இடம்பெற்ற வீடியோ உள்ளிட்ட 4 வீடியோக்களை ஒளிபரப்பச் செய்தனர். இதையடுத்து, மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசிய பாஜகத் தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, 1984-ம் ஆண்டு டெல்லியில் நடந்தது போன்று மற்றொரு சம்பவம் மீண்டும் நடைபெற விடமாட்டோம் ” என்றும் தெரிவித்தார்.

இந்த உத்தரவு வெளியான ஒரே நாளில் நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைவர்களுக்கு எதிரான உத்தரவைப் பிறப்பித்ததற்காக ஒரே நாளில் நீதிபதி முரளிதர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

கடந்த 12-ம் தேதியே நீதிபதி முரளிதர் உள்ளிட்ட 3 நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்தது. அப்போழுதே நீதிபதி முரளிதர் பணி இடமாற்றத்திற்கான பரிந்துரைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிபதி முரளிதரை மட்டும் பணி இடமாற்றம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நீதிபதி முரளிதரை பணி இடமாற்றம் செய்தது சரியல்ல என்று டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

டெல்லி பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை போன்று தமிழக பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அவர்களும் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டெல்லி போல் வண்ணாரப்பேட்டையிலும் கலவரம் வரும். ஆயுதங்கள் வருவதற்கு முன்பாக தமிழக அரசு அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.

பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் , ” கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது போன்று வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணராப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும், செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் போராடுபவர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் கருத்துக்கள் பதிவு செய்வது எதிர்வினையை அளித்து அமைதியை நிலைகுலையச் செய்யும். வெறுப்புணர்வை, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய டெல்லி பாஜகத் தலைவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே மக்களின் கேள்வி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பது போன்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பதிவாகி வருகிறது.

Proof links : 

Delhi violence: Four video clips that court made cops watch

“Goli Maaro” Slogans At Union Minister’s Election Rally In Delhi

H.Raja tweet 

Kapil mishra hate speech

Please complete the required fields.




Back to top button
loader