மைனாரிட்டி அரசான பாஜக! காப்பாற்றப்பட்டதா அரசியலமைப்புச் சட்டம்?

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3ஆவது முறையாக ஜூன் 9 அன்று பதவியேற்றார். 293 இடங்களை வென்ற ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ ஆட்சியமைக்கிறது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 37 கட்சிகள் ஓரணியாக இணைந்து ‘இந்தியா’ கூட்டணி எனப் போட்டியிட்டன. இந்தியா கூட்டணி 234 இடங்களை மட்டுமே வென்றபோதிலும், இது தங்களுக்கு பெரும் வெற்றி எனக் கருதுகின்றனர். இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ், திமுக மட்டுமல்லாது, பாஜகவின் ஹிந்துத்துவா கொள்கையை எதிர்க்கும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பாஜகவின் வீழ்ச்சியாகவே கருதுகின்றனர். அத்தோடு இத்தேர்தல் மூலம் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதே மோடிதான் பிரதமராக தொடரப்போகிறார். 240 இடங்களை வென்று, இத்தேர்தலில் அதிக இடங்களை வென்ற ஒற்றைக்கட்சியாக திகழ்கிறது பாஜக. இருப்பினும் இது எவ்வகையில் பாஜகவின் வீழ்ச்சி? அத்தோடு இதன்மூலம் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட்டதாக ஏன் சொல்லப்படுகிறது? இவ்விரு கேள்விகளுக்கும் இக்கட்டுரையில் விடை காணலாம்.

தனிப்பெரும்பான்மையற்ற மைனாரிட்டி அரசு

2014ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு முறையே 282 மற்றும் 303 இடங்களை கைப்பற்றிய பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஆனால் இந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 240 இடங்களை பாஜக வென்றுள்ள போதிலும் கடந்த இருமுறை நடந்ததுபோல் அல்லாமல் இம்முறை மோடி தலைமையிலான பாஜக மைனாரிட்டி அரசாக ஆட்சியமைக்கிறது.

ஏனெனில், 2024ஆம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க 272 இடங்களை அக்கட்சி கைப்பற்றியிருக்க வேண்டும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குகொண்ட தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் தற்போது ஆட்சியமைக்கிறது பாஜக.

ஆட்சியமைக்கும்பட்சத்திலும், தனிக்கட்சியாக பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கை இத்தேர்தலில் குறைந்திருப்பது வீழ்ச்சியாகக் கருதப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஒருவேளை நாளையே அரசியல்காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சியும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வழங்கிவரும் தங்களது ஆதரவை திரும்பப்பெரும்பட்சத்தில், மைனாரிட்டி அரசான பாஜகவின் ஆட்சி கவிழ்ந்துவிடும். அதாவது, மோடியும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்துவிடுவார்கள். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

விவாதங்களை விழுங்கிய பாஜக, ஆனால் இனி…

இதுபோன்ற பெரிய சிக்கல் மட்டுமல்ல, தினசரி அரசு நடவடிக்கைகளிலேயே பல சிக்கல்களை பாஜக சந்திக்கவேண்டியிருக்கும். முக்கியமாக கடந்த ஆட்சியில், எவ்வித விவாதங்களும் இன்றி பல மசோதாக்களை தாக்கல் செய்து அவற்றை சட்டங்களாக அமல்படுத்தினர். பாஜகவின் இச்செயல் பெரிதும் கண்டனங்களுக்கு உள்ளானது. 303 இடங்களை தனியே வென்று பெரும்பலத்துடன் இருந்ததால் விவாதங்களின்றி நினைத்தவண்ணம் சட்டத்தை அமல்படுத்தினர்.

2021ஆம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின்போது மட்டும் 20 மசோதாக்கள் எவ்வித விவாதங்களும் இன்றி சட்டமாக நிறைவேறின. கடந்த ஆட்சியில் 221 மசோதாக்கள் அமலுக்கு வந்தன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 33% மசோதாக்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே விவாதிக்கப்பட்டது. மசோதாக்களை தாக்கல் செய்கையில் விவாதம் அவசியம் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

சரத்து 107 இவ்வாறு கூறுகிறது: “ஒரு சட்டமுன்வடிவை இரு அவைகளும் ஏற்றுக்கொண்டிருந்தாலன்றி, அது இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.” [Article 107 of Constitution of India,1949 : A bill shall not be deemed to have been passed by the Houses of Parliament unless it has been agreed to by both Houses,..,]. மசோதாக்களை நிறைவேற்றும்போது கட்டாயமாக விவாதம் நடந்ததாக வேண்டும் என்பதாலேயே அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியோர் மேற்கண்ட சரத்தில் “agreed” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், இவற்றை நடைமுறையில் பின்பற்றாத பாஜக பல மசோதாக்களை குறைவான விவாத நேரத்துடனும், மேலும் பல மசோதாக்களை எவ்வித விவாதங்கள் இன்றியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றியது.

தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளதால், எந்தவொரு மசோதாவையும் விவாதங்கள் இன்றி நிறைவேற்றுவது நடைமுறையில் நடக்காத காரியம். எனவே, இனி ஒவ்வொரு மசோதாவும் முறையாக விவாதிக்கப்பட்ட பின்னரே நிறைவேற்றமுடியும்.

இதுமட்டுமல்லாது, தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் இருந்து விலகவில்லை என்றாலும், நாடாளுமன்ற கீழ் அவையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லையெனில் அச்சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் முறை.

சாதாரண சட்டங்களை நிறைவேற்றுவதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது. சாதாரண பெரும்பான்மை எனில், எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற கீழவையில் (லோக் சபா) ஒரு மசோதா நிறைவேற்றப்படுகிறது என்றால், அவைக்கு வந்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அம்மசோதாவுக்கு சாதகமாக வாக்களித்திருக்கவேண்டும், அப்போதுதான் அச்சட்டம் நிறைவேறும். நாடாளுமன்ற மேலவையிலும் (ராஜ்ய சபா) இப்படியாக சாதாரண பெரும்பான்மையை ஒரு மசோதா பெறவேண்டும்.

சாதாரண சட்டத்துக்கு இவ்வாறாக சாதாரண பெரும்பான்மை போதுமானது. இதுவே அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒரு சட்டம் நிறைவேற்றவேண்டுமெனில், அது அந்தந்த குறிப்பிட்ட சரத்துகளை பொறுத்து மூன்று விதமாக வேறுபடுகிறது.

i) குறைவான முக்கியத்துவம் உடைய, சரத்துகளாக இருப்பின் அவற்றை திருத்தம் செய்வதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது.

எடுத்துக்காட்டாக : புதிய மாநிலத்தை உருவாக்குதல் (சரத்து 2), குடியுரிமை குறித்தான சட்டதிருத்தம் (சரத்து 11), அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய அதிகாரிகளுக்கான சம்பளம் குறித்த சரத்துகள் [சரத்து 59(3), 75(6), 97, 125(2), 148(3), 158(3), 221(2)] , உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யும் சரத்து [சரத்து 124(1)]

ii) முக்கியத்துவம் வாய்ந்த சரத்துகள் ஆனால் கூட்டாட்சி தொடர்பான சரத்துகள் அல்லாதவை. இவ்வாறான சரத்துகளை திருத்தம் செய்வதற்கு இரு அவைகளிலும் வந்திருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். சரத்து 368 இவ்வாறு திருத்தம் செய்யும் முறையை விவரிக்கிறது. அதாவது, நாடாளுமன்ற கீழவையில் மொத்தம் இருக்கும் 543 எம்.பி.களில், 450 எம்.பி.க்கள் அவைக்கு வந்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது, 300 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தால் இத்தகைய சரத்துகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

iii) கூட்டாட்சி தத்துவம் தொடர்பான சரத்துகளை திருத்தம் செய்யவேண்டுமெனில், மேற்சொன்னது போல மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. அதோடு இருக்கின்ற மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்களின் சட்டசபையில் அத்திருத்தத்தை தீர்மானம் நிறைவேற்றி ஆதரிக்கவேண்டும். அதாவது, மொத்தம் இருக்கும் 28 மாநிலங்களில், 15 மாநிலங்களின் ஆதரவு தேவைப்படும்.

எடுத்துக்காட்டாக : குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சரத்துகள் [சரத்து 54,55], ஒன்றியம் மற்றும் மாநில ஆட்சி அதிகாரத்தின் எல்லைகளை வகுக்கும் சரத்துகள் [சரத்து 73,162], ஒன்றிய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றில் செய்யப்படும் திருத்தம் [ஏழாவது அட்டவணை], அரசியலமைப்பை திருத்தும் முறை குறித்தான சரத்து [சரத்து 368].

“காப்பாற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்!”

இவ்வாறாக மேற்சொன்ன மூன்று முறைகளில்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதில், அரசியலமைப்புச்  சட்டத்தின் முக்கியமான சரத்துகளில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை, அதோடு மேலும் சிலவற்றுக்கு 15 மாநில சட்டசபைகளின் ஆதரவு தேவை என்பதையும் பார்த்தோம்.

தற்போது பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அல்லது கூட்டணியாக 18 மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. அத்தோடு கடந்த ஒன்றிய  ஆட்சியில் பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 இடங்கள் வைத்திருந்தது. எனவே, அரசியலமைப்பில் எப்படிப்பட்ட திருத்தத்தையும் செய்ய முடியும் என்ற அளவில் பெரும் பலத்துடன் இருந்தது பாஜக. ஆனால், தற்போது கடந்த தேர்தலைக் காட்டிலும் 63 இடங்கள் தோற்றிருப்பதன் மூலமாக இரண்டில் ஒரு பங்கு பெரும்பான்மையைக்கூட பெறாமல் இருக்கிறது பாஜக.

எனவே, இனி சாதாரண சரத்துகளுக்கு தேவைப்படும் சாதாரண பெரும்பான்மைக்கு கூட கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்க வேண்டுமென்பதால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது பாஜகவுக்கு எட்டாக்கனியாகவே அமையும். கடந்த முறை பாஜக தன்னுடைய தனிப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சரத்து 370-ஐ நீக்கினர். மேலும், முன்னேறிய வகுப்பில் நலிவடைந்ததோருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்காக சரத்து 15 மற்றும் 16 ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தி அதற்கு வழிவகை செய்தனர்.

இவ்விரு அரசியலமைப்புச்சட்ட திருத்தமும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டாலும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்ததாகவும், இட ஒதுக்கீடு தரும் சமூக நீதியை சீர்குலைத்ததாகவும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் பெற்றது. இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையிலான  இத்தகைய மாற்றங்களை பாஜக கொண்டுவருவது முடியாத காரியம்.

ஆட்சியமைத்திருக்கும்போதிலும் மைனாரிட்டி அரசாக பாஜக இருப்பதால், அவர்கள் அரசியலமைப்பில் எவ்வித பெரிய மாற்றங்களையும் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சொல்கின்றன. 240 இடங்களை வென்றுள்ளபோதிலும் இது பாஜகவுக்கு ‘தோல்விகரமான வெற்றி’ என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

உதவிய நூல்களும் செய்திகளும்:

  1. The Constitution of India, 1949
  2. M.P.Jain, Indian Constitutional Law, 8th ed. (2018)
  3. J.N.Pandey, Constitutional Law of India, 59th ed. (2022)
  4. https://indianexpress.com/article/india/half-of-the-bills-passed-debated-for-less-than-2-hrs-each-report-9079717/
  5. https://m.thewire.in/article/government/bills-passed-no-discussion-receiple-bad-laws
  6. https://www.thehindu.com/news/national/two-key-health-bills-passed-without-debate-in-lok-sabha/article67131626.ece
  7. https://www.newindianexpress.com/nation/2021/Aug/05/20-bills-passed-in-monsoon-session-without-debate-2340403.html
Please complete the required fields.




Back to top button
loader